சௌபாக்கியத்தின் நோக்கினை யதார்த்தமாக்குவதன் மூலம் இலங்கையின் வெகுசன ஊடகத் தொழிலாளர்களின் அலுவல்களுக்குத் தேவையான சுதந்திரமான மற்றும் தெளிவான சூழலை உருவாக்குவதில், அரசாங்க பொறுப்புக்களின் ஒரு அங்கமாக ஆரோக்கியமான ஊடகவியலாளரை உருவாக்குவதனை நோக்காய்க் கொண்டு வெகுசன ஊடக அமைச்சினால் எசிதிசி அவசர விபத்து மற்றும் மருத்துவக் காப்புறுதித் திட்ட முறை செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

பொறுப்பு வாய்ந்த ஊடகக் துறையினை நோக்காய்க் கொண்டு இலங்கையில் முதன் முறையாக தொழில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்காக வேண்டி “சௌபாக்கியத்தின் ஊடகவியலாளர் பாதுகாப்பு” எனும் பெயரில் வெகுசன ஊடக அமைச்சின் தலைமையில் வழங்குகின்ற “எசிதிசி அவசர விபத்து மற்றும் மருத்துவக் காப்புறுதித் திட்டம்” அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் மற்றும் கௌரவப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையிலும், கௌரவ வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் பங்கேற்புடனும் 2021 டிசம்பர் 02ஆந் திகதி மு.ப. 10.00 மணிக்கு பிரதமர் அலுவலத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இலவச காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள், தங்கியிருந்து மருத்துவம் செய்தவற்கான இயலுமை, வெளி மருத்துவ வசதி, தீவிர நோய்க் காப்பீடு, செவிப்புலன் கருவிகள் மற்றும் கண்ணாடி வசதி, தனிநபர் திடீர் விபத்துக் காப்பீடு மற்றும் கோவிட் 19 காப்பீட்டு வசதி போன்ற பல நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

வெகுசன ஊடக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த காப்புறுதி திட்டத்தின் மூலம் சுமார் 3000 ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 98 ஊடகவியலாளர்களுக்கு இதன் போது காப்பீட்டு உரிமம் வழங்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பி. விஜேவீர மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.