ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறீப்பிட்டுள்ளார்.

 இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை வகுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் உறுதிப்பாட்டை ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்றுள்ளார். சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், பொதுமக்களுடன் கலந்தாலோசிப்பது உட்பட அனைவருடனான ஒருமித்த கலந்துரையாடல்களை அவர் பாராட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்களுக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானம், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான ஒத்துழைப்பை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறது என்றும் அவர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.