156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றையதினம் (03) பிற்பகல் விசேட நிகழ்வு பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதிக்கு, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கடமையின்போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜயந்த குணவர்தன சார்பில் 'ஜனாதிபதி பொலிஸ் வீர பதக்கம்" வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், பாராளுமன்றத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 30 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
பொலிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்றம் இன்றி சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது. இந்த இரண்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே தொடர்ந்தும் முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அன்றையதினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்திருந்தால் நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்திருக்கும் என்பதுடன் சட்டத்தின் ஆட்சியும் மீறப்பட்டிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பொலிசார் சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பையும் பாதுகாத்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முழு பொலிஸ் திணைக்களத்திற்கும் மரியாதை செலுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் பொலிஸ் வெகுமதி நிதியத்திலிருந்து, விரைவில் ஸ்தாபிக்கப்படவுள்ள சட்ட நிவாரண நிதியத்துக்கு மாற்றீடு செய்யப்படவுள்ள 100 மில்லியன் ரூபாவிற்கான காசோலையை பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மேற்கத்தேய இசைக்குழு நிகழ்ச்சி மற்றும் பொலிஸ் நாய் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன.