கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
அரச நிறுவனங்களின் செயற்றிறனை மேம்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதற்கு பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் அவசியம் என அவர் கூறினார். இதற்காக அரச ஊழியர்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க மற்றும் ஒருங்கிணைந்த தொழிற்சங்கப் பிரநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.