கிராமவாசிகளினால் சூழலுக்கு எந்தத் தீங்கும் இல்லை…

“கிராமம் அழகானது. அது போலவே கிராம வாழ்க்கையும் அழகாக இருக்க வேண்டும் ”என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவது இல்லை. கிராமவாசிகள்தான் இதுவரை கிராமச் சூழலைப் பாதுகாத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நமது மூதாதையர்களின் காலத்திலிருந்து பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய நடவடிக்கைகளை சூழலுக்கு தீங்கு விளைவிப்பவையாக நான் காணவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (13) முற்பகல் கண்டி மாவட்டத்தில் உள்ள உடுதும்பர பிரதேச செயலக பிரிவில் உள்ள மீமுரே கணிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்’ 10 வது நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜனாதிபதி அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக கைகாவல கணிஷ்ட வித்தியாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் சுமுகமாக கலந்துரையாடி, பாடசாலையின் குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

கைகாவல கணிஷ்ட வித்தியாலயத்திற்கு மொபிடெல் நிறுவனம் நன்கொடை அளித்த ஸ்மார்ட் வகுப்பறை, மீமூரே ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கிய மடிக்கணினி, அதிவேக இணைய வசதிகள் மற்றும் டயலொக் நிறுவனம் வழங்கிய தொலைக்காட்சி மற்றும் இணைப்பு ஆகியவற்றை ஜனாதிபதி அவர்கள் அதிபரிடம் கையளித்தார்.

மீமூரே-உடுதும்பர வீதியில் இலங்கை போக்குவரத்து சபையினால் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ் வண்டியின் முதலாவது பயணமும் ஜனாதிபதி அவ்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை,  களுத்துறை, மொனராகலை மற்றும் கேகாலை மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம்.

பழைமை வாய்ந்த மீமுரே கிராமம் கண்டி-மஹியங்கன வீதியில்  40 கி.மீ தொலைவில் ஹுன்னஸ்கிரியவுக்கும் அங்கிருந்து 35 கி.மீ தூரத்தில் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கும் எல்லையில் கண்டி மாவட்டத்தின் ஒரு முனையில் அமைந்துள்ளது.

மீமுரே கிராமம் உலக மரபுரிமையான பாதுகாக்கப்பட்ட நக்கீல்ஸ் வனப்பகுதியின் இதயமாகவும் கருதப்படுகிறது. கரம்பகெட்டிய, கும்புக்கொல்ல, புஸ்ஸேஎல, கைகாவல மற்றும் மீமுரே கிராம சேவகர் பிரிவுகள் உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவையாகும்.

378 குடும்பங்களைக் கொண்ட இந்த கிராமங்களின் மக்கள் தொகை1127 ஆகும். நெற் பயிர்ச்செய்கை இந்த கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகும். இன்னும் சிலர் மிளகு உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களை பயிரிடுவதிலும், கித்துல் சார்ந்த கைத்தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

வீதிகள் அபிவிருத்தி செய்யப்படாதிருப்பதும், விவசாய நிலங்களின் தெளிவான உரிமையில்லாதிருப்பதும் தாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் என்று மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

வீதிப் பிரச்சினைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் மீமுரே – ஹுன்னஸ்கிரிய வீதியில் உள்ள இரண்டு பாலங்களையும் திருத்தியமைத்து, வீதியின் அபிவிருத்தியை விரைவில் நிறைவுசெய்யுமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

மெதிவக்கவிலிருந்து பல்லேவெல வரையிலான வீதி, தொம்பகஹபிட்டியவிலிருந்து 35ஆம் கட்டை வரையிலும், கரம்பகெட்டியவிலிருந்து ஹுலுகெட்டதெகஹ வரையிலும் உள்ள வீதிகள் உள்ளிட்ட வீதிகளை புனரமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

கைகாவல மத்திய மருந்தகத்திற்கு மருத்துவரொருவரை நியமிக்கவும், அம்புலன்ஸ் வண்டியொன்றை வழங்கவும், உடுதும்பர மருத்துவமனையில் மருத்துவர் வெற்றிடங்களை நிரப்பவும், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக மீமூரே பிரதேசத்தின் சாத்தியங்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், நீர் சாகச விளையாட்டு மற்றும் சுற்றுலா துறைக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். மலையேறுதல் உள்ளிட்ட சுற்றுலா செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களை  அடையாளம் காணவும், சுற்றுலாத்துறையில் ஈடுபடுவதற்கு உள்ளூர் மக்களுக்கு பயிற்சியளிக்கவும் மீமூரே கிராமத்தில் அரச வங்கியொன்றின் மூலம் ஏடிஎம் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

காய்கறிகள் மற்றும் பழங்களை பயிரிடுவதில் சேதன உரங்களைப் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் மீமூரே கிராமத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சுட்டிக்காட்டினார்.

இப்பகுதியில் ஏலக்காய் செய்கை பற்றி கலந்துரையாடப்பட்டதுடன்,  இந்த விடயத்தை ஆராய்ந்து முறையான நடவடிக்கை எடுக்க ஒரு குழுவை நியமிக்கும் பொறுப்பு விவசாய அமைச்சரிடம் வழங்கப்பட்டது. மிளகு விளைச்சல் குறைவடைந்திருப்பது குறித்து ஆராயவும் முடிவு செய்யப்பட்டது.

இப்பகுதியில் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை வழங்கவும் மின்சார வேலியை புனரமைத்து செயல்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டார்.

மீமுரே – கும்புக்கொல்ல – கைகாவல பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்பவும், கணினி அறைகள், நூலகங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இப்பகுதியில் உள்ள முன்பள்ளிகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. மூன்று பாடசாலைகளுக்கும் பொதுவான ஒரு ஆசிரியர் இல்லத்தை நிர்மாணிப்பது குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார்.

கிராமங்களில் கால்வாய்களை புனரமைத்தல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இப்பகுதியின் மற்ற இரண்டு அடிப்படை தேவைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு மற்றும் இணைய வசதிகளை மேம்படுத்துவதை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

உடுதும்பர பகுதியில் உள்ள புஸ்ஸேஎல- கைகாவல- ஹசலக – வேரகம உள்ளிட்ட பல கிராமங்களில் குடிநீர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தி முறையான தீர்வுகளை வழங்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் குடிநீர் தேவைகளையும் விரைவாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஹுலுகெட்டதெலகஹ, மடகும்புர, நாஎல, கொடயங்கலே மற்றும் பெகிரிமான அணைக்கட்டுக்கள் மற்றும் 06 குளங்களை புனரமைக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஆளுநர் லலித் யு. கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உதய சமிந்த கிரிந்திகொட, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மவாட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் இந்த ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.