சமீபத்திய செய்தி

 இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் 26ம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

கடந்த கால யுத்த அனுபவங்களை பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை கடந்த 71வது தேசிய தின விழாவின்போது காட்சிப்படுத்தப்பட்டன.
ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கலாநிதி டிரான் டி சில்வாவினால் இந்த மாதிரி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

 பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக சற்று முன்னர் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதே நேரம் நிதி அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக மங்கள சமரவீர ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

தாய்லாந்தின் 10ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றும் பரிசாக வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி அவர்கள் சார்பில் அரச மரக்கன்றை தாய்லாந்துக்கு கொண்டு சென்ற புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, தாய்லாந்து இளவரசருக்கு ஜனாதிபதி அவர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அரச மரக்கன்றையும் 19ம் திகதி கையளித்தார்.
தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுவூட்டும் வகையிலும் தேரவாத புத்த தர்மத்தை பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையாக இந்நிகழ்வு கருதப்பட்டதுடன், முடி இளவரசருக்கு இராஜதந்திர ரீதியில் கிடைத்த முதல் பரிசு இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா மற்றும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட அந்நாட்டு விசேட பிரதிநிதிகளின் பங்களிப்பில் குறித்த அரச மரக்கன்று தாய்லாந்தின் அயோத்யா நகரில் அமைந்துள்ள வஜிரதம்மாராம விகாரையில் நடப்பட்டது.
இலங்கை ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துடன் அனுப்பிவைக்கப்பட்ட இந்த மகத்துவம் வாய்ந்த பரிசானது இரு நாடுகளுக்கிடையிலான நட்பின் அடையாளம் என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்தார்.
அடமஸ்தானாதிபதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச நாயக்க தேரர் மற்றும் தாய்லாந்து பிரதான சங்க நாயக்கர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

14ம் திகதி முற்பகல் அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்பது இன்று ஒரு முக்கிய விடயமாக அறியப்பட்டாலும் இது இன்னும் உரிய முறையில் நடைமுறை ரீதியாக மக்கள் மத்தியில் அமுல்படுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகள் ஒருபோதும் எவரும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், காலநிலை மாற்றத்தின் காரணமாக உருவாகியிருக்கும் அனர்த்தங்களின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மத்தியில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக புதிய சர்வதேச ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாரிய சுற்றாடல் அழிவுகளுடன் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைமை பற்றி அனைத்து மக்களும் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமையான சுற்றாடலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டங்களுடன் தாமதிக்காது அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இன்று பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசங்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் நாட்டின் சுற்றாடல் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தும் மின்சார வாள்களை பயன்படுத்துவதற்கு அனுமதிப் பத்திரங்களை கட்டாயமாக்கிய முதலாவது அரசாங்கம் என்ற வகையில் அண்மையில் அது பற்றிய தீர்மானத்தை மேற்கொண்டமை சுற்றாடல் பாதுகாப்பை கருத்திற்கொண்டேயாகும் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் மின்சார வாள்களை வைத்திருப்பவர்கள் அதுபற்றி பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, பிரதேச செயலகத்தின் ஊடாக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பொலிஸாரும் கிராமிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து கள அலுவலர்களும் இது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அனுமதிப் பத்திரமின்றி இந்த மின்சார வாள்களை தம்வசம் வைத்திருந்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்குவது குறித்து விரைவில் வர்த்தமானி பத்திரம் மூலம் அறிவிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த மின்சார வாள்களை நாட்டுக்கு கொண்டுவரும் வர்த்தக நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதுபற்றிய தீர்மானமொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
முறையற்ற கழிவு முகாமைத்துவமும் சுற்றாடல் அழிவுகளுக்கு பெரிதும் காரணமாகின்றது என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், முறையான கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களுக்கான அரச திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அதற்கெதிரான மக்கள் எதிர்ப்புகள் பெரும் தடையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நவீன தொழிநுட்பத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் கழிவு முகாமைத்துவ திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் போதுமான தெளிவு இல்லாத காரணத்தினால் இத்தகைய எதிர்ப்புகள் தோன்றுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஒரு பகுதியில் கழிவு முகாமைத்துவ திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் பல இடை உற்பத்திகளுடன் விவசாய துறைக்கான பல நன்மைகளும் அப்பிரதேசத்திற்கு அதன் மூலம் கிடைக்குமென்றும் சுட்டிக்காட்டினார்.
அநுராதபுர மாவட்டத்தில் சுற்றாடல் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தியதுடன், மல்வத்து ஓயா அபிவிருத்தி திட்டத்தின் நடவடிக்கைகளையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அநுராதபுர வீரசிங்ஹ அரிச்சந்திர விளையாட்டரங்கு வளாகத்தில் ஜனாதிபதி அவர்களினால் மரக்கன்றொன்று நடப்பட்டு அநுராதபுர மாவட்ட சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அநுராதபுர மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் உள்ளடங்கிய அறிக்கை மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்கவினால் ஜனாபதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அநுராதபுர மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு பழக்கன்றுகளை வழங்கும் வேலைத்திட்டம், பழச் செய்கை வேலைத்திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குதல், மாவட்டத்தில் 1,000 இலுப்பை மரக்கன்றுகளை நடுவதற்கான நிதியுதவியை வழங்குதல், புனித நகரிலிருந்து முறையற்ற கழிவு முகாமைத்துவத்தை தடுப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்றுக்கு நிதி வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் பங்களிப்பில் மாவட்ட மக்களுக்கு மழைநீரை சேகரிக்கும் 5,000 தண்ணீர் தொட்டிகள் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் ஆராய்ச்சி மற்றும் புதிய நிர்மாணத் துறையில் ஈடுபட்டு குள முறைமைகளை சுத்திரகரிப்பதற்காக குளங்களில் காணப்படும் ஜப்பன் ஜபர என்ற தாவரத்தை நீக்கும் இயந்திரத்தை உருவாக்கி சர்வதேச விருதுபெற்ற புத்தாக்குனரான நாமல் உதார பியசிறியை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.
ருவன்வெலி மகா சேய விகாராதிபதி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் ஏனைய சமய தலைவர்கள், அமைச்சர்களான பீ.ஹரிசன், சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு துறை பிரதானிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அநுராதபுரத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் முதலில் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மகா போதிக்குச் சென்று ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அடமஸ்தானாதிபதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரை சந்தித்து அவரது சுக துக்கங்களை கேட்டறிந்தார்.

