01. கல்விப் பிரிவின் ஒத்துழைப்புக்கள் தொடர்பான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்
கல்விப் பிரிவின் ஒத்துழைப்புக்களுக்கான ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி, இலங்கை சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் 'கீல்' பல்கலைக்கழகத்திற்கும் (University of Keele) இடையில் முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் (Department of External Resources), வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புக்களையும் உள்ளடக்கி முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. கற்கைத் தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தம்
கற்கைத் தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி மற்றும் சீனாவின் ரியன்ஜீன் பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலைப் பாடசாலைக்கும் (Tianjin University, School of Architecture) இடையில் வெளிவிவகார அமைச்சு, தேசிய வரவு செலவுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தால் (Department of External Resources) , சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் உள்ளடங்கலாக, தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2022 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டு இறுதி முன்னேற்றங்கள்
நிரல் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பாரிய அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு இறுதி வரைக்குமான பௌதீக ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் குறித்த கருத்திட்டங்கள் தொடர்பாகக் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வைத் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கமைய 5.8 ட்ரில்லியன் ரூபாய்களின் ஒட்டுமொத்த முதலீட்டுடன், 1,000 மில்லியன் ரூபாய்களுக்கு மேற்பட்ட 260 பாரியளவிலான கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் 125 கருத்திட்டங்களுக்காக வெளிநாட்டு நிதியிடல் மூலங்களிலிருந்து நிதி வழங்கப்படுவதுடன், இக்கருத்திட்டங்கள் பூர்த்தியாக வேண்டிய காலம் 2030 வரை காணப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், நாட்டில் நிலவிய வெளிநாட்டு செலாவணி நெருக்கடிகளால் ஏற்பட்ட இறக்குமதி மட்டுப்பாடுகள், மூலப்பொருட்களின் பற்றாக்குறை, எரிபொருள் நெருக்கடி, மின்வெட்டு, பணவீக்கத்தால் விலை அதிகரிப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய ஒப்பந்த முகாமைத்துவப் பிரச்சினைகளால் குறித்த அபிவிருத்திக் கருத்திட்டங்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த தகவல்களைக் கருத்தில் கொண்டு மேற்படி கருத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதை உறுதிப்படுத்தவதற்காக குறித்த தரப்பினர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் நிலவுகின்ற பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்வுகாண்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு அக்கருத்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் அவர்களின் செயலாளர் தலைமையில் சிரேஷ்ட அலுவலர்களுடன் கூடிய அலுவலர் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
04. அரச தொழில்முயற்சிகள் மீள்கட்டமைப்பு அலகொன்றை நிறுவுதல்
அரசுக்குச் சொந்தமான வணிக நடவடிக்கைகளின் செயலாற்றுகை நீண்டகாலமாக மகிழ்ச்சியடையக்கூடிய நிலைமையில் காணப்படாமையால், ஒருசில வர்த்தகங்கள் பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்குகின்றது. இந்நிலைமை திறைசேரிக்குப் பாரியளவிலான அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றமையால், அவ்வாறான வர்த்தகங்களை வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் மேற்கொண்டு செல்வதற்கான மாற்றுப் பொறிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.
அதற்கமைய, திறைசேரி மீது சுமத்தப்பட்டுள்ள நிதிச்சுமையைக் குறைத்துக் கொள்வதற்கான முறைகளை அறிமுகப்படுத்துதல், அரசுக்குச் சொந்தமான வர்த்தகங்களின் முழுஅளவிலான செலாற்றுகையை அதிகரித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு அரச தொழில்முயற்சிகளை மீள்கட்டமைத்தல் தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் அரச தொழில் முயற்சிகள் மீள்கட்டமைப்பு அலகை நிறுவுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. அரச – தனியார் பங்குடமை தேசிய முகவர் நிறுவனத்தை தாபித்தல்
இலங்கையில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் முகங்கொடுக்கின்ற சிரமங்கள் மற்றும் பிரச்சினைகளை அடையாளங் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்காக முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், அரச – தனியார் பங்குடமைக் கருத்திட்டங்களை அடையாளங்கண்டு குறித்த நிலையான காலப்பகுதியில் அக்கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் அரச – தனியார் பங்குடமை தேசிய முகவர் நிறுவனத்தைத் தாபிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. தேசிய போசாக்கு கொள்கை – 2021-2030
மக்கள் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதற்கு அவகாசம் வழங்குகின்ற பாதுகாப்பான உணவுச் சூழல் இருத்தல் உள்ளிட்ட மக்களுடைய போசாக்கு நிலைமையை ஆரோக்கியமாகப் பேணிச் செல்வதற்கு தாக்கம் செலுத்துகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகளை வழங்கும் நோக்கில் 'தேசிய போசாக்கு கொள்கை 2021-2030' தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கையர்களுக்குமான உயர்வான போசாக்கு எனும் தூரநோக்கு மற்றும் அதனை செயற்படுத்துவதற்கான மூலோபாய சட்டகத்துடன் குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. பொதுச் சுகாதாரப் பராமரிப்புக்கள் தொடர்பான கொள்கை மற்றும் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு பிரதான திட்டம்
வீட்டுமட்ட திண்மக்கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் அத்துடன், நிறுவன ரீதியான, வணிக மற்றும் தொழிற்சாலைகளில் திண்மக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கும், அவற்றைப் பாதுகாப்பாக சேகரித்தல், சுத்திகரித்தல், அகற்றல் மற்றும் அதுதொடர்பான சுகாதார நடைமுறைகள் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக்கள் எனக் கருதப்படும். ஐக்கிய நாடுகள் சபை அதன் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய நிகழ்ச்சிநிரலில் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வழங்குதல் நாட்டின் அபிவிருத்தியில் முக்கியமான தேவையாக அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வழங்குவதற்கு ஏற்புடைய பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அனைத்துத் தரப்பினர்களும் ஒரு சட்டகத்திற்கு சரியான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை கூடிய நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்தும் வகையில் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட ஏனைய தரப்பினர்களின் ஆலோசனைகளுடன் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக்கள் பற்றிய தேசிய கொள்கை மற்றும் பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 2030 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக குறித்த கொள்கை முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் 'காபன் நடுநிலைப்படுத்தல்' திட்டத்தின் ஒருங்கிணைந்த பொறிமுறையை நடைமுறைப்படுத்தல்
இலங்கை 2016 செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஏற்று அங்கீகரித்துள்ள காலநிலை மாற்றங்கள் தொடர்பான பரிஸ் ஒப்பந்தத்திற்கமைய பச்சைவீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக எரிசக்தி, தொழிற்சாலைகள், போக்குவரத்து, திண்மக்கழிவு, வனங்கள் மற்றும் விவசாயத் துறைகளின் கீழ் தேசிய ரீதியாக நிச்சயிக்கப்பட்ட பங்களிப்புக்கள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான சட்டகப்படுத்தப்பட்ட மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ள 'காபன் நடுநிலைப்படுத்தல்' ஒருங்கிணைந்த பொறிமுறை மூலம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் ஒருங்கிணைந்து, பச்சைவீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், அத்துடன் குறித்தளவில் குறைக்கப்பட்ட அளவை ஒப்பந்தங்களை மேற்கொண்ட நாடுகள் மற்றும் ஜப்பானுக்கும் இடையில் சதவீத அடிப்படையில் பகிர்ந்து கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த பொறிமுறையை இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் நடைமுறைப்படுத்துவதற்காக இருநாடுகளுக்குமிடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல், தொழிலில் அமர்த்துதல் மற்றும் மீளவும் நாட்டுக்க அழைத்தல் தொடர்பாக மலேசியா அரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
