சமீபத்திய செய்தி

 

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

ஶ்ரீ தலதா உள்ளிட்ட அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதமும் அதற்கு பலமாக அமைய வேண்டும்
- கண்டி பெரஹரா நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த போதிலும் அந்த நெருக்கடியில் இருந்து நாடு நிச்சயம் மீண்டு வரும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கு தலதா மற்றும் அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதம் பெரும் பலமாக அமையுமென சுட்டிக்காட்டினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஶ்ரீ தலதா பெரஹரா விழா மற்றும் வருடாந்த நான்கு மகா விகாரைகளின் ஊர்வலம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற வைபவத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வைக் கொண்டுவரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக வந்த தியவடன நிலமே நிலங்க தேல உள்ளிட்ட நான்கு மகா தேவாலயங்கள் உள்ளிட்ட ஏனைய தேவாலயங்களின் நிலமேக்கள் ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியினால் வரவேற்கப்பட்டனர்.

பின்னர் தியவதன நிலமே சம்பிரதாயபூர்வமாக பெரஹரா நிறைவடைந்தமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஓலையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

ஊர்வலத்தில் பயணித்த யானைகளுக்கு அடையாள ரீதியாக உபசாரம் செய்யும் வகையில் ஜனாதிபதி "சிந்து" எனும் யானைக்கு பழங்கள் வழங்கி உபசரித்தார்.

பெரஹராவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சம்பிரதாயபூர்மாக பரிசுகள் மற்றும் விருதுகளை ஜனாதிபதி வழங்கி வைத்ததுடன், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் 07 அதி விசேட விருதுகள் உள்ளிட்ட 162 விருதுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. எசல பெரஹரா அறக்கட்டளை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன வருடாந்தம் இதற்கான அனுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் வரலாற்றுப் புகழ்மிக்க பெரஹரா (ஊர்வலம்) நிறைவு பற்றிய விடயங்கள் அடங்கிய அறிவிப்பை ஜனாதிபதி தலைமையிலான சபையில் சமர்ப்பித்தார்.

கிராமிய விகாரைகளுக்கான "எசல பெரஹரா அறக்கட்டளை" யிற்கான நிதியுதவி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டதுடன், "புனித தலதா கலாசாரம்" எனும் நூலும் இதன்போது ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

 

கண்டி எசல பெரஹெரவின் இறுதி ரந்தொலி பெரஹெர இன்று (11) இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அவர்கள் கண்டிக்கு வருகைதந்திருந்தார்.

இதேவேளை கண்டி எசல பெரஹெரவின் உத்தியோகப்பூர்வ இறுதி நிகழ்வு கண்டியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் நாளை (12) நடைபெறவுள்ளது.

கோவிட்-19 தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இவ்வருடம் ரந்தொலி பெரஹெர வெகுவிமர்சையாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

இலங்கையின் சினிமா துறை மற்றும் திரைப்படக் கலாசாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய திரைப்படக் கூட்டுதாபனத்தை அபிவிருத்தி செய்வதற்கும் தேசிய சினிமா கொள்கையொன்றை அமுல்படுத்துவது தொடர்பிலான திட்டமொன்றை நிறுவுவதுக்குறித்தும் கலந்துரையாடும் விசேட சந்திப்பொன்று வெகுசன ஊடக அமைச்சில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது. (10)

தேசிய திரைப்படக் கூட்டுதாபனத்தின் தலைவராக புதிதாக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி தீபால் சந்திரரட்ன திரைப்பட துறையில் தேர்ச்சிப்பெற்றவர்கள் கலைஞர்கள் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அத்துறையுடன் தொடர்புபட்ட பலரினதும் கருத்துக்களைப் பெறுவதே இச்சந்திப்பின் நோக்கமாகும்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன தற்போதைய இளைஞர்கள் மத்தியில் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்கும் வழக்கம் குன்றி வருவதனால் மக்களை கவரும் வகையில் புதிய சினிமா கலாசாரமொன்றை நாட்டில் உருவாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

அத்துடன் சினிமா என்பது ஒரு கலை.எனவே இத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் இதற்கான திட்டங்களும் கொள்கைகளும் வடிவமைக்கப்பட வேண்டுமென்றும் அவர் இதன்போது கூறினார்.

 

அனைத்துக் கட்சிகளுக்கும் நியாயமான  பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு

ஆட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.