 “ஒருமித்து சிந்திப்போம், ஒருமித்து எழுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் 71ஆவது தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்ட “எகடசிடிமு” (ஒன்றுபடுவோம்) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண விழா மற்றும் கலாசார நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 12ம் திகதி பிற்பகல் கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு முன்னால் கோலாகலமாக இடம்பெற்றது.

தற்போது ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கி செல்வதற்கு அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றாக செயற்பட வேண்டும் என்ற நம்பிக்கையோடு நாட்டுக்காக ஒன்றுபடுவோம் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் சகல அரசியல் சக்திகளையும் ஒன்று திரட்டி நாட்டின் முன்னேற்றத்திற்காக செயற்படுதல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.
ஜனாதிபதி செயலகத்தின் விசேட கருத்திட்டப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மிகச் சிறப்பான முறையில் கலாசார நிகழ்வுகளுடன் இந்த அங்குரார்ப்பண விழா ஆரம்பமானதுடன், இலங்கை இராணுவத்தினர் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் கலை நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.
ஒன்றுபட்டு மேற்கொள்ளவுள்ள இந்த பயணத்தில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக ஒரே சிந்தனையோடு ஒன்றிணைவோம் என்ற “எகடசிடிமு” (ஒன்றுபடுவோம்) என்ற உறுதிப்பத்திரமும் இதன்போது நாட்டுக்கு கீர்த்தியை பெற்றுக்கொடுத்த பிரபல கார் ஓட்ட வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
“எகடசிடிமு” (ஒன்றுபடுவோம்) நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான தொழிநுட்ப உபகரணங்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அதிதிகளும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, வான் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகள் உள்ளோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

 கிராமிய மட்டத்தில் உள்ள பாரம்பரிய கலைஞர்களின் அறிவு, ஆற்றல்களை அவர்களது வாழ்க்கைப் பயணத்தின் முடிவோடு முடிவுற இடமளிக்காது அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று அவசியமாகுமென தெரிவித்ததோடு, இவ்விடயம் தொடர்பில் அமைச்சுக்களின் மட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சுட்டிக்காட்டினார்.

