இயந்திரமாய் உருண்டோடும் வாழ்க்கையில் குடும்பத்துக்கு நிம்மதி தருவது பெண் குழந்தை

கடந்த 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் பிரகடனம் செய்யப்பட்டது. பெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை உலகுக்கு வெளிப்படுத்தி, அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் உருவாக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

‘மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...’ என்ற கவிமணியின் வரிகளும் ‘சட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்ற பாரதியின் வரிகளும் பெண் குழந்தைகளின் சிறப்பையும், ஆளுமையையும் எடுத்துச் சொல்கின்றன.

ஆயிரம் கவிஞர்கள் பெண்ணியம் பேசினாலும், பல்வேறு தடைகளைத் தாண்டியே பெண்கள் சமனிலை பெற வேண்டியிருக்கிறது.

‘கல்வி அறிவிலா பெண்கள் களர் நிலம். அந்நிலத்தில் புற்கள் விளைந்திடலாம். நல்ல புதல்வர்கள் விளைவதில்லை’ என்ற பாரதிதாசன் சொன்ன வரிகள் இப்போது பொய்த்துப் போகும் அளவிற்குப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.