IMF சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் அளவுருக்கள் எதையும் மாற்ற முடியாது - ஜனாதிபதி, ஊடகத் தலைவர்களின் சந்திப்பின் போது கூறுகிறார்
ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அதேவேளை, நாட்டின் மற்றும் மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக தான் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று (7) இடம்பெற்ற ஊடக தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இரண்டு சந்தர்ப்பங்களில், அந்நிலையிலிருந்து நாட்டை மீட்டு, தனது திறமையை நிரூபித்துள்ளதால் யாருடனும் சண்டையிடவில்லை எனவும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஒரே வழியாக அரசாங்கம் ஆரம்பித்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களிடம் கேட்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த திரு.ரணில் விக்கிரமசிங்க,
“ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய பின்னர் முதன்முறையாக ஊடகங்களைச் சந்திக்க முடிவு செய்தேன். இன்று நான் ஜனாதிபதியாக செயற்படுவது, அந்த பதவியை ஏற்க வேறு எவரும் முன்வராத காரணத்தினால். நான் பதவியேற்று இரண்டாண்டுகளுக்குள் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொடுத்தேன். இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது, பொருளாதார நெருக்கடியிலிருந்து கிரீஸ் மீள 10 வருடங்கள் ஆனது; இந்தோனேஷியாவுக்கு 8 ஆண்டுகள் ஆனது. இந்தப் பிரச்சினையை இலங்கை எவ்வாறு தீர்க்கும் என சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த பிரச்சனையை குறுகிய காலத்தில் தீர்க்க முடியும் என்று நான் நம்பினேன். இது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடினேன். எனவே, அச்சமின்றி இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் என்னை ஆதரிக்க எந்த ஒரு தனிக் கட்சியும் இருக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் ஒரு குழு எம்முடன் இணைந்ததுடன், மற்றுமொரு குழு எதிர்க்கட்சிக்கு சென்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழு எம்முடன் இருந்தது. சிலர் எதிர்க்கட்சியில் இணைந்தனர். நான் கட்சியில்லாமல் ஆட்சி அமைத்து இந்தப் பொறுப்பை ஏற்றேன். இப்போது முதற்கட்ட பணிகளை முடித்துவிட்டோம். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பதற்கான வழியை இப்போது தயார் செய்துள்ளோம். அந்தப் பாதையில் முன்னேறுவோம்.
"இந்த நாட்டின் பொருளாதார அமைப்பு வீழ்ச்சியடைந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வரிச்சுமை அதிகரிப்பால் சிலர் தாங்க முடியாமல் தவித்தனர். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதைச் செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை பராமரிக்க முடியவில்லை. நம் நாட்டு அரசியலில் உள்ள பிரச்சனை என்னவென்றால், நாம் உண்மையைச் சொல்லத் தயாராக இல்லை.
ஸ்திரத்தன்மை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. நான் நேற்று வங்காள தேசத்தின் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது, நான் இந்த நாட்டின் பொறுப்பை ஏற்கவில்லையென்றால் நாட்டின் கதி என்னவாகியிருக்கும் என்று நினைத்தேன். பங்களாதேஷ் பிரதமரை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார், ஆனால் அதை ஏற்க எந்த நிறுவனமும் இல்லை. இராணுவம் தலையீடு செய்ய வந்தாலும் இராணுவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். முஹம்மது யூனுஸ் அவர்களை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்களின் அரசியலமைப்புச் சட்டம் ஒருவர் பிரதமராக வருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. நாம் அந்த நிலையில் இருந்தால் என்ன செய்வது? நாம் ஒரு அதிர்ஷ்ட நாடு. நாங்கள் எப்படியோ ஆட்சியை அமைத்தோம். அதனால்தான் இன்று ஜனாதிபதி தேர்தலை நடத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
“இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இந்தப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வளர்ந்த நாடாக மாறுவோமா? நாட்டில் துன்பப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறீர்களா? இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதா? இல்லையேல் பழைய அரசியலில் ஈடுபட்டு பொருளாதாரம் சரிந்து வரிசை யுகத்திற்கு சென்று விடுமா? நாம் முடிவு செய்ய வேண்டும்.
“முகங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாட்டைக் காப்பாற்றும் வலிமையும், கொள்கையும் தங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படக் கூடாது. நாட்டின் எதிர்காலம்; மக்களின் எதிர்காலம். இங்கிருந்து நாம் சீராக முன்னேறுகிறோமா? நாட்டின் பிரச்சினைகளை பலத்துடன் தீர்ப்பீர்களா? அல்லது 2022ல் இருக்கும் நிலைக்குப் போகுமா? என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.
“சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் நாம் செய்துள்ள ஒப்பந்தங்கள் எதனையும் மீறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அப்படி செய்தால் பணம் கிடைக்காது. அப்போது நம் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால் அவற்றை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அப்போது வட் வரியை அதிகரிக்க வேண்டும். அதுதான் யதார்த்தம். உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்ற நாம் தயாரா? அல்லது பொய் சொல்லி ஆட்சியைப் பிடிக்கத் தயாரா? சிந்திக்க வேண்டும். எனவே, அரசு தொடங்கியுள்ள இந்த திட்டங்களை தொடர மக்கள் ஆணையை கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
கேள்வி:
திரு.தம்மிக்க பெரேரா போட்டியிலிருந்து விலகி, திரு.நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்மொழிந்துள்ளார். பொது ஜன பெரமுனவில் உள்ள பெரும்பாலானோர் உங்களுடன் இருக்கிறார்கள். ஆனால் திரு.நாமல் பெரிய போராட்டத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா?
