சமீபத்திய செய்தி

தெளிவான காணி உறுதி இன்றி அரசு நிலங்களை பயன்படுத்தி வரும் குடும்பங்களுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பெண் ஒருவருக்கு காணி உறுதி வழங்குவதைக் காணலாம்.

எந்த விட்டுக்கொடுப்பும் செய்யப்பட மாட்டாதுஎவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டிய  அவசியமும் இல்லை

தேசிய பிரச்சினைகளில் அரசியல் வேண்டாம்

தாக்குதல் நடந்தபோது அமைதியாக இருந்த அரசியல்வாதிகள்

இன்று கருப்பு கொடிகள் ஏற்றுகின்றனர்

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று ஆட்சிக்கு வரவில்லை …
  • வெற்றிப் பயணம் தாக்குதலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஆரம்பமானது …
  • பேராயர் அவர்களின் வேதனை நியாயமானது …
  • தமிழ் பயங்கரவாதமோ அல்லது இஸ்லாமிய தீவிரவாதமோ தலை தூக்க ஒருபோதும் இடமில்லை …

                              “கிராமத்துடன் உரையாடலில்” ஜனாதிபதி தெரிவிப்பு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கையை மறைக்க தனது அரசாங்கத்திற்கு எந்தவிதமான தேவையும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தி கூறினார். அது சம்பந்தமாக எந்தவொரு நபருடனோ அல்லது தரப்பினருடனோ உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவோ எவரையும் மகிழ்விக்கவோ வேண்டிய தேவையும் இல்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு தேசிய பிரச்சினை. அதனை ஒரு அரசியல் கருப்பொருளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த அனர்த்தம் தொடர்பில் சரியான முறையில் செயல்படுவது தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்ய வேண்டிய ஒரு பொறுப்பாகும். தாக்குதல் குறித்து பேராயருக்கு இருக்கும் வேதனை நியாயமானது. அவர் அதைப் பற்றி பேசுவது சரியானது. தாக்குதல் நடந்த நேரத்தில் அமைதியாக இருந்த அப்போதைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இப்போது கருப்புக் கொடிகளை ஏற்றுவது கேலிக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அப்போதைய அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் ஏமாற்றமடைந்த மக்கள், கூட்டுறவு சங்க தேர்தல்களிலும், 2018 பெப்ரவரியில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களிலும் அரசாங்கத்திற்கு தங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். உயிர்த்த  ஞாயிறு தாக்குதலை காட்டி தான் ஆட்சிக்கு வரவில்லை என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

2015 க்கு முன்பு இருந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்தது. 2015 ல் ஆட்சிக்கு வந்தவர்கள் தேசிய பாதுகாப்பை மறந்துவிட்டார்கள். எத்தகைய மனித உரிமை குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும், 2015 க்கு முன்பிருந்த பாதுகாப்பு கொள்கை மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அரசாங்கமே பொறுப்பு என்பதை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். தமிழ் பிரிவினைவாத பயங்கரவாதத்துக்கோ அல்லது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கோ எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அடிப்படையற்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (06) முற்பகல் குருணாகல் மாவட்டத்தில் கிரிபாவ பிரதேச செயலக பிரிவில் உள்ள வேரகல கிராம அதிகாரி பிரிவில் உள்ள மதுராகம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 13 வது ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை,  களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

கிரிபாவ பிரதேச செயலகம் கல்கமுவ நகரிலிருந்து 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, இது வடக்கே அனுராதபுரா மாவட்டம் மற்றும் மேற்கே புத்தளம் மாவட்டத்தை எல்லையாக கொண்டுள்ளது. கிரிபாவ நகர மையத்திலிருந்து வேரகல கிராமத்துக்கான தூரம் 03 கி.மீ. கிரிபாவ பிரதேச செயலக பிரிவில் உள்ள 35 கிராம அதிகாரி பிரிவுகளில் வேரகல மிக வறிய மற்றும் மிகவும் பின்தங்கிய கிராம அதிகாரி பிரிவாக கருதப்படுகிறது.