ரிஷாத், மனோ, சீ.வி, ஹக்கீம், அனுர பிரிதர்ஷன ஆகியோருடன் ஜனாதிபதி சந்திப்பு

 

ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதே தமது நோக்கமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடன் (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ACMC), பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட குழுவினர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தன.

பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை நியமிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மேலும் பல இடைக்கால குழுக்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை தாம் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய சபையை ஸ்தாபிப்பதே பிரதான இலக்கென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவமும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் முழுமையான பிரதிநிதித்துவமும் அவசியமானதெனவும் தெரிவித்தார்.

குழுத் தலைவர்களுக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு சமமான அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கும் தேவையான சந்தர்ப்பங்களில்  அவர்களை அமைச்சரவைக் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளச் செய்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது விளக்கினார்.

குழு முறைமையை பிரதிநிதித்துவம் செய்வதா, அல்லது அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதா என்பதை அந்தந்தக் கட்சிகள் கலந்துரையாடி தமக்கு அறிவிக்குமாறும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 

பாராளுமன்றத்தை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாத்து, ஜனநாயகத்தை பாதுகாத்த இராணுவ வீரர்களுக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகும்.-ஜனாதிபதி தெரிவிப்பு.

நிறைவேற்றுத்துறையை கையகப்படுத்தி, சட்டத்துறையை முடக்கிய வன்முறையாளர்களை ஒடுக்கி ஜனநாயகத்தைப் பாதுகாத்த இராணுவத்தினருக்கு தேசத்தின் கௌரவம் உரித்தாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

பெலவத்த, அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (09) முற்பகல் விசேட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், இராணுவத்தினரை சந்தித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்று வன்முறையாளர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து சட்டத்துறையை முடக்கியிருந்தால் நாடு ஆட்சியை இழந்திருக்கும் எனவும் அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் நிலைமை முற்றிலும் மாற்றமாக அமைந்திருக்கும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் அமைதியான முறையில் அந்த நடவடிக்கையை முன்னெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.

இராணுவத் தலைமையக வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதி அவர்களை இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே வரவேற்றதுடன், பின்னர் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் உன்னத இடமான பாராளுமன்ற வளாகத்துக்குள் வன்முறையாளர்கள் பிரவேசிப்பதை வெற்றிகரமாக தடுத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வைத்ததோடு, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளுடன் குழுப் புகைப்படத்தில் தோன்றியதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதிதிகளின் குறிப்பேட்டில் குறிப்பொன்றையும் இட்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், “பாராளுமன்றத்தைப் பாதுகாத்தமைக்காக உங்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இன்று இந்த விசேட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். பலருக்கு இதன் முக்கியத்துவம் தெரியாது. எனவே விஷேடமாக இதைப் பற்றி சில விடயங்களைக் குறிப்பிட விரும்பினேன். இந்த நாட்டைப் பாதுகாப்பதும், இந்த நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் உங்களின் தலையாய கடமையாகும்.

மக்களின் இறையாண்மையை நடைமுறைப்படுத்த 03 பிரதான நிறுவனங்கள் உள்ளன. பாராளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை. இந்த 03 நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், இந்த நாடு கட்டுப்பாட்டை இழக்கும். அரசியலமைப்பு சிதையும். ஜனநாயகம் இழந்துவிடும். அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில்தான் நீங்கள் பாராளுமன்றத்தை பாதுகாத்தீர்கள்.

நிகழ்வுகள் பற்றி பேசுகையில், ஜூலை 09, முன்னாள் ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகை வன்முறையாளர்களால் கைப்பற்றப்பட்டது, பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை செலுத்தும் ஜனாதிபதி அலுவலகம் கையகப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியிடம் நடைமுறைப்படுத்த எந்த நிறுவனமும் இல்லை. மாலையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான "அலரி மாளிகை" கையகப்படுத்தப்பட்டது. அந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. அப்போது முன்னாள் ஜனாதிபதி கொழும்பில் இல்லாததாலும், அவர் இருக்கும் இடம் தெரியாததாலும், நான் பதவி விலகுவேன் என்ற நம்பிக்கையில் எனது வீட்டிற்கு தீ வைத்தார்கள். ஆனால் சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் பிரதமர் அலுவலகம் மாத்திரம் இருந்தது.

