ஒழுக்கம் தவறிய செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பைப் போன்ற பாதுகாப்பினை வழங்க முன்வருமாறு வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நூற்றாண்டில் நிராகரிக்கப்பட்ட 'சிறுவர்களை அடிக்காமல் உருவாக்க முடியாது' என்ற ஒழுக்கக்கேடான கொள்கையை மீண்டும் சமூகத்தில் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் என அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் இறுதியில் கடந்த ஒருசில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகிய சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அமைச்சர் தெரிவித்திருந்தார். உலகம் முழுவதுமுள்ள 2 - 17 வயதுக்கிடையிலான சிறுவர்கள் உடல், உள மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக உலக சுகாதார சபை அறிவித்துள்ளது. இத்தகைய துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சிறுவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், நீண்டகால பிரச்சினைகளும் ஏற்படலாம். இருப்பினும், இத்தகைய துன்புறுத்தல் நடவடிக்கைகளை நிறுத்த முடியும். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட கடமைகள் காணப்படுகின்றன.

வளரும் பருவத்திலுள்ள சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்பான செய்திகள் கடந்த வாரங்களில் நாடுமுழுவதும் பல்வேறு பிரதேசங்களில் பதிவாகியிருந்தன. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் ....... 

'முழுச் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மூன்று செய்திகள் அண்மையில் அறியக் கிடைத்தன. நாட்டின் முன்னணி ஊடகங்கள் தமது செய்தி ஒளிபரப்பின் போது ஹட்டன் பிரதேசத்தில் இரு சிறுவர்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களை வெளிக்கொண்டு வந்திருந்தன. அதற்கு முந்தைய கிழமை, கம்பளை பிரதேசத்தில் தந்தையும், சித்தப்பாவும் சேர்ந்து ஆண் ஒருவருடன் மரத்தில் ஏறிய குற்றத்திற்காக தனது மகளை மனிதாபிமானமற்ற முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருந்த சம்பவத்தையும் நாம் செய்திகளில் பார்த்திருந்தோம். இன்று காலையும் கூட, கொட்டதெனியாவ பிரதேசத்தில் 14 வயதிற்கும் குறைவான பிள்ளைகள் இருவர் காணாமல் போயுள்ளதாகவும், 42 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை எதுவிதமான தகவல்களும் கிடைக்கப்படவில்லை என்ற செய்தியும் ஒளிபரப்பப்பட்டன. இந்த விடயம் ஊடகங்களுக்குள் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும். அதனை நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் 'சிறுவர்களை அடிக்காமல் உருவாக்க முடியாது' என்ற ஒழுக்கக்கேடான, பாரம்பரிய சித்தாந்தம் மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நூற்றாண்டு அதனை நிராகரித்துள்ளது. வளர்ச்சியடைந்த நாகரிகத்தில் முன்னோக்கி செல்லக்கூடிய தருணம் இதுவாகும். எனவே, இவ்வாறான செய்திகள் எவ்வாறு அறிக்கையிடப்படுகிறது. மேலும், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும். சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, துன்புறுத்தப்படாமல் சமூகக் கருத்துக்களை வழங்குவதில் முன்னோடியாக ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்' என தெரிவித்தார்.