சமீபத்திய செய்தி

 கென்யாவின் நைரோபி நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) இரவு நைரோபியிலுள்ள ஜொமோ கென்யாட்டா (Jomo Kenyatta) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

கென்ய நாட்டின் விசேட பிரதிநிதிக் குழுவினரால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழாமினருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கென்ய நாட்டு வெளிநாட்டலுவல்கள் பிரதான நிர்வாக செயலாளர் அபாபு நம்வம்பா (Ababu Namwamba), நீர் வழங்கல் மற்றும் சுகாதார அலுவல்கள் தொடர்பிலான அமைச்சரும் அமைச்சரவை செயலாளருமான சைமன் கிப்றோனோ செலுகி (Simon Kiprono Chelugui) ஆகியோரும் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா உள்ளிட்ட குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அவர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா விடுதிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் அதிகாரிகள் கென்ய நாட்டு கலாசார முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
கென்ய நாட்டு ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா (Uhuru Kenyatta) அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையிலும் சுற்றாடலை பாதுகாப்பதற்கு பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்ட தலைவர் என்ற வகையிலும் ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றுதலானது மாநாட்டின் சிறப்பம்சமாக அமையும் என கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
“சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் நாளை மதியம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விசேட உரையாற்றவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

 கென்யாவின் நைரோபி நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) முற்பகல் கென்யாவிற்கு பயணமானார்.

கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் விசேட அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அவர்கள் இந்த சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
“சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்” எனும் தொனிப்பொருளில் மார்ச் 11ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வு மார்ச் 15ஆம் திகதி வரை நைரோபி நகரில் நடைபெறவுள்ளது.
அதன் உயர்மட்ட பிரதான கூட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதோடு, நாளை நண்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மாநாட்டில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிலையான உணவுக் கட்டமைப்பு, உணவு பாதுகாப்பு, உயிர் பல்வகைமை அழிவடைதலை தடுத்தல், வறுமை மற்றும் இயற்கை வளங்களின் முகாமைத்துவத்துடன் தொடர்பான சுற்றாடல் சவால்கள், வளங்களின் வினைத்திறனான பயன்பாடு, சக்தி வளங்கள், இரசாயன பதார்த்தங்கள், கழிவு முகாமைத்துவத்திற்கான வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் துரித தொழிநுட்ப மாற்றங்களுக்கு உள்ளாகும் பருவத்தில் புத்தாக்கப் பேண்தகு வர்த்தக அபிவிருத்தி தொடர்பில் இம்முறை மாநாட்டின்போது கவனம் செலுத்தப்படும்.
கென்யாவிற்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்கள், கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவையும் சந்திக்கவுள்ளார்.
1970ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக்கும் கென்யாவிற்குமிடையில் நட்பு ரீதியான தொடர்புகளே இதுவரை காணப்படுகின்றன. பொதுநலவாய அமைப்பு மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைப்பு (IORA) ஆகியவற்றில் இவ்விரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கென்யா இலங்கையின் விசேட வர்த்தக பங்காளராக காணப்படாவிடினும் பரஸ்பர அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை காணப்படாத பொருளாதார தொடர்புகள் தொடர்பில் இரு நாடுகளும் தற்போது ஆர்வம் செலுத்தி வருகின்றன.
ஆடை உற்பத்தி, நீர் மின் உற்பத்தி, தோட்டக்கலை மற்றும் மோட்டார் வாகன பயிற்சி துறைகளில் தற்போது இலங்கையர்கள் கென்யாவில் பணியாற்றி வருகின்றனர்.

 மாத்தறை மாவட்ட சாரணிய சங்கத்திற்கு நூறு வருடங்கள் நிறைவுபெறுவதை முன்னிட்டு இடம்பெறும் நூற்றாண்டு ஜம்போரி நிகழ்வின் உத்தியோகபூர்வ இலட்சினையை வெளியிடும் நிகழ்வும் அவ் இலட்சினையை இலங்கையின் பிரதான சாரணரான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கும் நிகழ்வும் இன்று (12) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

