சமீபத்திய செய்தி

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பல்வேறு பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகளால் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டி உள்ளது.

அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக, தேசிய தேவை எனக் கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. அதற்காக அமைச்சுப் பதவிகளை ஏற்று, தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஒன்றிணையுமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மிரிஹாணையிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கருகில் உருவான ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறுவதற்கு அடிப்படைவாத குழுவொன்றே காரணமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்கலவரத்துக்கு காரணமான பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் திட்டமிட்டு செயற்படும் அடிப்படைவாதக் குழுவென்பது தெரியவந்திருப்பதாகவும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதற்காக இலங்கை வந்திருந்த பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.எ.கே.அப்துல் மோமனுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸிற்குமிடையில் கடந்த 30 ஆம் திகதி இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வர்த்தக உடன்படிக்கை, உயர் கல்விக்கான ஒத்துழைப்பு, ஆடைக் கைத்தொழிலை தரமுயர்த்துதல், கொழும்பு மற்றும் சிட்டாகொங் துறைமுகங்களை இணைத்தல் மற்றும் சர்வதேச வர்த்தகத்துடன் இணைதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
 

5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதற்காக இலங்கை வந்திருந்த தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான டொன் பிராமுட்வினெய் கடந்த 30 ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இச்சந்திப்பின்போது தேராவாத பௌத்தம், புத்த சாசனம், மதகுருமார்களின் பிரயாணம், இலங்கை இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், நெற்பயிர்ச் செய்கையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

தற்போது நிலவுகின்ற உலகளாவிய நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை வளப்படுத்துவதற்கும் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். சவால்கள் இருந்தபோதிலும், பிம்ஸ்டெக் நாடுகளின் எதிர்காலம் தெளிவாகவும் வலுவாகவும் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தை மையமாகக்கொண்டு, இணைய வழியாக (Online)  இடம்பெற்ற “வங்காள விரிகுடா சார்ந்த பல்தரப்பு தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு” (பிம்ஸ்டெக்) அமைப்பின் ஐந்தாவது அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இந்த ஆண்டு மாநாடு இலங்கையில் நடைபெற்றது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிம்ஸ்டெக் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

வங்காள விரிகுடாவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தாய்லாந்தின் பேங்கொக் தலை நகரத்தில் 1997 ஜூன் மாதம் பிம்ஸ்டெக் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, மனித வள மேம்பாடு, விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, கல்வி, தொழில் மற்றும் தொழிநுட்ப துறைகளுக்காக பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை வழங்குவதும் பொருளாதாரம், சமூகம், தொழிநுட்பம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் செயற்பாட்டு ரீதியான மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏறக்குறைய இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு புத்துயிர் பெற்ற சுற்றுலா கைத்தொழிலானது பிம்ஸ்டெக் நாடுகளுக்கு பாரிய ஊக்கத்தை அளிக்கிறது. எனவே சுற்றுலா கைத்தொழில் தொடர்பில் பிம்ஸ்டெக் நிகழ்ச்சி நிரலில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வங்காள விரிகுடா பிராந்தியம் உலக உறவுகளுக்கும் வர்த்தகத்திற்கும் மிகவும் முக்கியமானது. கடல் பிராந்தியத்தைப் போன்று நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தணிக்க கடல்சார் நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையிலான புலனாய்வுத் தகவல் பகிர்வு மற்றும் அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி அவர்கள்,  இதன் மூலம்  அனைத்து நாடுகளின் நலனுக்காக பிராந்தியத்தின் பாதுகாப்பை மேம்படுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

பிம்ஸ்டெக் செயலகம் வெற்றிகரமாக செயற்பட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்தார்.

அமைப்பின் நாடுகளுக்கு இடையே செயற்பாடு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த தேவையான சட்ட கட்டமைப்புகளை வகுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. விவசாயம் உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளுக்கு பெறுமதி கூட்டுவதன் மூலம் இந்தத் துறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தினார்.

உலகத் தொற்றுநோயைப் போலவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இப்பிராந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட தயாராக இருக்க வேண்டும் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் தெரிவித்தார். அதேபோன்று அமைப்பின் 14 துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை முழுமையாக செயற்படுத்த அனைத்து உறுப்பு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஷேக் ஹசீனா அவர்கள் குறிப்பிட்டார்.

பிராந்தியத்தில் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய பூட்டான் பிரதமர் வைத்தியர் லோட்டே டிஷெரின் அவர்கள், பொதுமக்களுக்கு இலவச அல்லது மலிவு விலையில் இணைய வசதிகளை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா அவர்கள், தீவிரவாத செயல்களை ஒடுக்கவும், மனித கடத்தல் மற்றும் பண மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேம்பட்ட தொழிநுட்பம் மற்றும் ஒத்துழைப்பு தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.

மியான்மர் வெளிவிவகார அமைச்சர் வுன்னா முன்க் இல்வின் அவர்கள், நிலவுகின்ற சவால்களுக்கு மத்தியில்,  உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ப சுற்றுலா கைத்தொழிலை மேம்படுத்துவதில் உறுப்பு நாடுகளுக்கு உதவ தாய்லாந்து தயாராக உள்ளது என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா  அவர்கள் தெரிவித்தார்.

பிம்ஸ்டெக்  சாசனத்தை நிறைவேற்றிக்கொள்வது, பல சட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் மற்றும் 2022 – 2023ஆம் ஆண்டுக்கான பிம்ஸ்டெக்கின் தலைமைப் பதவியை தாய்லாந்திடம் ஒப்படைப்பதும் இந்த மாநாட்டுக்கு இணையாக இடம்பெற்றன.

 

பாராளுமன்றங்களுக்கிடையிலான 144வது அமர்வு மார்ச் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இந்தோனேஷியாவின் பாளி நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோருடன் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

இந்தோனேஷியாவின் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் ஜொனி ஜீ.ப்ளேட் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இவ்விஜயத்தின்போது இடம்பெற்ற முக்கிய நிகழ்வாகும். அமைச்சர்களுடனான இச்சந்திப்பில் இந்தோனேஷியாவின் ஊடக பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இலங்கையின் தொடர்பாடல் துறைக்கு பயனுள்ள பல தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இச்சந்திப்பு அமைந்தது.

240 மில்லியன் சனத்தொகை பரந்து வசிக்கும் 17 ஆயிரம் தீவுகளில் விஸ்தரிக்கப்பட்டுள்ள 47 ஆயிரம் அச்சு, இலத்திரனியல் மற்றும் நவீன ஊடகங்களைக் கொண்டிருக்கும் இந்தோனேஷிய அரசு, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் அதேநேரம் உலகின் நான்காவது மிகப்பெரிய ஜனநாயக அரசாக செயற்படும் விதம் அனைவரதும் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக இதன்போது வெகுசனஊடக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

49 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் பத்திரிகை சபை, இந்தோனேஷியாவின் பத்திரிகை ஆணைக்குழு மற்றும் இலத்திரனியல் ஊடக ஆணைக்குழுவுடன் புதிய சீர்திருத்தத்துக்கான ஒரு புரிந்துணர்வுக்கும் இச்சந்திப்பினூடாக வரமுடிந்துள்ளது.

இலங்கையில் முதற்தடவையாக நியமிக்கப்பட்டு வரும் பட்டய வெகுசன ஊடக கற்கை நிலையம் தொடர்பில் இந்தோனேஷிய ஊடக பிரமுகர்கள் தமது மகிழ்சியை வெளிப்படுத்திய அதேநேரம் இந்நிறுவனம் பிராந்தியத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்குமான மிகச்சிறந்த முதலீடாகுமென்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகங்களில் ஊடகத்துறை சார்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசிலை இலங்கை ஊடகவியலாளர்களுக்கு அறிமுகம் செய்வதும் தவறான தகவல்கள் (Misinformation & Disinformation) கருத்து சுதந்திரத்தை பாதிக்காத வகையில் பாதுகாப்பது தொடர்பான இந்தோனேஷியாவின் அனுபவத்தை பரிமாறிக்கொள்வதும் இச்சந்திப்பில் இடம்பெற்ற முக்கிய விடயங்களாகும்.