கடந்த 13ம் திகதி திரும்பி வந்து பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றினர். அப்போது நிர்வாகத்தை இயக்க எந்தவொரு அலுவலகமும் இல்லை. அப்போது ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகையும் இல்லாமல் போய்விட்டது. நிறைவேற்றுத்துறையாக, இயங்குவதற்கு எந்தவொரு இடமும் இருக்கவில்லை. மாலையில் நிலைமை மாறியது. பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். பாராளுமன்றத்தை கைப்பற்றினால், சட்டத்துறையை அமுல்படுத்த முடியாது. சட்டத்துறையை அமுல்படுத்த முடியாவிட்டால், நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை.

நீதிமன்றத்தை சுற்றிவளைத்து நீதிமன்றத்தை நிறுத்துவது எளிதான காரியம். மற்ற இரண்டு நிறுவனங்களைப் போல அல்ல. பாராளுமன்றத்தை இழந்தால் அது பெரிய பிரச்சனையாகிவிடும். அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. சபாநாயகருக்கு தெரியும், இந்த குழு வருவதை அறிந்ததும், கட்சி தலைவர்கள் கூட்டத்தை நிறைவு செய்தார். பாராளுமன்றத்தை பாதுகாக்க யாரும் இருக்கவில்லை. பாராளுமன்றம் வீழ்ந்தால் அரசியல் அமைப்பு பறிபோகும். எனவே, அவ்வேளையில் பாதுகாப்புச் சபையின் தலைவர்களிடம் குறிப்பாக சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் லியனகே ஆகியோரிடம் பாராளுமன்றத்தைப் பாதுகாக்குமாறு கூறினேன். பாராளுமன்றத்தை இழந்தால் ஆட்சி இல்லாமல் போகும். பாராளுமன்றம் இல்லாததால், பாதுகாப்பு அமைச்சை செயற்படுத்த முடியாது. அதனால்தான் உங்களிடம் அந்த செயற்பாட்டை ஒப்படைத்தேன்.

அதன்படி பாராளுமன்றத்தை கைப்பற்ற வந்தவர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களில் பலர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு இருந்ததால் அடுத்த நாளே நாட்டில் நிலைமை மாறியது. பாராளுமன்றம் பாதுகாக்கப்படாவிட்டால் இன்று நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

இது வடக்கில் பார்த்த பெரிய யுத்தங்கள் போல் இல்லை, ஜனநாயகத்தை பாதுகாக்க நீங்கள் எடுத்த ஒரு நடவடிக்கை. அன்று பயங்கரவாதத்தை ஒழித்தது போல் ஜனநாயகத்தையும் பாதுகாத்தீர்கள். இந்தப் பாராளுமன்ற கட்டடத்தை பாதுகாத்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு இடமளித்ததன் மூலம் அரசியலமைப்பு ரீதியான கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் நாடும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்போது இருப்பது பாராளுமன்றத்தை முன்னோக்கி கொண்டு செல்வதே ஆகும். பாராளுமன்றத்தை முன்னோக்கி கொண்டு சென்று பா.உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். உங்களின் நடவடிக்கை இப்போது முடிந்துள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

புதிய அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வர நாம் முயற்சிக்கிறோம். புதிய பாராளுமன்ற சீர்திருத்த முன்மொழிவுகளை கொண்டு வந்து சர்வகட்சி ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது பற்றி கலந்துரையாடப்படுகிறது,

இப்போது உங்கள் கடமையை செய்யுங்கள். இப்போது பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மற்றும் சபாநாயகர் அவர்களிடம் தயவு செய்து இதனை பாராளுமன்றத்தில் நினைவூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த அர்ப்பணிப்பிலிருந்து நாம் பயனடைய விரும்பினால், அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை மீண்டும் நாட்டின் நலனுக்காக செயல்படுத்த வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டுக்காக, பாராளுமன்றத்துக்காக, அரசாங்கத்துக்காக நன்றி தெரிவிக்கிறேன். இந்த நடவடிக்கையை எடுத்ததால், இப்போது எமக்கு நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியும். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால், அது பாராளுமன்றத்தில் செய்யப்பட வேண்டும். அதைப் பாதுகாக்க உழைத்திருக்கிறீர்கள். பாராளுமன்றம் செயல்பட வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீங்கள் அனைவரும் வான்வழிப் படையைச் சேர்ந்தவர்கள். அதைப் பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இது நம் நாட்டில் ஒரு முக்கிய அலகாகக் கருதப்படுகிறது.

