அனைத்துக் கட்சிகளுக்கும் நியாயமான  பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு

ஆட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.

ரிஷாத், மனோ, சீ.வி, ஹக்கீம், அனுர பிரிதர்ஷன ஆகியோருடன் ஜனாதிபதி சந்திப்பு

 

ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதே தமது நோக்கமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடன் (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ACMC), பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட குழுவினர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தன.

பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை நியமிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மேலும் பல இடைக்கால குழுக்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை தாம் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய சபையை ஸ்தாபிப்பதே பிரதான இலக்கென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவமும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் முழுமையான பிரதிநிதித்துவமும் அவசியமானதெனவும் தெரிவித்தார்.

குழுத் தலைவர்களுக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு சமமான அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கும் தேவையான சந்தர்ப்பங்களில்  அவர்களை அமைச்சரவைக் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளச் செய்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது விளக்கினார்.

குழு முறைமையை பிரதிநிதித்துவம் செய்வதா, அல்லது அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதா என்பதை அந்தந்தக் கட்சிகள் கலந்துரையாடி தமக்கு அறிவிக்குமாறும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.