மாத்தறை மாவட்ட சாரணிய சங்கத்தின் ஆலோசகரும் பிரதியமைச்சருமான புத்திக பத்திரணவினால் ஜனாதிபதி அவர்களுக்கு இலட்சினை அணிவிக்கப்பட்டது.
நூற்றாண்டு விழா ஜம்போரி நிகழ்வு 2019.05.01 முதல் 2019.05.05 வரை இடம்பெறவுள்ளதுடன், அதனை முன்னிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இணையத்தளமும் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாத்தறை மாவட்ட சாரணர் ஆணையாளர் வீ.ஜீ.இந்திக பிரசன்ன, உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர் சஞ்சய குமார, நூற்றாண்டு விழா ஜம்போரி நிகழ்வின் பிரதித்தலைவர் பத்மகுமார டயஸ் சமரவீர, செயலாளர் திருந்த துஷாக்க லியனகுணவர்த்தன ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக நியமணம் பெற்றுள்ள திரு. சுனில் சமரவீர அவர்கள் இன்றய தினம் (08) முற்பகல் வெகுசன ஊடக அமைச்சில் கடமையினை ஆரம்பித்தார்.

இச்சந்தர்ப்பத்திற்கு வெகுசன ஊடக அமைச்சின் மேலதிகச் செயலாளர் (நிருவாகம்) திருமதி. ரமணி குணவர்தன மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. நாலக களுவெவ உற்பட அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 போதைப்பொருட்களுக்கு எதிராக முழு நாடும் உறுதிமொழி வழங்கும் “சித்திரை உறுதிமொழி” ஏப்ரல் 03ஆம் திகதி

இதனை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுக்கு கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு
இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகள் ஏப்ரல் முதலாம் திகதி கட்டுநாயக்கவில்
போதைப்பொருட்களை கண்டறிவதற்காக பயன்படுத்தும் நவீன தொழிநுட்ப உபகரணங்கள் விரைவில் இலங்கையில்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்துவதற்கும் நாட்டின் சிறுவர்களின் எதிர்காலத்திற்காகவும் போதைப்பொருள் பாவனையிலிருந்து விலகியிருப்பதற்கு அனைத்து பிரஜைகளும் தமது மனச்சாட்சியின்படி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இதனை நினைவுபடுத்தி போதைப்பொருள் பாவனையிலிருந்து விலகியிருப்பதாக முழுநாடும் ஒன்றாக மேற்கொள்ளும் உறுதிமொழி வழங்கும் நிகழ்வு ஏப்ரல் 03ஆம் திகதி முற்பகல் 08.00 மணிக்கு “சித்திரை உறுதிமொழி” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலைக்கூட்டத்தின்போது அனைத்து பாடசாலை மாணவர்களையும் இதில் இணைத்துக்கொள்ள உள்ளதுடன், பல்கலைக்கழக மாணவர்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் இதற்காக திறந்த அழைப்பொன்றை விடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஏப்ரல் 03ஆம் திகதி காலை 08.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு வருகைதந்து அந்த உறுதிமொழி வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
06ம் திகதி முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இதுவரையில் கைப்பற்றப்பட்டுள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் ஏப்ரல் முதலாம் திகதி நீதிபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் கட்டுநாயக்கவில் வைத்து அழிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இதேநேரம் சட்டவிரோத போதைப்பொருட்களை கண்டறிவதற்காக பயன்படுத்தும் நவீன தொழிநுட்ப உபகரணங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்காக தற்போது கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில மாதங்களில் அவ் உபகரணங்களை நாட்டுக்கு கொண்டு வர முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், அத்தீர்மானம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எந்தவொருவரும் போதைப்பொருட்களினால் நாட்டுக்கு ஏற்படும் அழிவை தவிர்ப்பதற்கு உதவுவதில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், யார் எதிர்த்தபோதும் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக அந்த பொறுப்பை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டார்.

 இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட கால பகுதிக்கு 60 மில்லியன்(1.2பில்லியன் ரூபா) குரோன்களை வழங்குவதற்கு நோர்வே இணக்கம் தெரிவித்துள்ளது

இலங்கை வந்துள்ள நோர்வேயின் இராஜாங்க செயலாளர் மேரியன் ஹேகன் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் கொழும்பில் நேற்று நடந்த சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.நோர்வே பங்களிப்பினூடாக இந்த பிரதேசத்தில் செயலாற்றும் அதிகார அமைப்புகளுக்கு முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல உதவியாக அமைந்திருக்கும். நோர்வே வெளிவிவகார அமைச்சர் எரிக்சென் சொரிட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.
நல்லெண்ண செயற்பாடுகளில் கண்ணிவெடி அகற்றல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். தேசிய மற்றும் சர்வதேச நிறுவனத்தின் பங்களிப்புடன் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை இலங்கையில் முன்னெடுக்க உள்ளது. இதனூடாக யுத்தக் காலப் பகுதியில் பலவந்தமாக தமது பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் தமது பிரதேசங்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக திரும்ப கூடிய வாய்ப்பு வழங்கப்படும் என எரிக்சென் சொரிட் தெரிவித்துள்ளார்.

 வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டம்

*அரச ஊழியர்களுக்கு ரூ.3500 கொடுப்பனவு
*வடக்கு அபிவிருத்திக்கு கூடுதல் நிதி
நாளை முதல் 12 வரை விவாதம்


2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு - செலவு, திட்டமான இந்த வரவு - செலவுத் திட்டம், சாதாரண மக்களைப் பலப்படுத்தவும் வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் அனைத்து மக்களினதும் அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள் ஆகியவற்றை நோக்காகக் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் 3500 ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்கவும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 1500 ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த வருடம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றத்தின் காரணமாக வரவு செலவுத்திட்டத்திற்குப் பதில் இடைக்கால கணக்கறிக்ைக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில், அபிவிருத்தி மற்றும் முதலீடுகளை மேம்படுத்தும் செயற்திட்டங்களுடன் வடக்கு அபிவிருத்திக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கை அபிவிருத்தி செய்வதில் புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் உதவ முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்ட மூலம் என்டபிரைசஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், வர்த்தகம் மற்றும் மனித வளத்தை பலப்படுத்துவதற்கு தேவையான வேலைத் திட்டங்களை விரிவுபடுத்துவதாகவும் அமையவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
வறுமையிலுள்ளோரை பலப்படுத்தும் வேலைத் திட்டத்தை மேலும் முன்னேற்றகரமான வகையில் முன்னெடுத்துச் செல்லவும் அனைவருக்கும் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க 2019 வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச செலவினம் 4550 பில்லியனாக உள்ளதுடன், அரச வருமானம் 2400 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இம்முறை வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை தேசிய உற்பத்தியில் 4.5 வீதமாக உள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை 2020 ஆகும்போது தேசிய உற்பத்தியில் 3.5 வீதமாக குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் 2015ஆம் ஆண்டிலிருந்து அந்த இலக்கை நோக்கி கட்டம் கட்டமாக முன்னேறி வந்துள்ளதுடன், 2015ஆம் ஆண்டு 7.6 வீதமாக இருந்த வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை, 2018ஆம் ஆண்டு 5.3 வீதமாக குறைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் அதனை 4.4 வீதமாக மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கிணங்க 2020ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை எதிர்பார்க்கும் விதத்தில் தேசிய உற்பத்தியை 3.5 வீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐந்து தசாப்தங்களில் வரவு செலவுத் திட்டத்தில் ஆரம்ப நிலுவை முதற் தடவையாக கடந்த வருடம் மேலதிகமாக இருந்ததுடன் 2019ஆம் ஆண்டு அதனை மேலும் அதிகரித்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப நிலுவை அதிகரிப்பதனால் அரசாங்க வருமானத்தின் கடன்களைக் குறைத்துக்கொள்வதுடன் கடன் பெற்றுக்கொள்வதன் எல்லைகளை மட்டுப்படுத்திக்கொள்ளவும் முடியும்.
இதற்கிணங்க 2019ஆம் ஆண்டு கடன் சேவைகள் சம்பந்தமாக ஒதுக்கப்பட்டுள்ள 2200 பில்லியனுக்கு ஒத்ததாக கடன்களைப் பெற்றுக்கொள்ளும் வீதம் 2079 பில்லியனாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை 06ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பிற்பகலில் இரண்டாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாவது வாசிப்பு குழு நிலை விவாதம் இம்மாதம் 13ஆம் திகதி முதல் ஏப்ரல் 05ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதுடன் அதனையடுத்து ஏப்ரல் 05ஆம் திகதி பிற்பகல் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறுமெனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டம் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் மொத்த செலவினம் 2,31,200 கோடி ரூபாவாகவுள்ளதுடன் செலவின மதிப்பீட்டு பிரேரணை கடந்த மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் தயாரிப்பு பணிகளில் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய மனோ தித்தவெல்ல மற்றும் டெஸ்ஹால் டி மெல் ஆகியோருக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர நன்றி தெரிவித்துள்ளார்.