நம்பிக்கை மற்றும் சகோதரத்துவத்துடன் இடம்பெற்ற இச்சந்திப்பின் மூலம் எமது நாட்டுக்கு பயனுள்ள பல தகவல்களை பெற்றுக்கொண்டதாக கூறிய அமைச்சர்,பொருளாதாரம் மற்றும் ஜனநாயக ரீதியான வெற்றியுடன் உலகின் பலம் பொருந்திய அரசாக முன்னோக்கிச் செல்வதற்கு இந்தோனேஷிய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்துக் கொண்டார்.

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. ஏதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மியான்மாரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இணையமூடாக இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
ஏதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உச்சி மாநாட்டை தலைமை தாங்கவுள்ளார். இதன்போது பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் இணையமூடாக உச்சி மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.
உச்சி மாநாடு மற்றும் அதனை தொடர்ந்து வரும் கூட்டங்களில் பிரதிநிதிகள் ஒரு பிராந்தியக் குழுவாக பிம்ஸ்டெக் மாநாட்டின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவர். இதன்போது, பிம்ஸ்டெக்கிற்கான சாசனம் ஒன்று பிரகடனப்படுத்தப்படும் அதேநேரம் பல சட்ட ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

 
 
இரத்மலானை விமான நிலையம் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 54 வருடங்களுக்குப் பின்பே இரத்மலானை விமான நிலையம் மீண்டும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இரத்மலானை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்ட பின்னர் முதலாவது விமானம் இன்று (27) காலை 8.45ற்கு மாலைதீவிலிருந்து இலங்கையை வந்தடைந்தது. 
 
இதற்கமைய முதற்கட்டமாக மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கு இடையில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. இந்தியா மற்றும் மாலைதீவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்தார். 
 
இந்த விமான நிலையம் 22 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 

 

உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் (22) நடைபெற்றது.

இந்த ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் "நிலத்தடி நீர் : புலப்படாததை புலப்படச் செய்யும்" (Groundwater making the invisible visible) என்பதாகும். இதன் மூலம் நீர் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு, விவசாயம், கைத்தொழில், சூழல் கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றங்களின் தழுவலுக்கு  நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

களுத்துறை மாவட்ட மக்கள் இதுவரை எதிர்நோக்கிய, குடிநீரில் கடல்நீர் கலக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் களுத்துறை, அகலவத்தை, மத்துகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதியினால் இணையமூடாக, மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

ஆயிரம் கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கான சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்தமை தொடர்பான, மகஜர் ஒன்றை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஜனாதிபதியிடம் கையளித்தார்.

சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் மூலம் செயற்படும், சமூக அடிப்படையிலான அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான காப்புறுதி முறையொன்றை ஆரம்பித்தல் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டது.

அனைவருக்கும் சுத்தமான நீரை வழங்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025இல் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் ஆகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையின் விசாலமான கடல்நீரை மறுசுழற்சி செய்யும் திட்டம், யாழ்ப்பாணக் குடாநாட்டை மையப்படுத்திய வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது விலை அதிகம் என்றாலும் வட மாகாண மக்களின் தாகத்தை  தீர்ப்பதற்கு செய்ய வேண்டியதொன்றாகுமென்று பிரதமர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் ஊடாக நுகர்வோருக்கு சேவைகளை வழங்கும் தெற்காசியாவின் முதலாவது பயன்பாட்டு நிறுவனமாக டிஜிட்டல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

நீர் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு அனுசரணை வழங்குகின்ற 08 சர்வதேச நிறுவனங்களுக்கு நன்றி நவிலல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் சிறந்த முகாமையாளர், சிறப்பாக செயற்படும் உத்தியோகத்தர் அலுவலகம் மற்றும் சிறந்த சமூக நீர் சங்கம் என்பவற்றுக்கான "ஜனாதிபதி விருதுகள்" வழங்கி வைக்கப்பட்டமை, இவ்வருட நீர் தினத்தின் சிறப்பம்சமாகும்.

இராஜாங்க அமைச்சர்கள், தூதுவர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆலோசகர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் உள்ளிட்ட பலரும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

Ø மாநாட்டை ஏற்பாடு செய்தல் நேர்மையான ஒரு முயற்சியாகும்.  அரசியல் இலாபம் பெறுவதற்கு அல்ல...

Ø கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு வருகை தந்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி...

Ø பங்கேற்காத கட்சிகளுக்கும் வந்து தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு அழைப்பு...

                                                                 சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.

 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று(23) சர்வகட்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய மக்கள் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா மகஜன கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை அமைப்பு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

லங்கா சமசமாஜ கட்சியின் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் வண. அத்துரலியே ரத்தின தேரர், 11 பங்காளிக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்த்து இந்த மாநாடு கூட்டப்பட்டது. கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர். நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் சர்வகட்சி மாநாட்டிற்கு எதிர்காலத்தில் வழங்குவதாகவும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தற்போதைய பொருளாதார நிலைமையை மாநாட்டில் முன்வைத்தார்.

சர்வகட்சி மாநாடு நேர்மையான ஒரு முயற்சி ஆகும். இதில் எந்தவித அரசியல் இலாபமோ குறுகிய நோக்கமோ கிடையாது எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றதுடன், அதனை தேசிய தேவையாகக் கருதி பங்கேற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார். கலந்து கொள்ளாத ஏனைய கட்சிகளுக்கும் வருகை தந்து, தமது நிலைப்பாட்டை சர்வகட்சி மாநாட்டின் முன்னிலையில் தெரிவிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மீளாய்வு செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்கி பயனுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை அமைக்க முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலரும் இம்மாநாட்டில்  கலந்துகொண்டனர்.

 

   
 

மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். 1950ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது.

இத்தொழிற்சாலை 728 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தாலும் தற்போது அதன் பெரும்பாலான பகுதிகள் குடியிருப்புக்களாக மாறியுள்ளன. 
அமைச்சரவை தீர்மானத்துக்கமைய எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பயன்படுத்தக்கூடிய கட்டடங்களை தவிர ஏனைய கட்டடங்களை இடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் பிரதமரின் இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது தொழிற்சாலையின் 80 வீதமான கட்டடங்களை புனரமைத்து பயன்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது. அதற்கமைய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை புனரமைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

2022 வானொலி அரச விருது விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை வானொலி துறையின் வளர்சிக்கு பங்களிப்புச் செலுத்திய வானொலி கலைஞர்களை கௌரவிப்பதே இவ்விருது வழங்கும் நிகழ்வின் நோக்கமாகும். இந்நிகழ்வை கலாசார விவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடதக்கது. 

 

Latest News right

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2025
நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின்…

தூதுவர்கள் ஒன்பது பேர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

டிச 02, 2024
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று…

இறுதி ரந்தோலி ஊர்வலத்தை பார்வையிட ஜனாதிபதி இணைந்து கொண்டார்

ஆக 20, 2024
Default Image
கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவின் இறுதி…

ஊடக விதிமுறைகள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதித் தேர்தல் ஆணையாளர்

ஆக 09, 2024
Default Image
தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்…

தேர்தல் காரணமாக IMF கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை - அமைச்சரவை பேச்சாளர்

ஆக 06, 2024
Default Image
தேர்தல் அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக 2027 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
சிறந்த சங்கப் பிதாமகராக இருந்து காலமான கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
மறைந்த கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர் கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு…