உலக நீர் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் (22) நடைபெற்றது.

இந்த ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் "நிலத்தடி நீர் : புலப்படாததை புலப்படச் செய்யும்" (Groundwater making the invisible visible) என்பதாகும். இதன் மூலம் நீர் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு, விவசாயம், கைத்தொழில், சூழல் கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றங்களின் தழுவலுக்கு  நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

களுத்துறை மாவட்ட மக்கள் இதுவரை எதிர்நோக்கிய, குடிநீரில் கடல்நீர் கலக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் களுத்துறை, அகலவத்தை, மத்துகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதியினால் இணையமூடாக, மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

ஆயிரம் கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கான சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்தமை தொடர்பான, மகஜர் ஒன்றை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஜனாதிபதியிடம் கையளித்தார்.

சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் மூலம் செயற்படும், சமூக அடிப்படையிலான அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான காப்புறுதி முறையொன்றை ஆரம்பித்தல் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டது.

அனைவருக்கும் சுத்தமான நீரை வழங்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025இல் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் ஆகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையின் விசாலமான கடல்நீரை மறுசுழற்சி செய்யும் திட்டம், யாழ்ப்பாணக் குடாநாட்டை மையப்படுத்திய வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது விலை அதிகம் என்றாலும் வட மாகாண மக்களின் தாகத்தை  தீர்ப்பதற்கு செய்ய வேண்டியதொன்றாகுமென்று பிரதமர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் ஊடாக நுகர்வோருக்கு சேவைகளை வழங்கும் தெற்காசியாவின் முதலாவது பயன்பாட்டு நிறுவனமாக டிஜிட்டல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

நீர் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு அனுசரணை வழங்குகின்ற 08 சர்வதேச நிறுவனங்களுக்கு நன்றி நவிலல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் சிறந்த முகாமையாளர், சிறப்பாக செயற்படும் உத்தியோகத்தர் அலுவலகம் மற்றும் சிறந்த சமூக நீர் சங்கம் என்பவற்றுக்கான "ஜனாதிபதி விருதுகள்" வழங்கி வைக்கப்பட்டமை, இவ்வருட நீர் தினத்தின் சிறப்பம்சமாகும்.

இராஜாங்க அமைச்சர்கள், தூதுவர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆலோசகர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் உள்ளிட்ட பலரும்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.