29ம் திகதி பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற கலாபூஷணம் அரச விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் கலைத்துறையின் மேம்பாட்டுக்காக சிறப்பான சேவைகளை ஆற்றிய கலைஞர்கள் 200 பேருக்கு இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், விசேட விருதுகளை பெற்றோருக்கு ஜனாதிபதி அவர்கள் விருதுகளை வழங்கிவைத்தார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருது விழா இம்முறை 34வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனித நேயத்துடன் கூடிய சமூகமொன்றை உருவாக்குவதற்காக கலைஞர்கள் நிறைவேற்றும் செயற்பணிகளை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இவ்வாறான விருது விழாக்களை ஏற்பாடு செய்வதற்கான ஊடாக கலைஞர்கள் தேசத்திற்காக நிறைவேற்றும் விசேட செயற்பணிகளை அனைவரும் அறிந்துகொள்ள முடிகின்றதென தெரிவித்தார்.
உள்நாட்டு திரைப்படத்துறை, மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகக்கலை உள்ளிட்ட ஆவணக் கலைகளை பாதுகாத்து, மக்கள் மத்தியில் சிறந்த கருத்துக்களை ஏற்படுத்துவதற்காக அன்று தொட்டு இன்று வரை பணியாற்றிவரும் சகல கலைஞர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஹேமா பிரேமதாச அம்மையார், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் மொஹமட், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல, பேராசிரியர் ஆரியரத்ன கலுஆரச்சி, சரத்சந்ர எதிரிசிங்க மற்றும் சிரேஷ்ட கலைஞர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

முன்வைக்கப்பட்டுள்ள இச் செயற்றிட்டத்தின் அபிவிருத்தி நோக்கமானது, “நாட்டின் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் தொற்றா நோய்களால் இலகுவில் பாதிக்கப்படத்தக்க சனத்தொகையினரில் அந்நோய்களைக் கண்டுபிடித்து முகாமைத்துவம் செய்தலை முன்னிலைப்படுத்தி, அடிப்படைச் சுகாதார சேவைகளின் தரத்தையும் பயன்பாட்டையும் அதிகரித்தல்” என்பதாகும்.

இந் நோக்கமானது, இலங்கையின் அடிப்படைச் சுகாதார சேவை முறைமையை மீளச் சீரமைத்தலூடாகவும், பலப்படுத்துவதனூடாகவும் அடையப்படும். விசேடமாக, இச் செயற்றிட்டம், கொள்கைகளையும் தரங்களையும் உருவாக்குவதிலும் அவற்றைப் பரப்புவதிலும் மற்றும் இந்த முறைமைக்குரிய துணை முறைமைகளுக்கும் ஆதரவளிக்கும்.
இச் செயற்றிட்டத்தின் அடிப்படைப் பயனாளர்கள், நாட்டின் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களைச் சேர்ந்த, அடிப்படைச் சுகாதார சேவை அரச நிறுவனங்களைப் பயன்படுத்துவோராக இருப்பர். இவ்வாறான பயனாளர்கள் சனத்தொகையின் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களாக இருக்க முடியும். இச் செயற்றிட்டத்தினால் பயன்பெறும் சமூகங்களுள், கடும் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது பாதிக்கப்படத்தக்க அபாயத்திலுள்ளவர்கள் இலக்காகக் கொள்ளப்படுவர். தொற்றா நோய்களுக்கான சேவைகளைப் பலப்படுத்தும் உபாயங்களைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கான கிடைக்கத்தக்க வளங்களை உருவாக்குவதிலும், மத்திய மற்றும் மாகாண மட்டங்களில் சுகாதார சேவை ஆளணியினரது திறன்களை மேம்படுத்துவதிலும் இச் செயற்றிட்டம் தலையீடு செய்யும்.
இச் செயற்றிட்டம் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கும்:
• பொதுச் சுகாதார சேவை முறைமையை மீளச் சீரமைத்துப் பலப்படுத்தும் உபாயங்களை நடைமுறைப்படுத்துதல்
• செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உதவிகளும் புத்தாக்கத்திற்கான நிதிகளும்
• எதிர்பாரா அவசர தேவைகளுக்கான பகுதி
செயற்றிட்டத்தை இயக்கும் குழுவொன்று தாபிக்கப்படுவதுடன், அது சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு மற்றும் உள்ளக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களது இணைத் தலைமையின் கீழ் செயற்படும். நிதி ஆணைக்குழுவின் செயலாளர், ஒன்பது மாகாணங்களினதும் பிரதம செயலாளர்கள், சுகாதார, போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சுப் பிரதிநிதிகள் மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மேலதிக அங்கத்தவர்களாகச் செயற்படுவார்கள்.
மேற்படி செயற்றிட்டத்திற்கான நிதியளிக்கும் ஒப்பந்தமானது, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க அவர்களாலும், உலக வங்கியின் சார்பில் இலங்கைக்கும் மாலதீவுக்குமான அதன் பணிப்பாளர் திருவாட்டி. இட் இஸட் ஸ்வராயி – றித்திஹூ (Ms. Idah Z Pswarayi – Riddihough) அவர்களாலும், 2019 ஜனவரி 23 இல், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

 பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நான்கு நாள் அரசமுறை பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இலங்கைக்கு பல சாதகமான நன்மைகளை பெற்றுக்கொண்டு நேற்றிரவு (19) நாடு திரும்பினார்.

ஜனாதிபதி அவர்களின் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான அரசமுறை விஜயம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமானது. பிலிப்பைன்ஸுக்கும் இலங்கைக்கும் இடையிலான 58 வருட இராஜதந்திர நட்புறவு வரலாற்றில் இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு அரசமுறை சுற்றுப்பயணத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் இந்த அரசமுறை சுற்றுப்பயணத்தின் விசேட அம்சமாக பிலிப்பைன்ஸ் லொஸ் பானோஸில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஐந்தாண்டு செயற்திட்டம் அமைந்துள்ளது. இலங்கை நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதில் வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டுக்கான தனது தலையாய கடமையாக கருதும் போதைப்பொருள் ஒழிப்பினை வெற்றிகொள்வதற்கான உதவிகளை வழங்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை இந்த சுற்றுப்பயணத்தில் பெற்றுக்கொண்ட மற்றுமொரு விசேட நன்மையாகும். அதற்கான தொழிநுட்ப ஆலோசனை சேவைகளை வழங்குவது தொடர்பில் கண்டறிவதற்காக பிலிப்பைன்ஸில் இருந்து இலங்கைக்கு விசேட நிபுணர் குழுவொன்று வெகுவிரைவில் வருகை தரவுள்ளதாக பிலிப்பைன்ஸ் போதைபொருள் ஒழிப்பு பணியகத்தை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி அவர்களுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.
கடந்த 15ஆம் திகதி மனிலா நகரில் அமைந்துள்ள நினோய் அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரை அந்நாட்டு வர்த்தக கைத்தொழில் அமைச்சர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர்.
தனது சுற்றுப்பயணத்தின் முதலாவது நிகழ்வாக பிலிப்பைன்ஸ் புரட்சியில் ஈடுபட்ட தேசிய வீரர்களை நினைவுகூரும் முகமாக மனிலா நகரின் வரலாற்று சிறிப்புமிக்க ரிஷால் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு ஜனாதிபதி அவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் பிலிப்பைன்ஸ் மலக்கன்யங்க் (Malacanang) ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) அவர்களினால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார உறவுகளை புதிய வழிகளில் முன்னெடுத்து செல்வது தொடர்பில் இரு நாட்டு அரச தலைவர்களும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐந்து புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் அரச தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் அவர்களால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு கடந்த 16ஆம் திகதி மலக்கன்யங்க் (Malacanang) ஜனாதிபதி மாளிகையில் விசேட இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. இதன்போது கையினால் வரையப்பட்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் உருவப்படம் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டமை இரு நாட்டு அரச தலைவர்களின் நட்பின் அடையாளமாக அமைந்திருந்தது.
பிலிப்பைன்ஸ் – இலங்கை அரச தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் பிலிப்பைன்ஸுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.
இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் பிலிப்பைன்ஸ் பாராளுமன்றத்தின் ஒருமித்த ஆதரவை வழங்குவதாக பிலிப்பைன்ஸ் பாராளுமன்ற சபாநாயகர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் தெரிவித்தார்.
தனது சுற்றுப்பயணத்தின் போது மனிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி அவர்கள், லொஸ் பானோஸில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தையும் பார்வையிட்டார். இந்த சுற்றுப் பயணத்தின் விசேட அம்சமாக சர்வதேச நெல் ஆராய்ச்சி மைய வளாகத்தின் ஒரு பகுதிக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பெயரை சூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாயத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரச தலைவர் என்பதால் அவருக்கு மதிப்பளிக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
1961ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை – பிலிப்பைன்ஸ் இராஜதந்திர உறவுகளுக்கு 58 ஆண்டுகள் நிறைவடையும் இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி அவர்களின் பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணம் நாட்டுக்கு பல நன்மைகள் பெறப்பட்ட நிலையில் நிறைவுபெற்றது.