வேரகல மற்றும் மதுராகம கிராமங்கள் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்தவை. இளவரசர் சாலிய அசோக மாலாவுடன் வந்து மறைந்திருந்த கிராமம் ஹெங்கோகமவாகவும் பின்னர் அது மதுராகமவாக மாறியது என்று தெரிவிக்கப்படுகிறது. வேரகல ரஜ மகா விஹாரயவின் வரலாறு வலகம்பா மன்னனின் காலம் வரை நீண்டு செல்கிறது. 149 குடும்பங்களைக் கொண்ட வேரகல மற்றும் மதுராகம ஆகிய இரண்டு கிராமங்களின் மக்கள் தொகை 449 ஆகும். நெல், எள்ளு, சோளம், கௌபி, பயறு மற்றும் உளுந்து செய்கை மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகும்.

‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்க கிரிபாவ பொது மைதானத்தில் இருந்து மதுராகம மைதானத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள், வீதியின் இருபுறமும் கூடியிருந்த மக்களுடன் உரையாடி அப்பிரதேசத்தின் விபரங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் படி மின்சார வசதி இல்லாத அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் ‘தெயட்ட எலிய’ மின்சார திட்டத்தை  இன்று (06) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கிரிபாவ வேரகல கிராமத்தில் ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக ஆரம்பித்து வைத்தார்.

‘தெயட்ட எலிய’ திட்டத்தின் ஊடாக மின்சாரம் இல்லாத அனைத்து சமுர்தி பெறுநர்களுக்கும் மற்றும் சமுர்தி உதவிக்கான காத்திருப்பு பட்டியலில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.

மின்சார சபை இலவச மின்சார இணைப்பை வழங்கும். வீட்டிற்கு வயரிங் செய்வதற்காக சமூர்த்தி வங்கி சலுகை வட்டி கடன் வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாளம் காணப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கல்கமுவ யு.பி. வன்னிநாயக வித்தியாலயத்தின் 7 ஆம் வகுப்பு மாணவி திவ்யஞ்சலி எல்வலதெனிய தான் எழுதிய ‘கிரி அத்தாகே சிஹினய’ என்ற நூலை ஜனாதிபதியிடம் வழங்கினார்.

“கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்து ஜனாதிபதி அவர்களின் மற்றொரு நோக்கமாகும். “அறிவுப் பலம் கொண்ட சிறுவர் தலைமுறை’ என்ற தலைப்பில் பாடசாலைகளுக்கு ஜனாதிபதி அவர்களினால் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒரு பாடசாலைக்கு பல்வேறு பாடத்துறைகளில் 500 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

கிரிபாவ கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் கம்பள கனிஷ்ட வித்யாலயம் ஆகியவற்றுக்கு மொபிடெல் நிறுவனம் நன்கொடையாக வழங்கிய இரண்டு மடிக்கணினிகளையும், டயலொக் நிறுவனம் நன்கொடையாக வழங்கிய தொலைக்காட்சி தொகுதியையும் ஜனாதிபதி அவர்கள் அதிபர்களிடம் ஒப்படைத்தார்.

ராஜங்கனய நீர்த்தேக்கம் மற்றும் உஸ்கல, சியம்பலங்கமுவ குளங்களின் நீரின் மூலம் பிரதேச குளக்கட்டமைப்பை வளப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

விவசாயத்திற்காக குளம் முறையில் விவசாய கிணறுகளை அமைக்கவும், மதுராகம நீர் திட்டத்திற்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. சோலே வெவ, சோலேபுர, வீ பொகுன, நிகவெவ, கதுருவெவ மற்றும் மக அந்தரவெவ உள்ளிட்ட அனைத்து குளங்களையும் புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார். கிரிபாவ பகுதியில் குடிநீர் தேவைகளுக்காக 16 நனோ சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவுமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதேச மக்களுக்கு பிரச்சினையாகவுள்ள காட்டு யானைகள் கிராமத்திற்குள் வரும் பிரச்சினைக்கு தீர்வாக மின்சார யானை வேலியை செயற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

கிரிபாவ கிராம மருத்துவமனை, ராஜங்கனய பெரகும்புர கிராம மருத்துவமனை மற்றும் கல்கமுவ தள வைத்தியசாலை ஆகியவற்றில் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் கூறினார்.

