அரசியல் நோக்கங்களை புறந்தள்ளிவிட்டு தேசிய இலக்குகளுக்காக மீண்டும் தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்போதே தாயகத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்துடன் போட்டியிட்டு முன்னேறக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் உருவாக்க வேண்டும்.

இல்லையென்றால் நாட்டை உலகிலிருந்து தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த இக்கட்டான தருணத்தில் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

தேசத்தின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அனைவரினதும் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டம் இதுவரையில் நாட்டில் நிலவும் பொருளாதார முறையை மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.

உலகிற்கு ஏற்ற தேசிய பொருளாதாரக் கொள்கையை அமைப்பதற்கான அடிப்படையும் இதுவே.

அதன்படி, 25 ஆண்டுகளுக்கு தேசிய பொருளாதாரக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் கொண்டிருக்கும்.

புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விரிவான கொள்கை அடுத்த வருட வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் முன்வைக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

இலங்கையில் 100வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும், அவை இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் புதிய முன் மொழிவுகளை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

2021இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% ஆக உள்ள அரசாங்க வருமானத்தை 2025க்குள் 15%ஆக உயர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.

25 ஆண்டுக்கான தேசிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்படும்.

அக்டோபர் முதலாம் திகதி முதல் பெருமதி சேர்க்கப்ட்ட வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல வரித் திட்டங்கள் அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார்பு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக குறைக்கப்படும். தற்போது பணியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெற வேண்டும்.

இலத்திரனியல் மின்சார வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும்.

வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்கள் 2023 வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படும்.

அரச வளங்களின் அபிவிருத்திக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்பு மூலோபாய விடயங்களில் மறுசீரமைப்புக்கு முன்மொழிவு

அரசு நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் கழிவுப்பொருட்களை அகற்றும் முழு செயல்முறையையும் கண்காணிக்க அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்படும்

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மானியம் தொடர்ந்து வழங்கப்படும்

தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகம் உறுதிசெய்யப்படும். இதற்காக 25 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

மண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மானியம்.

முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு 5,000 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை உதவித்தொகை வங்கப்படும். பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக பல திருத்த சட்ட மூலங்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்டும்.

விவசாய அபிவிருத்திக்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், இளைஞர்களை விவசாயத்தில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கை.

வேலையற்று இருக்கும் குழுக்களுக்கு 20 ஏக்கர் நிலம் வழங்க நடவடிக்கை.

கர்ப்பிணி பெண்களுக்காக தற்போது வழங்கப்படும் 20 000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருள் பொதிக்கு மேலதிகமாக 2500 ரூபாய் வழங்கப்படும்.

சமுர்த்தி பயனாளிகள் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள் 5,000 ரூபாவில் இருந்து 7,500 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

தேசிய கடன் முகாமைத்து நிறுவனம் நிறுவப்படும். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

வெளிளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் கிளைகளை திறப்பதை ஊக்குவிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கும் மத விழாக்களில் கலந்துகொள்வதற்குமாக இலங்கைவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

அரச வங்கிகளின் 20% பங்குகள் அதன் ஊழியர்கள் மற்றும் வைப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.

மின்சார மோட்டார் சைக்கிளை தயாரிப்பதறகு தேவையான பாகங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்கப்படும்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக புலம்பெயர் அலுவலகம் மற்றும் நிதியம் ஒன்று நிறுவப்பபடும்

ஊழலை ஒழிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் மற்றும் பொறிமுறை அறிமுகப்படுத்தப்படும்.

களனி ரயில் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களிடம் இருந்து பெறுகைகள் கோரப்படவுள்ளது.

சிறு விவசாயிகள் மே மாதம் வரை அரசு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதற்காக வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய 680 மில்லியன் ரூபாய் திறைசேரியால் செலுத்தப்படும் என பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.