 

 போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இலங்கைக்கு தேவையான தொழிநுட்ப உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தயார்

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான திட்டங்களுக்கும் இலங்கைக்கு உதவி

இலங்கையில் மூன்று முக்கிய திட்டங்களுக்காக 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அரச முறை பயணமொன்றை மேற்கொண்டு பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி அவர்கள் 17ம் திகதி முற்பகல் பிலிப்பைன்ஸ் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்து அதன் தலைவர் தகஹிகோ நாகஓ அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போதே ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இதற்கான இணக்கப்பாட்டை தெரிவித்தார்.
இந்த தொகையில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கான தூண்களைக்கொண்ட நெடுஞ்சாலை நிர்மாண திட்டத்திற்காக வழங்கப்படவுள்ளது ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய உப பிராந்தியத்திற்கான பொருளாதார உதவி வழங்கும் கொள்கை சட்டகத்தின் படி இந்த இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஞ்ஞான, தொழிநுட்ப, மனித வள அபிவிருத்தி திட்டத்திற்காகவும் இலங்கைக்கு 145 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி திட்டங்களுக்கான சாத்திய வள ஆய்வுகளுக்கான தொழிநுட்ப உதவி வழங்கும் முன்மொழிவு முறைமைக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாடுகளுக்கான உடன்படிக்கைகளில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹிகோ நாகஓ அவர்களும் கைச்சாத்திட்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இன்று இலங்கை முக்கியமான இரண்டு சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக தெரிவித்தார். வறுமையை ஒழித்தல், போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல் என்பனவே அந்த சவால்களாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
நாட்டுக்குள் சட்ட விரோத போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கு சுங்கத் துறைக்கு தேவையான தொழிநுட்ப மற்றும் நிபுணத்துவ அறிவை வழங்குவதற்கான வழிவகைகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்தார்.
இலங்கை இன்று வரட்சி மற்றும் வெள்ளம் ஆகிய இரண்டு வகையான பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவற்றுக்கு முகங்கொடுப்பதற்காக முறையானதொரு நிகழ்ச்சித் திட்டம் அவசியம் என்றும் தெரிவித்தார். அந்த வகையில் காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான உதவியை வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இணக்கம் தெரிவித்தார்.
பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தியதுடன், நாட்டில் சிறந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அது அத்தியாவசியமாகும் எனவும் குறிப்பிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், எதிர்பார்க்கப்பட்டுள்ள இலக்கினை முழுமையாக அடைய முடியாவிடினும் தற்போது இலங்கை சிறந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவ்வேலைத்திட்டத்தின் மூலம் இயலுமாகியுள்ளது தெரிவித்தார்.
சக்தி வள முகாமைத்துவம், விவசாயம், உட்கட்டமைப்பு வசதிகள், காலநிலை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதுடன், அவ்வுதவிகளை தொடர்ச்சியாக இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்தார். அத்துடன் நீர்ப்பாசனம், பெருந்தெருக்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளில் புதிய செயற்திட்டங்களுக்கு உதவியளிக்கவும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயக் கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதனூடாக நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பினை இதன்போது சுட்டிக்காட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் அதன்பொருட்டு விசேடமாக உதவியளிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், சுகாதாரத் துறையில் தற்போது இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தினை பாராட்டியதுடன், இலங்கையில் சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்துவதாக தலைவர் தெரிவித்தார்.
சுற்றாடல் பாதுகாப்பிற்காக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், இலங்கையின் வன அடர்த்தியை 28 – 32 சதவீதம் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும், அது தொடர்பாக சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் பாரிஸ் மாநாட்டின் போதும் குறிப்பிட்டதுடன், அவ்விடயம் தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரின் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் பயிர்களுக்கு விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு உடனடி நிகழ்ச்சித் திட்டமொன்றின் தேவை பற்றியும் ஜனாதிபதி அவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருடன் கலந்துரையாடினார்.
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக 1966ஆம் ஆண்டு முதல் இலங்கையுடன் மிகவும் பலமான உறவுகளை கட்டியெழுப்பி ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கிவரும் உதவி குறித்து நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பிராந்தியத்தின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்காகவும் ஆசிய அபவிருத்தி வங்கி வழங்கிவரும் ஒத்துழைப்புகளையும் பாராட்டினார்.
இங்கு கருத்து தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹிகோ நாகஓ அவர்கள் தான் இலங்கைக்கு பல விஜயங்களை மேற்கொண்டிருப்பதை நினைவுகூர்ந்ததுடன், பயங்கரவாத சவாலை வெற்றி கொண்டதன் பின்னர் இதுவரையில் இலங்கை அடைந்துள்ள மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இன்று ஆசியாவிலேயே சுற்றுலாத் துறைக்கு பொருத்தமான ஓரிரு நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹிகோ நாகஓ தெரிவித்தார்.

 நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர, சீனத் தூதர் மேதகு செங் ஸீயுவான் அவர்களையும் அவருடனான தூதுக்குழுவையும் திறைசேரியில் 11ம் திகதி சந்தித்தார். அமைச்சர் அவர்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் மீளவும் தொடர்புபடுவது குறித்து சீனத் தூதருக்கு விளக்கமளித்ததுடன், சீன அரசாங்கம் இலங்கைக்குத் தொடர்ந்தும் வழங்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

சீனத் தூதர் மேதகு செங் ஸீயுவான் அவர்கள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தனது நாட்டின் ஆதரவை மீள வலியுறுத்திக் கூறியதுடன், சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் மீளவும் தொடர்புபடுவது குறித்த அவர்களது ஆதரவிற்கு உறுதியளித்தார்.
இந்தக் கூட்டத்தில் திறைசேரியின் செயலாளர் கலாநிதி. ஆர்.எச்.எஸ் சமரதுங்க, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் திரு. மனோ தித்தவெல மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

Latest News right

2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

டிச 05, 2019
2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

ஊடக அறிக்கை

டிச 05, 2019
எதிர்வரும் டிசம்பர் 12, 2019 இல் நடைபெறவுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்தேர்தலுக்கான…

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

டிச 05, 2019
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை…

தொடர்பாடல் பிரிவு பிரதமரினால் ஆரம்பித்து வைப்பு

டிச 04, 2019
பொதுமக்கள் பிரச்சினைகளை இலகுவாக அணுகுவதற்கென புதிய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவொன்றை…

இலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி

நவ 29, 2019
பயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன்தடுத்து வைத்துள்ள அனைத்து…

  சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் குறிப்பிடப்படும் சம்பவம்

நவ 29, 2019
2019 நவம்பர் 25 திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில்…

ஜனாதிபதி புது டில்லியை சென்றடைந்தார்

நவ 29, 2019
இரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய…

தேர்தல்களின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஊடக ஒழுங்கு விதிகளை பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பது தொடர்பான கலந்துரையாடல்

நவ 27, 2019
எதிர்வரும் தேர்தல்கள் சுயாதீனமாகவும் அமைதியாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்குத்…