பதில்:
சண்டை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. நான் சண்டையிட வரவில்லை; நாட்டை கட்டியெழுப்பும் கொள்கையை மக்களிடம் முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழியை காட்ட வேண்டும். நீங்கள் விரும்பினால், நீங்கள் வாக்களிக்கலாம். ஜனாதிபதித் தேர்தலுக்காக அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் திரு நாமல் ராஜபக்ஷவும் பொதுஜன பெரமுனவும் எனக்கு வாக்களித்தனர். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த இரண்டு வருடங்களில் ஒன்றாகச் செயல்படுவோம் என்று ஒப்புக்கொண்டோம். இப்போது அந்த இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது நிறுத்துவதா என்பதை அந்தக் கட்சியே முடிவு செய்ய வேண்டும். அதற்கிணங்க, இப்போது தமது விடயங்களை நாட்டுக்கு முன்வைக்க வேண்டியது பொறுப்பாகும்.
கேள்வி:
இந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு நிறைவேற்று ஜனாதிபதிகளின் இரண்டு மகன்கள் உங்களது எதிரிகளாக போட்டியிடுகின்றனர். மறுபுறம் அரச அதிகாரம் பெறாத வேட்பாளர் போட்டியிடுகிறார். இந்த நான்கு முனைச் சண்டையில் மற்ற வேட்பாளர்கள் உங்களுக்கு சவால் இல்லையா?
பதில்:
இவை எதுவும் எனக்கு சவாலாக இல்லை. நான் திரு மகிந்த ராஜபக்சவுடன் இணைந்தும் எதிராகவும் அரசியல் செய்துள்ளேன். ஜனாதிபதி பிரேமதாசவை பதவி நீக்கம் செய்யப்பட்ட போது நான் காப்பாற்றினேன். திரு அனுர திஸாநாயக்க எனக்கு நல்ல நண்பர்.
கேள்வி:
நீங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1700 சம்பளம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். இந்த முறை அவர்களுக்கு அந்த ரூ. 1700 கிடைக்குமா?
பதில்:
சில நிறுவனங்கள் பணம் செலுத்த முடியும் என்றால் மற்றைய நிறுவனங்களுக்கு பணம் செலுத்த முடியாமல் போகாது. பணம் செலுத்த முடியாத நிறுவனங்களுக்கு சொந்தமான நிலத்தை எடுத்து, பணம் செலுத்தக்கூடிய நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். இந்த பணத்தை இந்நாட்டு தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கஷ்டத்தில் வாழ்கிறார்கள். மேலும், அவர்கள் வசிக்கும் லைன் அறைகளின் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து, கிராமங்களாக மாற்றும் பணியை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
கேள்வி:
உங்களுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையில் யாதேனும் முரண்பாடு உள்ளதா? பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு தீர்வு காண சபாநாயகர் பிரதம நீதியரசருடன் கலந்துரையாட வேண்டும் என அண்மையில் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை.
பதில்:
நான் ஒரு பரிந்துரை செய்தேன். இங்கு நீதிமன்றம் ஒருதலைப்பட்சமான தீர்ப்பை வழங்கியது. பாராளுமன்றம் மற்றுமொரு தீர்மானத்தை வழங்கியது. நிர்வாகி என்ற முறையில் நான் வெளியில் இருந்து இந்த திட்டத்தை முன்வைத்தேன். அதை செய்வதா இல்லையா? என்பது அவர்கள் முடிவு. ஜனாதிபதி என்ற வகையில் நான் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவன். பாராளுமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் அமுல்படுத்த வேண்டும்.
கேள்வி:
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் உங்களுடன் இருப்பதால் அவர்களுடன் உங்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என நம்புகிறீர்களா?
பதில்:
என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்தால், அவர்கள் மீது வழக்கு தொடரலாம். அதில் எதையும் நான் நிறுத்தவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தேர்ந்தெடுக்கிறார்களா? இல்லையா? என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும். இதுவரை யாரும் செய்யாத வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் அங்கீகரிக்கப்பட்டு அரச வர்த்தமானியில் வெளியிடப்படும். எல்லோரும் ஊழல், ஊழல் என்று கூக்குரலிட்டார்கள், ஆனால் அது தொடர்பான எந்த திட்டத்தையும் பேசவில்லை. ஆனால் நாங்கள் அது தொடர்பாக செயற்பட்டுள்ளோம்
எனது அடுத்த கட்டம் ஜனாதிபதியாக பதவியேற்பதே ஆகும். அவர்களின் அடுத்த கட்டம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதாகும். வாக்காளர்கள் அவர்களை நிராகரித்தால், அந்தப் பிரச்சினையும் அத்தோடு முடிவுறும். அரசியலில் நாம் வெவ்வேறு நபர்களுடன் பழகுகிறோம். அவர்கள் திருடர்களா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க வேண்டியது சட்டத்தின் நடவடிக்கையாகும்