 

 பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தான் பொலிஸ் திணைக்களத்திடம் எதிர்பார்ப்பது பட்டம், பதவி, கட்சி என்ற எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைவருக்கும் ஒன்று போல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொலிஸ் சேவையாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பாக 04ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், ஒவ்வொரு பிரிவினதும் செயற்பாடுகள் பற்றி அவர்கள் விளக்கமளித்தனர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தனது அரசியல் வாழ்க்கையில் குற்றவாளிகள் பற்றி பேசுவதற்கு தான் எந்தவொரு பொலிஸ் நிலையத்திற்கும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதில்லை என்று தெரிவித்தார்.
மக்கள் நேய சேவையை வழங்கும் அதேநேரம் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கையை எடுத்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் மேற்கொள்வதற்கு பொலிஸ் சேவையில் உள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
மேலும் பொலிஸ் திணைக்களத்தின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து அதன் முன்னேற்றத்திற்காக நடவடிக்கை எடுப்பது போன்று நாளாந்தம் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விஞ்ஞானபூர்வமாக தயாரிக்கப்பட்ட முறைமையொன்று அவசியம் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இதற்காக நிபுணர்களின் உதவியை பெற்று உரிய முறைமையொன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், முன்னைய முறைப்பாடுகள் பற்றி ஆராய்ந்து குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நிகழ்ச்சித்திட்டங்களின் அடிப்படையில் அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அபிவிருத்தியடைந்த நாடொன்றின் பண்பு பொலிஸ் நிலையம் அல்லது சிறைக்கூடங்களை அதிகரிப்பதன்றி குற்றங்களை தவிர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய சமூக மாற்றம் பற்றி கவனம் செலுத்துவதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு, இடமாற்றம் மற்றும்; நலன்பேணல் நடவடிக்கைகள் பற்றியும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கொள்கை ரீதியான தீர்மானமொன்று இல்லாமல் பொலிஸ் நிலையங்களை தாபிப்பதன் மூலம் ஏற்படும் பௌதீக வளம் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தியதுடன், எதிர்காலத்தில் பொலிஸ் நிலையங்களை தாபிக்கும் போது ஒரு குழுவொன்றின் ஊடாக அது பற்றி தீர்மானம் மேற்கொள்வதை கொள்கை சார்ந்த விடயமாக நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்தார். இதன் போது அப்பிரதேசத்தின் மக்கள் தொகை, கிடைக்கும் முறைப்பாடுகள் உள்ளிட்ட ஏனைய பின்னணிகள் பற்றி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் மொழி பேசக்கூடிய பொலிஸ் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், இந்த விடயத்தை மேலும் பலப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.
கணனி குற்றங்களை ஒழிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகளை பயிற்றுவித்தல் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன், வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
இதே நேரம் கொழும்புக்கு வெளியே பிரதான வைத்தியசாலைகளில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தனியான வாட்டுத் தொகுதிகளை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.
மேலும் தூரப் பிரதேசங்களில் இருந்து கடமை நிமித்தம் கொழும்புக்கு வரும் பெண் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளின் வசதிகளை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
பொலித்தீன் தடையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டதுடன், தூரப்பிரதேச பஸ் வண்டிகளில் இடம்பெறும் கப்பம் வாங்கும் விடயம் பற்றியும் குறிப்பிட்டார். அது பற்றி துரிதமாக கவனம் செலுத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸ் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
திருப்தியாக தனது மக்கள் சேவையை வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களத்தின் கீழ் வகுப்பு அதிகாரிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் கட்டம் கட்டமாக தீர்வுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இதே நேரம் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் குற்றங்களை ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களிலும் பொலிஸ் திணைக்களம் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், பொலிஸ் திணைக்களத்தை தனக்குக் கீழ் கொண்டுவந்தது முதல் தனக்கு அனைவரும் வழங்கும் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்தார்.

Latest News right

2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

டிச 05, 2019
2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

ஊடக அறிக்கை

டிச 05, 2019
எதிர்வரும் டிசம்பர் 12, 2019 இல் நடைபெறவுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்தேர்தலுக்கான…

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

டிச 05, 2019
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை…

தொடர்பாடல் பிரிவு பிரதமரினால் ஆரம்பித்து வைப்பு

டிச 04, 2019
பொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை…

இலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி

நவ 29, 2019
பயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன்தடுத்து வைத்துள்ள அனைத்து…

  சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் குறிப்பிடப்படும் சம்பவம்

நவ 29, 2019
2019 நவம்பர் 25 திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில்…

ஜனாதிபதி புது டில்லியை சென்றடைந்தார்

நவ 29, 2019
இரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய…

தேர்தல்களின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஊடக ஒழுங்கு விதிகளை பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பது தொடர்பான கலந்துரையாடல்

நவ 27, 2019
எதிர்வரும் தேர்தல்கள் சுயாதீனமாகவும் அமைதியாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்குத்…