அன்று 1992 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் இந்தப் படையை உருவாக்க வேண்டும் என்று நாம் கலந்துரையாடினோம். அந்த நேரத்தில், நான் அக்டோபர் மாதம் லண்டன் சென்றேன். நான் லண்டனில் ஜெனரல் மைக்கேல் ரோஸை சந்தித்தேன். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்கள். ஜெனரல் ரணதுங்க மற்றும் ஜெனரல் ஆடிகல ஆகியோர் அவருடன் இருந்தனர். அவர் இப்படி ஒரு பிரிவைத் தொடங்க வேண்டும் என்றார். அப்போதைய இராணுவத் தளபதி வைத்தியரத்னவிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது, பின்னர் ஜெனரல் ஜெரி சில்வா படையை ஆரம்பித்து இந்தப் பணியை சிறப்பாகத் தொடர்ந்தார். குறிப்பாக அப்போது தொடங்கியதை தொடர்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு


 

 

2022.08.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரசார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01.     உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையம் (UNESCO – ICHEI) மற்றும் இலங்கை அரசின் கல்வி அமைச்சுக்கும் இடையில் கல்வி ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையம் எமது நாட்டின் கைத்தொழில் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் பணியாளர்களின் திறமையை மெருகூட்டுவதற்காக இணையவழி ஊடாக பயிற்சிகளை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதன் கீழ் Artificial Intelligence, றொபோ தொழிநுட்பம், தரவுப் பகுப்பாய்வு, இயந்திராதிகள், பொறியியல் கற்கைகள், டிஜிட்டல் வடிவமைப்பு, மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் போன்ற துறைகளை அணுகுவதற்கான தளங்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பினர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. செலவு வரம்பின் அடிப்படையில் நீர்க் கட்டணத்தை அறிமுகப்படுத்தல்

 

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நிதி நிலைபேற்றை உறுதிப்படுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாகவும் தடையின்றியும் நீர் வழங்கலை மேற்கொள்வதற்கு கட்டணங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மூலதனக் கடன் பொறுப்புக்களை ஈடு செய்வதற்கு இயலுமான வகையில் தற்போது அறவிடப்படும் நீர்க் கட்டணம் மற்றும் மலக்கழிவகற்றல் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு நீர்வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பிராந்தியக் கைத்தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான காணிகளை வழங்கல்

பிராந்திய மட்டத்தில் கைத்தொழிற்றுறையை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் மூலம் 'பிராந்திய கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டம்' நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள 25 முதலீட்டாளர்களுக்கு 13 கைத்தொழில் பேட்டைகளில் காணித் துண்டுகளை வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.     பாடசாலை மட்டத்தில் ஜப்பான் மொழித் தேர்ச்சியை ஆரம்பித்தல்

இலங்கை அரசு மற்றும் ஜப்பான் அரசுக்கிடையில் கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தொழிநுட்ப சேவைக்காலப் பயிலுனர்களாக, விசேட நிபுணத்துவங்களுடன் கூடிய வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 14 துறைகளில் தொழிலுக்கு விண்ணப்பிப்பதற்காக இலங்கையர்களுக்கு இயலுமை உண்டு. அதற்காக, ஜப்பான் மொழித் தேர்ச்சி கட்டாயமான தகைமையாக இருப்பதுடன், பல கட்டங்களாக நடாத்தப்படும் பரீட்சைகள் மூலம் குறித்த தகைமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்துவரும் 05 ஆண்டுகளில் விசேட நிபுணத்துவ வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 345,000 தொழிலாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கை உள்ளிட்ட 07 நாடுகளுடன் ஜப்பான் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் தொழிநுட்பவியல் பாடவிதானத்தின் கீழ் ஜப்பான் மொழி மற்றும் ஆங்கில மொழிக் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், ஜப்பான் வேலைவாய்ப்புக்களை இலக்காகக் கொண்ட பராமரிப்புச் சேவைகள், விருந்தோம்பல் சேவைகள், கட்டடங்கள் தூய்மையாக்கல், விவசாய நடவடிக்கைகள், மோட்டார் வாகன தொழிநுட்பவியல் அல்லது மின்னியல் மற்றும் இலத்திரனியல் தொழிநுட்பத் துறைகளில் மென் திறன்களை விருத்தி செய்வதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கான விமான சேவைகள் காப்புறுதிக் காப்பீட்டுக்கான ஒப்பந்தம் வழங்கல்