தொழிலாளர் ஆட்சேர்ப்பு, தொழிலில் அமர்த்துதல் மற்றும் மீளவும் நாட்டுக்க அழைத்தல் தொடர்பாக மலேசியா அரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று 2016 ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்டுள்ளதுடன், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் 2021 திசம்பர் மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் புரிந்துணர்வ ஒப்பந்தத்தை நீடித்து புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக தொழில் உறவுகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்ட ஆளொருவரின் மேன்முறையீட்டைக் கருத்தில் கொள்ளும் போது அந்நபர் தடுப்புக் காவலில் இருந்த காலப்பகுதி அல்லது அதன் ஒரு பகுதியை அவரது தண்டனைக் காலத்தின் ஒருபகுதியாக கணிப்பிடுவதற்கு இயலுமாகும் வகையில் ஏற்பாடுகள் உட்சேர்க்கப்பட்டு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது மிகவும் பொருத்தமானதென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட அலகின் குற்றவியல் உபகுழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 323(5) ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. சேவை மூப்பு பாதிக்காத வகையில் அரச ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளூரில் விடுமுறை வழங்கல்
2022 யூன் மாதம் 13 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, சேவை மூப்புப் பாதிக்காத வகையில் அரச ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளூரில் விடுமுறை வழங்குவதற்கான பரிந்துரைகள் வழங்குவதற்காக சிரேஷ்ட அலுவலர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவால் உயர்ந்தபட்சம் 05 வருடகாலம் வரைக்கும் சம்பளமற்ற விடுமுறை வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக பல்துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறை
நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மிகவும் சவால்மிக்க விடயமாக உணவுப் பாதுகாப்பு அடையாளங் காணப்பட்;டுள்ளதுடன், உள்ளுர் விவசாய உற்பத்திகள் குறைவடைந்தமையாலும், சர்வதேச ரீதியில் விலையேற்றம் போன்ற இப்பிரச்சினை மேலும் தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலைமையின் கீழ் தொடர்ந்துவரும் காலங்களில் மோசமான உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தால் விலைஅதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதால், அது உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கும். சமகால பொருளாதார நெருக்கடிகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தல் மற்றும் குடும்ப வருமானங்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கங்களால் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்கள் மேலும் மோசமடைந்துள்ளதுடன், உள்ளுர் பணஅலகில் ஏற்பட்ட வீழ்ச்சியடைந்துள்ளமையால் இறக்குமதி விநியோகங்களில் ஏற்பட்ட மட்டுப்பாடுகளால் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதற்கமைய, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக துரித படிமுறைகளாக அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கான குறுகியகால தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்காக தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு சபை மற்றும் மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பான பல்துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறையை நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. தேசிய பாதுகாப்பு தொடர்பான முழுமையான சட்ட முறைமையை அறிமுகப்படுத்தல்
பயங்கரவாதம் மற்றும் வன்முறையான தீவிரவாதத்தின் புதிய வடிவங்கள் தொடர்பான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக தற்போது காணப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சடடங்களிலுள்ள பலவீனங்களை தவிர்ப்பதற்கும், அவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும், சட்ட வலுவாக்கம் செய்வதற்கும், விசாரணை மற்றும் புலனாய்வு செயற்கருவிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் விரிவான தேசிய பாதுகாப்பு சட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச தரநியமங்கள்ஃபரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பாக முழுமையான சட்ட முறைமையொன்றுக்கான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல்மைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள்: நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல்மைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்: மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டலுக்காக சட்டமூல வரைபுக்கு அங்கீகாரம் பெறல்
பால்நிலை அடிப்படையிலான சமத்துவமின்மையைக் குறைப்பதன் மூலம் பெண்களை வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் சில சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வேலைத்திட்டம் 'லிய சரணி' எனும் பெயரில் பெண்களுக்கான தேசிய ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கான கொள்கை வகுப்புக்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் பற்றிய தேசிய பெண்கள் குழு மற்றும் பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான இலங்கை பெண்கள் பணியகம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தேசிய மட்டத்தில் சட்டபூர்வமாக இயங்காமை, பெண்கள் வலுவூட்டல் தொடர்பாக காணப்படுகின்ற பொறிமுறையில் முக்கிய பலவீனமாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கைப் பெண்களின் பால்நிலைச் சமத்துவமும், உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை உட்சேர்த்து 'பெண்கள் சமத்துவம் மற்றும் வலுவூட்டல் சட்டமூலத்தை' தயாரிப்பதற்கான அடிப்படைகளைக் கொண்டு அடிப்படைச் சட்டமூலத்தை தயாரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர் குழுவிடம் கோருவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.