பாராளுமன்றங்களுக்கிடையிலான 144வது அமர்வு மார்ச் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இந்தோனேஷியாவின் பாளி நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோருடன் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

இந்தோனேஷியாவின் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் ஜொனி ஜீ.ப்ளேட் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இவ்விஜயத்தின்போது இடம்பெற்ற முக்கிய நிகழ்வாகும். அமைச்சர்களுடனான இச்சந்திப்பில் இந்தோனேஷியாவின் ஊடக பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இலங்கையின் தொடர்பாடல் துறைக்கு பயனுள்ள பல தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இச்சந்திப்பு அமைந்தது.

240 மில்லியன் சனத்தொகை பரந்து வசிக்கும் 17 ஆயிரம் தீவுகளில் விஸ்தரிக்கப்பட்டுள்ள 47 ஆயிரம் அச்சு, இலத்திரனியல் மற்றும் நவீன ஊடகங்களைக் கொண்டிருக்கும் இந்தோனேஷிய அரசு, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் அதேநேரம் உலகின் நான்காவது மிகப்பெரிய ஜனநாயக அரசாக செயற்படும் விதம் அனைவரதும் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக இதன்போது வெகுசனஊடக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

49 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் பத்திரிகை சபை, இந்தோனேஷியாவின் பத்திரிகை ஆணைக்குழு மற்றும் இலத்திரனியல் ஊடக ஆணைக்குழுவுடன் புதிய சீர்திருத்தத்துக்கான ஒரு புரிந்துணர்வுக்கும் இச்சந்திப்பினூடாக வரமுடிந்துள்ளது.

இலங்கையில் முதற்தடவையாக நியமிக்கப்பட்டு வரும் பட்டய வெகுசன ஊடக கற்கை நிலையம் தொடர்பில் இந்தோனேஷிய ஊடக பிரமுகர்கள் தமது மகிழ்சியை வெளிப்படுத்திய அதேநேரம் இந்நிறுவனம் பிராந்தியத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்குமான மிகச்சிறந்த முதலீடாகுமென்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகங்களில் ஊடகத்துறை சார்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசிலை இலங்கை ஊடகவியலாளர்களுக்கு அறிமுகம் செய்வதும் தவறான தகவல்கள் (Misinformation & Disinformation) கருத்து சுதந்திரத்தை பாதிக்காத வகையில் பாதுகாப்பது தொடர்பான இந்தோனேஷியாவின் அனுபவத்தை பரிமாறிக்கொள்வதும் இச்சந்திப்பில் இடம்பெற்ற முக்கிய விடயங்களாகும்.

நம்பிக்கை மற்றும் சகோதரத்துவத்துடன் இடம்பெற்ற இச்சந்திப்பின் மூலம் எமது நாட்டுக்கு பயனுள்ள பல தகவல்களை பெற்றுக்கொண்டதாக கூறிய அமைச்சர்,பொருளாதாரம் மற்றும் ஜனநாயக ரீதியான வெற்றியுடன் உலகின் பலம் பொருந்திய அரசாக முன்னோக்கிச் செல்வதற்கு இந்தோனேஷிய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்துக் கொண்டார்.