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்பனி தனது விமானங்களுக்கு 04 வகையான காப்புறுதிக் காப்பீட்டின் கீழ் காப்புறுதிச் சேவைகளைப் பெற்றுக் கொள்கின்றது. குறித்த 04 காப்புறுதிக் காப்பீடுகளுக்காக காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள பொதுக் காப்புறுதிக் கம்பனிகளிடமிருந்து மட்டுப்பட்டுத்தப்பட்ட தேசியப் போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் குறித்த ஒப்பந்தத்தை இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியனுசரணை வழங்குகின்ற ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 2 கருத்திட்டங்களின் அடுத்த கட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியனுசரணை வழங்குகின்ற ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 2 கருத்திட்டங்களின் கீழ் 6,250 சதுர கிலோமீற்றர் கிராமிய வீதிகளும், 750 சதுர கிலோமீற்றர் தேசிய வீதிகளும் அபிவிருத்தி செய்து, பராமரிப்பதற்காக 140 சிவில் வேலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 4,800 சதுர கிலோமீற்றர் கிராமிய வீதிகளும், 300 சதுர கிலோமீற்றர் தேசிய வீதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த கருத்திட்டங்களை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் 1 வது கருத்திட்டத்தின் 5 ஆம் கட்டத்திற்காக 243 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2வது கருத்திட்டத்தின் 4 ஆம் கட்டத்திற்கான 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07 . வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

 

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் விதிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல், கலால் வரி (52 ஆம் அத்தியாயம்) இன் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் உள்ளடங்கிய 02 வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளுக்காக மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்தல் செய்தல்

சுவட்டு எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் இலத்திரனியல் வலுவைப் பயன்படுத்தி இயங்குகின்ற வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இலத்திரனியல் மோட்டார் முச்சக்கர ஊர்திகளை இலங்கையில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்குமாறு பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், அதற்கான சட்ட ஏற்பாடுகள் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் காணப்படாமையால், குறித்த சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளை பதிவு செய்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் குறித்த சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்தம் செய்தல்

அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளல் (Knowledge Process Outsourcing) வியாபாரச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளல் (Business Process Outsourcing), வேறு நாடுகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாக மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அலுவலகங்கள் (Back office) மற்றும் தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட (ICT enabling services) வியாபார நிறுவனங்களின் இயல்புகளுக்கமைய குறித்த தொழில்களில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வேறு நாடுகளின் நேர அட்டவணைக்கமைய பணிபுரிவதற்கு நேரிடுகின்றது.

ஆனாலும், 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் மாலை 6.00 மணிக்குப் பின்னர் பெண்களை மட்டுப்படுத்தப்பட்ட தொழில்களில் மாத்திரமே பணியில் அமர்த்தலாம். குறித்த நிலைமையின் கீழ் பெண்களை இரவு வேளைகளில் தொழிலில் அமர்த்துதல் தொடர்பாக தற்போது காணப்படும் வரையறுக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதற்காக 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10.   அமைச்சரவை உப செயற்குழுக்களை நியமித்தல்

அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் சட்டரீதியான மற்றும் ஏனைய ஏற்புடைய விடயங்களை ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய விடயதானங்களுக்கு அமைவாக சமர்ப்பிக்கப்படும் அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் தொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் அமைச்சரவை உப செயற்குழுக்களை நிறுவுதல் பொருத்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய கருத்திட்டங்களை ஆரம்பித்தல் மற்றும் பெறுகைக் கோரல் நடவடிக்கைகள் போன்ற அரச செலவுகள் தொடர்பான யோசனைகள் பற்றி கொள்கை ரீதியான பரிந்துரைகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அரச செலவுகள் முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவொன்றை நியமிப்பதற்காகவும், அரச சேவை நியமனங்கள், பதவியுயர்வு, இடமாற்றம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்ற நிறுவன ரீதியான நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் பற்றி சமர்ப்பிக்கப்படும் யோசனைகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு கொள்கை ரீதியான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையில் நிறுவன ரீதியான விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை உப செயற்குழுவை நியமிப்பதற்காவும் கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபசெயற்குழுவை நியமித்தல் மற்றும் உணவுப்பாதுகாப்புக் குழுவை அமைத்தல்

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தி வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்கு அவசியமான கொள்கை ரீதியான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அமைச்சரவைக்குப் பரிந்துரைப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் வாழ்க்கைச் செலவு தொடர்பான உபசெயற்குழுவை நியமிப்பதற்கும், குறித்த உபசெயற்குழு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதற்காக சந்தை, வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையின் கீழ் உணவுப் பாதுகாப்புக் குழுவை நியமிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்சி அவசர நிவாரண உதவித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

 

வறுமைப்பட்டவர்கள் மற்றும் இடர்களுக்கு உள்ளாகியவர்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் 'உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்சி அவசர நிவாரண உதவித்திட்டம்' எனும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்படப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியனுசரணையின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள் சிலவற்றில் காணப்படும் மேலதிக நிதியை மீளாய்வின் மூலம் ஒதுக்கிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், கருத்திட்ட செயற்பாடுகளின் நிதியிடலுக்காக சுபீட்சமான மற்றும் ஆசிய பசுபிக் வலய துரிதமீட்சிக்கான ஜப்பான் நிதியத்தால் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், அதற்கமைய ஏற்புடைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. திரவப் பெற்றோலிய சமையல் எரிவாயுக்கான திருத்தப்பட்ட விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தல்

தொடர்ச்சியான சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் செலவு வரம்பின் அடிப்படையில் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 05 ஆம் திகதி சமையல் எரிவாயு விலையைத் திருத்தம் செய்வதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்

சமகாலத்தில் நாட்டில் நிலவுகின்ற மோசமான வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறையால், தொடர்ச்சியாக பெற்றோலிய உற்பத்திப் பொருட்களின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் போட்டித்தன்மையான தரப்பினர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம்த்திற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறீப்பிட்டுள்ளார்.

 இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை வகுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் உறுதிப்பாட்டை ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்றுள்ளார். சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், பொதுமக்களுடன் கலந்தாலோசிப்பது உட்பட அனைவருடனான ஒருமித்த கலந்துரையாடல்களை அவர் பாராட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்களுக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானம், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான ஒத்துழைப்பை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறது என்றும் அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினூடாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும். அரச ஊழியர்கள் காத்திரமான சேவையை நாட்டுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன்போது 22ஆம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவையெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜகிரியவிலுள்ள ஶ்ரீ கோத்தம தபோவன விஹாரைக்கு விஜயமளித்து இலங்கை அமரபுர மஹா நிக்காயவின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய தொடம்பஹல சந்திரசிறி தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

 

2022 ஆம் ஆண்டு பேர்மிங்காமில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இறுதி போட்டியில் யுபுன் அபேகோன் 10.14 வினாடிகளில் ஓடி மூன்றாம் இடத்தை அடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக, இலங்கை நேரப்படி புதன்கிழமை (3) இரவு 11.40 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது அரையிறுதிப் போட்டியில் 10.20 வினாடிகளில் கடந்து நான்காவது இடத்தைப் பிடித்த 27 வயதான ஓட்டப்பந்தய வீரர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

கென்யாவின் ஃபெர்டினாண்ட் ஓமன்யாலா (10.02), தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பைன் (10.07), இங்கிலாந்தின் நெதனீல் மிட்செல் - பிளேக் (10.13), கெமரூனின் இம்மானுவேல் எஸேம் (10.14), வேல்ஸின் ஜெர்மியா அசு (10.15), அவுஸ்திரேலியாவின் ரோஹன் பிரவுனிங் 17 (10.15), ரோஹன் பிரவுனிங்.7 (10.18) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.  

செவ்வாய்க்கிழமை (02), அபேகோன் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஆடவர் நிகழ்வின் முதல் சுற்றின்  எண் 06 இல் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிப் போட்டிக்கு அவர்  10.06 வினாடிகளில் ஓடித் தகுதி பெற்றார்.

இதேவேளை, பொதுநலவாய போட்டியில் பாலித்த பண்டார பரிதிவட்டம் எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

வாசகர்களுக்கு உடனடி செய்திகளை வழங்கும் நோக்கத்துடன், லேக்ஹவுஸ் மூன்று மொழிகளிலும் SMS News Alert சேவையை ஆரம்பித்துள்ளது.

