சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. தினித் சிந்தக கருணாரத்ன (Dinith Chinthaka Karunaratne) அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (8) அரசாங்க தகவல் திணைக்களத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னணி பத்திரிக்கை ஆசிரிய  பீடத்தின் அங்கத்தவராகவும் பணியாற்றியதோடு, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விஜய பத்திரிகை நிறுவனத்தின் லங்காதீப பத்திரிகையின் ஊடகவியலாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த திரு. தினித் சிந்தக கருணாரத்ன, வெகுசன ஊடகத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் அதிக காலம் இணை செய்தி ஆசிரியர் உள்ளிட்ட பல பொறுப்புவாய்ந்த பதவிகளில் சிறந்த அனுபவங்களைக் கொண்ட ஊடகவியலாளராவர்.

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவனாகிய புதிய பணிப்பாளர் நாயகம், உயிரியல் விஞ்ஞானப் பட்டதாரியாவதுடன், அமெரிக்காவின் கலிபோனியா சென்ரா மொனிகா பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் பற்றிய உயர்கல்வியையும் பெற்றுள்ளார். திரு. தினித் சிந்தக கருணாரத்ன உள்ளூரிலும் சர்வதேச ரீதியாகவும் பரந்தளவு அனுபவங்களைப் பெற்றுள்ளார்.

புதிய தகவல் பணிப்பாளர் நாயகம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. அனூஷ பெல்பிட, முன்னாள் தகவல் பணிப்பாளர் நாயகம் திரு. மொஹான் சமரநாயக்க உள்ளிட்ட வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அதிகாரிகளும், வெகுசன ஊடக துறைசார் நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.