கிரிபாவ பிரதேச செயலக பிரிவில் 33 வீதிகளில் 105 கி.மீ வீதி வலையமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

பஹல கிரிபாவ மகா வித்தியாலயம், பொத்தானேகம விஜய கனிஷ்ட வித்தியாலயம், இஹல மரதன்கடவல ஆரம்பப் பாடசாலை, கம்பள கனிஷ்ட வித்தியாலயம், ராஜாங்கனைய அசோகா மாலா நவோதய பாடசாலை, சமுத்ரா மகா வித்தியாலயம் மற்றும் மயிலேவ மகா வித்தியாலயம் உள்ளிட்ட பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கிரிபாவ பிரதேச சபை விளையாட்டரங்கு மற்றும் கிரிபாவ மகா வித்தியாலய விளையாட்டரங்கு ஆகியவற்றின் அபிவிருத்தி பணிகளை நாளை (07) ஆரம்பிக்கவும், பிரதேச பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்கள், பாதுகாப்பு வேலிகள் அமைத்தல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கான பணி இராணுவ பொறியியல் சேவைகள் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வேரகல விகாரையிலிருந்து பொத்தானேகமவிற்கு சிசு செரிய பஸ் வண்டியொன்றை திங்கள்கிழமை (08) முதல் சேவையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

பண்ணை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஆய்வுகூட வசதிகளுடன் கால்நடை மருத்துவ அலுவலகமொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். இப்பகுதியில் மேய்ச்சல் நிலங்களின் அபிவிருத்தியையும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

பிரதேசத்தின் மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொலுரே, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேக்கர, டி.பி. ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சரித ஹேரத், ஜயரத்ன ஹேரத், சாந்த பண்டார, குணபால ரத்னசேகர, அசங்க நவரத்ன, யு.கே சுமித் உடுகும்புர, சமன்பிரிய ஹேரத், மஞ்சூலா திசானாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச  நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 
 

கிராமவாசிகளினால் சூழலுக்கு எந்தத் தீங்கும் இல்லை…

“கிராமம் அழகானது. அது போலவே கிராம வாழ்க்கையும் அழகாக இருக்க வேண்டும் ”என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவது இல்லை. கிராமவாசிகள்தான் இதுவரை கிராமச் சூழலைப் பாதுகாத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நமது மூதாதையர்களின் காலத்திலிருந்து பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய நடவடிக்கைகளை சூழலுக்கு தீங்கு விளைவிப்பவையாக நான் காணவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (13) முற்பகல் கண்டி மாவட்டத்தில் உள்ள உடுதும்பர பிரதேச செயலக பிரிவில் உள்ள மீமுரே கணிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்’ 10 வது நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜனாதிபதி அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக கைகாவல கணிஷ்ட வித்தியாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் சுமுகமாக கலந்துரையாடி, பாடசாலையின் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

கைகாவல கணிஷ்ட வித்தியாலயத்திற்கு மொபிடெல் நிறுவனம் நன்கொடை அளித்த ஸ்மார்ட் வகுப்பறை, மீமூரே ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கிய மடிக்கணினி, அதிவேக இணைய வசதிகள் மற்றும் டயலொக் நிறுவனம் வழங்கிய தொலைக்காட்சி மற்றும் இணைப்பு ஆகியவற்றை ஜனாதிபதி அவர்கள் அதிபரிடம் கையளித்தார்.

மீமூரே-உடுதும்பர வீதியில் இலங்கை போக்குவரத்து சபையினால் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ் வண்டியின் முதலாவது பயணமும் ஜனாதிபதி அவ்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை,  களுத்துறை, மொனராகலை மற்றும் கேகாலை மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

பழைமை வாய்ந்த மீமுரே கிராமம் கண்டி-மஹியங்கன வீதியில்  40 கி.மீ தொலைவில் ஹுன்னஸ்கிரியவுக்கும் அங்கிருந்து 35 கி.மீ தூரத்தில் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கும் எல்லையில் கண்டி மாவட்டத்தின் ஒரு முனையில் அமைந்துள்ளது.

மீமுரே கிராமம் உலக மரபுரிமையான பாதுகாக்கப்பட்ட நக்கீல்ஸ் வனப்பகுதியின் இதயமாகவும் கருதப்படுகிறது. கரம்பகெட்டிய, கும்புக்கொல்ல, புஸ்ஸேஎல, கைகாவல மற்றும் மீமுரே கிராம சேவகர் பிரிவுகள் உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவையாகும்.

378 குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமங்களின் மக்கள் தொகை1127 ஆகும். நெற் பயிர்ச்செய்கை இந்த கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகும். இன்னும் சிலர் மிளகு உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களை பயிரிடுவதிலும், கித்துல் சார்ந்த கைத்தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

வீதிகள் அபிவிருத்தி செய்யப்படாதிருப்பதும், விவசாய நிலங்களின் தெளிவான உரிமையில்லாதிருப்பதும் தாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் என்று மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

வீதிப் பிரச்சினைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் மீமுரே – ஹுன்னஸ்கிரிய வீதியில் உள்ள இரண்டு பாலங்களையும் திருத்தியமைத்து, வீதியின் அபிவிருத்தியை விரைவில் நிறைவுசெய்யுமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

மெதிவக்கவிலிருந்து பல்லேவெல வரையிலான வீதி, தொம்பகஹபிட்டியவிலிருந்து 35ஆம் கட்டை வரையிலும், கரம்பகெட்டியவிலிருந்து ஹுலுகெட்டதெகஹ வரையிலும் உள்ள வீதிகள் உள்ளிட்ட வீதிகளை புனரமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

கைகாவல மத்திய மருந்தகத்திற்கு மருத்துவரொருவரை நியமிக்கவும், அம்புலன்ஸ் வண்டியொன்றை வழங்கவும், உடுதும்பர மருத்துவமனையில் மருத்துவர் வெற்றிடங்களை நிரப்பவும், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக மீமூரே பிரதேசத்தின் சாத்தியங்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், நீர் சாகச விளையாட்டு மற்றும் சுற்றுலா துறைக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். மலையேறுதல் உள்ளிட்ட சுற்றுலா செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களை  அடையாளம் காணவும், சுற்றுலாத்துறையில் ஈடுபடுவதற்கு உள்ளூர் மக்களுக்கு பயிற்சியளிக்கவும் மீமூரே கிராமத்தில் அரச வங்கியொன்றின் மூலம் ஏடிஎம் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

காய்கறிகள் மற்றும் பழங்களை பயிரிடுவதில் சேதன உரங்களைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் மீமூரே கிராமத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சுட்டிக்காட்டினார்.

இப்பகுதியில் ஏலக்காய் செய்கை பற்றி கலந்துரையாடப்பட்டதுடன்,  இந்த விடயத்தை ஆராய்ந்து முறையான நடவடிக்கை எடுக்க ஒரு குழுவை நியமிக்கும் பொறுப்பு விவசாய அமைச்சரிடம் வழங்கப்பட்டது. மிளகு விளைச்சல் குறைவடைந்திருப்பது குறித்து ஆராயவும் முடிவு செய்யப்பட்டது.

இப்பகுதியில் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை வழங்கவும் மின்சார வேலியை புனரமைத்து செயல்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டார்.

மீமுரே – கும்புக்கொல்ல – கைகாவல பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்பவும், கணினி அறைகள், நூலகங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இப்பகுதியில் உள்ள முன்பள்ளிகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. மூன்று பாடசாலைகளுக்கும் பொதுவான ஒரு ஆசிரியர் இல்லத்தை நிர்மாணிப்பது குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார்.

கிராமங்களில் கால்வாய்களை புனரமைத்தல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இப்பகுதியின் மற்ற இரண்டு அடிப்படை தேவைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு மற்றும் இணைய வசதிகளை மேம்படுத்துவதை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

உடுதும்பர பகுதியில் உள்ள புஸ்ஸேஎல- கைகாவல- ஹசலக – வேரகம உள்ளிட்ட பல கிராமங்களில் குடிநீர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தி முறையான தீர்வுகளை வழங்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் குடிநீர் தேவைகளையும் விரைவாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஹுலுகெட்டதெலகஹ, மடகும்புர, நாஎல, கொடயங்கலே மற்றும் பெகிரிமான அணைக்கட்டுக்கள் மற்றும் 06 குளங்களை புனரமைக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஆளுநர் லலித் யு. கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உதய சமிந்த கிரிந்திகொட, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மவாட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் இந்த ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 
 

நாம் வைத்துள்ள நம்பிக்கையில் எவ்வித குறைவும் இல்லைஎப்போதும் எமது ஆசீர்வாதம் உள்ளது…

                                பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

எல்லோருடையவும் எல்லா கருத்துக்களுக்கும் பதிலளிக்கச் செல்வதன் மூலம் வேலை செய்வதற்கான பெறுமதியான நேரம் விரயமாகிறது. விமர்சனங்களை நியாயமாகக் கருதி சுய சிந்தனையுடன் நாட்டை வழிநடத்துவதே தேவை என பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்துள்ளது.