Reg (space) TKN என டைப் செய்து 77010 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம், தினகரன் SMS News Alert செய்தி சேவையுடன் இணைய முடியும்.

அவ்வாறே Reg (space) DIN என டைப் செய்து 77010க்கு SMS அனுப்புவதன் மூலம் தினமின செய்திகளையும், Reg (space) DAILYNEWS என டைப் செய்து 77010க்கு SMS செய்து அனுப்பவதன் மூலம் டெய்லி நியூஸ் SMS செய்திச் சேவையிலும் இணையலாம்.

வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவருமான அனுஷ பெல்பிட்ட இந்த குறுஞ்செய்தி சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

புதிய தலைமுறையினர் புதிய ஊடகங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ள இன்றைய காலகட்டத்தில், இலங்கை பத்திரிகைகளின் தாய்வீடான லேக்ஹவுஸ் புதிய ஊடக முறைகளுக்கு ஏற்றவாறு தகவல்களை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தலைவர் தெரிவித்தார்.

மேலும், புதிய தொழில்நுட்ப முறைகளுக்கு ஏற்றவாறு, வாசகர்களுக்கு தகவல் தெரிவிக்கும் ஆதாரங்களை மாற்ற வேண்டும் என்றும், செய்தித்தாளில் இணைந்த வாசகர்கள், தகவல் பரிமாற்றம் செய்வதற்கான பிற புதிய முறைகளுடன் உடனடியாக இணைய வேண்டுமென்றும் அவர் கூறினார்.

புதிய இலத்திரனியல் ஊடகங்களுடன் கைகோர்த்து ஆரம்பிக்கும் இந்த குறுஞ்செய்தி சேவை ஒரு சிறிய செடியைப் போன்றது என்றும், ஆனால் அது விரைவில் பாரிய விருட்சமாக வளரும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிகரித்து வரும் அச்சடிப்புச் செலவு அனைத்து அச்சு நிறுவனங்களுக்கும் தாக்குப் பிடிக்க முடியாததாகி வருவதாகத் தெரிவித்த தலைவர், நாட்டில் அமைதியான சூழலைப் பேண முடிந்தால் எதிர்காலத்தில் இந்நிலைமையை ஓரளவுக்கு தணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஆசிரியர் பீட பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிசிர பரணதந்திரி,நிறுவனத்தின் சட்ட அலுவல்கள் பணிப்பாளர் ஜனக ரணதுங்க, நிதி அலுவல்கள் பணிப்பாளர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம், பிரதம ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

உள்ளூர் ஆடை உற்பத்தி உபகரணங்கள் அல்லது உபகரணங்களின் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்குவதற்கு கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவினால் முன்வைக்ககப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன (3) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடுவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே கோவிட் 19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக ஆடைத் துறைக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் நாட்டில் நிலவும் சாதகமற்ற பொருளாதார சூழல் காரணமாக, உள்ளுரில் உற்பத்தி செய்யப்படாத ஆடை உற்பத்திக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது, உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதன்படி, நிலவும் சூழ்நிலைக்கு ஒரு தீர்வாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத மற்றும் ஒத்திசைக்கப்பட்ட அமைப்பு (HS) குறியீடுகளின் கீழ் வரும் உள்ளூர் ஆடை உற்பத்தி உபகரணங்கள் அல்லது / பொருட்கள் இறக்குமதிக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கு கைத்தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதென்றும் தெரிவித்தார்.

 

Latest News right

நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய உறவின் சின்னம் - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 22, 2024
Default Image
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய, கலாசார மற்றும்…

இறுதி ரந்தோலி ஊர்வலத்தை பார்வையிட ஜனாதிபதி இணைந்து கொண்டார்

ஆக 20, 2024
Default Image
கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவின் இறுதி…

அரச ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்புக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்கிறது - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 18, 2024
Default Image
“அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு 25000 உதவித்தொகை. குறைந்தபட்சம் சிறு…

ஊடக விதிமுறைகள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதித் தேர்தல் ஆணையாளர்

ஆக 09, 2024
Default Image
தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்…

தேர்தல் காரணமாக IMF கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை - அமைச்சரவை பேச்சாளர்

ஆக 06, 2024
Default Image
தேர்தல் அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக 2027 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
சிறந்த சங்கப் பிதாமகராக இருந்து காலமான கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
மறைந்த கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர் கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு…