தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்றும் தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்கள் இந்த வழிகாட்டுதல்களின்படி செயல்பட வேண்டும் எதிர்வரும் காலங்களில் ஊடக ஒழுக்கவிதிக் கோவை வர்த்தமாணி அறிக்கை வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கின்றோம் என பிரதித் தேர்தல் ஆணையாளர் செல்வி  பியுமி ஆட்டிகல கூறுகிறார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (9) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக ஒழுங்குமுறைக்கு தேர்தல் ஆணைக்குழுவின் உள்ளக கண்காணிப்புக் குழு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தன்னார்வக் குழுக்களின் தகவல்கள் சமூக ஊடக ஒழுங்கு முறைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் தகுந்த மூலோபாய உப-நடவடிக்கைகளுடன் பொருந்தி நேரடியாக சமூக ஊடக நிர்வாகிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் மற்றும் உபநடவடிக்கைகளுக்கு அமைவாகவே எப்போதும் சமூக ஊடகங்கள் செயற்பட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.  தேர்தல் காலங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், இது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களின் ஒத்துழைப்பும் பெறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் போது, அவர்கள் வேறு கட்சி அல்லது எதிர்க்கட்சிக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது அல்லது தவறான தகவல்கள் மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதை அவதானித்தால், தேர்தல் ஆணைக்குழு இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட வேண்டி ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இளைஞர்கள் tik-tok டிக்-டாக் மற்றும் instagram இன்ஸ்டாகிராம்களை அதிகம் பயன்படுத்துவதால், முதல் முறையாக வாக்களிக்கும் இளம் சமூகத்தின் வாக்களிக்கும் நடைமுறைகள் சமூக ஊடகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதால் இது தொடர்பாக ஆணைக்குழு விசேட அவதானத்தினை செலுத்தியுள்ளது என்றும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு மௌன காலத்தை அறிவித்த போது, சமூக ஊடகங்களை அமைதிப்படுத்துவது கடினம் என சுட்டிக்காட்டிய ஆணையாளர், இந்த நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரம் தேவையற்ற செல்வாக்கு உள்ளதாக சுட்டிக்காட்டியதோடு, சுற்றறிக்கைகள் மற்றும் கட்டளைகள் மூலம் பிரச்சார நடவடிக்கைகள் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டால் அதனை எதிர்கொள்ள ஆணைக்குழு தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டிய ஆணையாளர், தேர்தல் காலத்தில் ஊடகங்கள் நியமங்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு தேர்தல்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்கு தேவையான ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்க தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசித்துள்ளதாகவும்; சமூக ஊடகங்கள் மூலம் எந்த வேட்பாளரும் அல்லது கட்சியும் பாரபட்சம் காட்ட வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.