பட்டம் பதவிகள் கிடைக்காத சிலர் என்ன சொன்னாலும், மகா சங்கத்தினரும் மக்களும் ஜனாதிபதி அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் மகாசங்கத்தினர் தெரிவித்தனர்.

இன்று (12) பிற்பகல் 8 வது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பௌத்த ஆலோசனை சபை கூட்டத்தின் போதே மகாசங்கத்தினர் இதனை தெரிவித்தனர்.

சிலரின் வெறுக்கத்தக்க கருத்துக்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் குறித்து பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் கலங்கப்படுத்தும் நடவடிக்கைகளால் நாம் சோர்வடைந்து விடக்கூடாது. எஞ்சியுள்ள மூன்றரை வருடங்களுக்கும் மேற்பட்ட காலத்தில் நாட்டை கொள்கை ரீதியாக ஆட்சி செய்யுமாறு மகா சங்கத்தினர் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

அடிப்படைவாதிகளின் தற்போதைய செயற்பாடுகள் பௌத்த ஆலோசனை சபையின் விசேட கவனத்தைப் பெற்றது. அன்று ஏழைகள்தான் அவர்களது பிடியில் சிக்கினர். இன்று பணக்காரர்கள், சக்திவாய்ந்த, புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கூட அடிப்படைவாதிகளுக்கு பலியாகியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது என்று மகா சங்கத்தினர் தெரிவித்தனர். குருணாகலையில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றின் பிரதி அதிபர் ஒருவர் மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரை நிர்ப்பந்தமாக அவர்களது பிடிக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

தூதரக சேவை உள்ளிட்ட பதவிகளுக்கு நியமனங்களை செய்யும் போது ஜனாதிபதி அவர்கள் மேற்கொள்ளும் நடைமுறைகளை மகா சங்கத்தினர் பாராட்டியதோடு, தூதரக சேவை பணி ஓய்வு பெறுபவர்களுக்கான ஓய்வு இடமாக மாறக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினர். மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கான தூதுவர்கள் பஞ்சசீலத்தை பேணுபவர்களாகவும் கொள்கையுடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பௌத்த தத்துவம், தொல்பொருள் மற்றும் பண்டைய தளங்கள் பற்றிய தவறான வியாக்கியானங்களை நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் மகா சங்கம் வலியுறுத்தியது. அதற்காக பௌத்த நூல்கள் மற்றும் வெளியீடுகள் ஒழுங்குமுறைச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். திரிபீடக பாதுகாப்பு சபையை செயல்படுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

பௌத்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களான மகா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

 
 

தீகவாபி சைத்தியவின் புனரமைப்புக்காக நிதி திரட்டும் “தீகவாபிய அருண” நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் இன்று (12) முற்பகல் கொழும்பு 07 இல் உள்ள ஸ்ரீ சம்போதி விஹாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புனித இடங்களில் ஒன்றான தீகவாபி நாட்டின் நான்காவது பெரிய தாகபையை கொண்டுள்ளது. புத்தரின் புனித சின்னம் பிரதிஷ்டை செய்யப்பட்டு மன்னர் சத்தாதிஸ்ஸவினால் இந்த சைத்திய நிர்மாணிக்கப்பட்டது.

தீகவாபி விகாரையின் தலைமை தேரர் சங்கைக்குரிய மஹஓய சோபித தேரரின் வேண்டுகோளின் பேரில் சைத்தியவின் புனரமைப்பு திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு திறைசேரியிலிருந்து எவ்வித நிதியும் செலவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்கள் இதற்கு நிதி ரீதியாகவும் உடல் உழைப்பின் மூலமும் பங்களிக்க முடியும்.

விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டார். சியம் மகா நிகாயவின் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி அனுநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்தனர்.

‘யலி தக்கிமு தீகவாபிய’ என்ற இணையத்தளத்தையும் ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

‘தீகவாபிய அருண’ திட்டத்திற்கு முதலாவது பங்களிப்பை செய்த நா உயன ஆரண்ய சேனாசனாதிபதி சங்கைக்குரிய அங்குல்மடுவே அரியனந்த தேரர் அன்பளிப்பு செய்த ரூ .100 மில்லியனுக்கான காசோலையை நிர்வாக சபை உறுப்பினர் திரு. சந்திரகீர்த்தி பண்டார ஜனாதிபதி அவர்களிடம் வழங்கினார்.

பௌத்தயா தொலைக்காட்சி சேவை ரூ. 5 மில்லியன் ரூபாவையும், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையணி, இலங்கை வங்கி, மகரகம புற்றுநோய் வைத்தியசாலை மற்றும்  சென்ட்ரல் பெயாரிங் தலைவர் சுதத் தென்னகோன் ஆகியோர் தங்கள் நன்கொடைகளை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கினர்.

தீகவாபி சைத்தியவின் புனரமைப்புடன் இணைந்ததாக புனித பூமிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வசதியளிக்கும் நான்கு மண்டபங்கள் மற்றும் 20 அறைகள் கொண்ட ஓய்வு இல்லம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ராமண்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய மகுலேவே விமல நாயக்க தேரர், அமரபுர சூலகண்டி பீடத்தின் மகாநாயக்க தேரர்  சங்கைக்குரிய கன்துனே அஸ்ஸஜி தேரர், மிரிசவெட்டிய விகாராதிபதி சங்கைக்குரிய ஈதலவெடுனுவெவே ஞானதிலக தேரர், தொல்பொருள் சக்கரவர்த்தி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் தலைமையிலான மூன்று நிகாயக்களினதும் மகா சங்கத்தினர், அமைச்சர் சரத் வீரசேக்கர, இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் முப்படைகளின் தளபதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

 
 

நாரஹேன்பிட பொருளாதார மத்திய நிலைய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “State Trust Center” (ரஜவாச) வர்த்தக கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) முற்பகல் திறந்து வைத்தார்.

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கண்காட்சிகூடம் விரிவுபடுத்தப்பட்டு “ரஜவாச” வர்த்தக கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது 78 அரச மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்திற்கு அமைவாக, அரச தொழில்முயற்சியாளர்களினதும் சுதேச உற்பத்தியாளர்களினதும் தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள நுகர்வோருக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

சுதேச உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை வர்த்தக நிலையங்களுக்கு வழங்கும் சந்தர்பத்தையும் இது வழங்குகிறது.

நினைவுப் பலகையை திறைநீக்கம் செய்து வர்த்தக கட்டிடத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், வர்த்தக நிலையங்களுக்குச் சென்று உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருடன் கலந்துரையாடினார்.

அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, ரமேஷ் பதிரன, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அலகியவண்ண, ஜனக வக்கும்புர, சஷிந்திர ராஜபக்ஷ, சன்ன ஜயசுமன மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 
 

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் கொவிட் தொற்றுக்கு எதிரான 5 இலட்சம் Oxford AstraZeneca  தடுப்பூசி நாளை இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது..

நாளை காலை 11.00 மணிக்கு கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் எடுத்து வரப்படும் இந்த  தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும்  வைபவத்தில்  வைபவத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவற்றை உத்தியோகபூர்மாக பொறுப்பேற்பார்..

இதனைத்தொடர்ந்து இந்த  தடுப்பூசிகளை ,சுகாதார அமைச்சின்; குளிரூட்டப்பட்ட களஞ்சிய பகுதிக்கு எடுத்துச்செல்லப்படும்..  வெள்ளிக்;கிழமை தொடக்கம் இந்த தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த தடுப்பூசி தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று காலை இடம்பெற்றது. இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் நீண்ட கால நல்லுறவின் முக்கியத்துவம் தொடர்பை குறிக்கும் வகையில் இந்த தடுப்பூசியை ஜனாதிபதி இந்த வைபவத்தில் பொறுப்பேற்கவுள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய தூதுவரினால் இந்த தடுப்பூசி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் இந்த தடுப்பூசிகள் சுகாதார அமைச்சில் உள்ள குளிரூட்டல் களஞ்;சியசாலையில் களஞ்சியப்படுத்தப்படும். இவற்றை இலகுவாக கையாளக்கூடியதாக இருக்கும். நாளை மறுதினம் முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டு இருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியார்களுடனான சந்திப்பு zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன் போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இவர்களது சம்பள பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாக கம்பனிகள் இதற்கான கூட்டு ஒப்பந்த காலத்தை 4 வருடங்களாக நீடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர் என்றும் கூறினார்.

இதேவேளை உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்ட தொழில் சங்கங்கள் 2 வருடங்களுக்கு வரையறுக்க வேண்டும் என்று வழியுறுத்தியுள்ளன. சம்பள பிரச்சினையில் எதிர்நோக்கப்பட்டுள்ள இந்த விடயங்களுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படுகின்றது.

அதேவேளை தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் உறுதிப்பட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. சம்பள நிர்ணய சபையின் ஊடாக இதனை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சரவையில் நேற்று விரிவாக ஆராயப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

03. தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளக் கொடுப்பனவை அதிகரித்தல்

'2019-2021 தோட்ட தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தின்' ஏற்பாடுகளுக்கமைய 50/- ரூபா நிலையான விலைக் கொடுப்பனவு உள்ளிட்ட 750/- ரூபா நாளாந்த சம்பளமாகவும் உற்பத்தித்திறன் மற்றும் நியம கிலோகிராம் அளவு அதிகரிக்குமாயின் 'Over Kilo Rate' எனும் பெயரில் மேலுமொரு கொடுப்பனவுடன் சேர்த்து தோட்டத்தொழிலாளர்கள் தற்போது சம்பளமாகப் பெற்று வருகின்றனர்.

2020 நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்தச் சம்பளமாக 1000/- ரூபா வழங்குவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக '2019 – 2021 தோட்ட தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில்' கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும், குறித்த கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு தரப்பினரான பெருந்தோட்ட உரிமையாளர்களின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை முதலாளிமார் சம்மேளனம் நாளாந்த சம்பளத்தை 920/- ரூபா வரை அதிகரிப்பதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் சம்பளக் கட்டுப்பாட்டு சபை மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000ஃ- ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் அக்கமகா பண்டித சங்கைக்குரிய  கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தேரர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (26) முற்பகல் கல்கிஸ்ஸ தர்மபாலராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், நாயக்க தேரர் அவர்களை சந்தித்து அவருக்கு நோய் நொடியில்லாத ஆரோக்கிய வாழ்வுக்காக பிரார்த்தித்தார்.

மகா நாயக்க தேரரை ஆசீர்வதிப்பதற்காக ஐம்பது மகா சங்கத்தினர் கலந்து கொண்ட ஒரு அன்னதான நிகழ்விலும் பங்கேற்ற ஜனாதிபதி அவர்கள், தேரர்களுக்கு அன்னதானங்களை வழங்கினார்.

சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையையும் ஜனாதிபதி அவர்கள் தேரரிடம் வழங்கினார்.

ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயவின் பதில் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய  கங்துனே அஸ்ஸஜீ தேரர், கோட்டே ஸ்ரீ கல்யானி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின்  மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஸ்ரீ லங்கா ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய மகுலேவே விமல தேரர், அமரபுர ஸ்ரீ தர்மரக்ஷித நிகாயவின் மகாநாயக்க தேரர், பம்பலபிட்டிய வஜிரராமாதிபதி சங்கைக்குரிய திரிகுணாமலயே ஆனந்த நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாரஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண தலைமை சங்க நாயக்க தேரர் சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரின் பிறந்த நாளும் இன்றாகும்.

இன்று (26) பிற்பகல் அந்த விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் அவர்களை சந்தித்து அவருக்கு நோய் நொடியில்லாத ஆரோக்கிய வாழ்வுக்காக பிரார்த்தித்தார்.

தேரர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான நிகழ்வு மற்றும் அப்பகுதி வாழ் மக்களுக்கு அன்பளிப்பதற்காக சேகரிக்கப்பட்டிருந்த பொருட்களையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

Latest News right

“அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் – 2023” விண்ணப்பம் கோரல்

செப் 10, 2023
Default Image
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்தும் நோக்கில் வருடாந்தம்…

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

மே 23, 2023
Cabinet Decisions on 22.05.2023 Tamil page 0001
2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…