இலங்கை வானொலி இன்றுடன் 96 வருட பூர்த்தியைக் கொண்டாடுகிறது. பழங்காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை வானொலி இன்றும் முன்னணியில் செயற்படுகிறது. தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தி சமய வேலைத் திட்டங்களின் ஊடாக நாட்டின் கலாசாரத்திற்கு முன்னுரிமை வழங்கி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. இலங்கை வானொலியின் 96 வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இன்று சமய நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது. 96 வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று விசேட தான தர்ம நிகழ்ச்சி கூட்டுத்தாபன வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 96 வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் உள்ள தலைமை காரியாலயம் உட்பட பிராந்திய சேவைகளில்; பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, மலையக சேவை ஏற்பாடு செய்த முதலாவது நிகழ்ச்சி கலகெதர – மெதகொட ஸ்ரீ சித்தார்த்தோய பிரிவென் விஹாரையில் நேற்று நடைபெற்றது. கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரபால லியனகேயின் தலைமையில் இது இடம்பெற்றது. இதன் போது ஊடக செயலமர்வும், சிறுவர்களுக்கான குரல் தேர்வும் நடைபெற்றன. இதில் 400 சிறுவர்கள் பங்கேற்றனர். சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வுகளுக்கு வாய்ப்பளித்து, சகல மக்களையும் உள்ளடக்கும் வகையில், மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கும் நிறுவனமாக இலங்கை வானொலி திகழ்கிறதென இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரபால லியனகே இதன் போது கூறினார்.