• வவுனியா நீர் பிரச்சினைக்கு ஒரு வருடத்தில் தீர்வு.…
  • பிரதேச பாடசாலைகளின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு…
  • சாசனத்திற்கு பிள்ளைகளை வழங்கிய குடும்பங்களுக்கு தேவையின் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழில்…

நான் முக்கியமல்ல, என்னை ஆட்சிக்கு கொண்டு வந்த கொள்கையே முக்கியமானது…

தற்போதைய எதிர்ப்புகள் அந்த கொள்கைக்கு எதிரானவையே.…

இறக்குமதி செய்யப்படும் நுகர்வு பொருட்களின் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசீலனை….

வெள்ளை வேன், முதலைகள், சுறாக்கள் பற்றி போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்தவர்கள் இன்று சுற்றாடல் பற்றி பேசுகின்றனர்..

“கோட்டாபய ராஜபக்ஷ முக்கியமல்ல, என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானதாகுமென்று நான் எப்போதும் கூறி வருகின்றேன். நாம் அதனையே பாதுகாக்க வேண்டும். எதிர்சக்திகள் முன்னெடுத்துவரும் போலிப் பிரச்சாரங்களின் நோக்கம் இந்த கொள்கையை தோல்வியுறச் செய்வதாகும். மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளையே நான் நிறைவேற்றி வருகிறேன்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

தான் அதிகாரத்திற்கு வரும்போது வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதாரம், கொவிட் நோய்த் தொற்றுக்கு மத்தியலும்கூட தேசிய பசுமைப் பொருளாதாரமாக கட்டியெழுப்பப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தனது பதவிக்காலத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போகுமானால் தன்மீது குற்றம் சுமத்துமாறு ஜனாதிபதி அவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இன்று (03) முற்பகல் வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவின் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் கலந்துரையாடல்” 17வது நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

தற்போது பேசுபொருளாக உள்ள விடயம் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி அவர்கள், நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களினதும் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசீலனைக்குட்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொருத்தமானதல்ல என அண்மையில் கண்டறியப்பட்டிருப்பது இந்த பரிசீலனையின் பெறுபேறாகவே ஆகும். பரிசீலனையை தொடர்ச்சியாக மேற்கொண்டு நுகர்வு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தான் அதிகாரத்திற்கு வந்து குறுகிய காலப்பகுதியில் மேற்கொண்டுள்ள பணிகள் பற்றி விளக்கிய ஜனாதிபதி அவர்கள், சுற்றாடலுக்கு பாரிய அழிவை ஏற்படுத்திவந்த செம்பனை அல்லது முள்தேங்காய் பயிர்ச் செய்கையை முழுமையாக தடை செய்துள்ளதாக குறிப்பிட்டார். தேங்காய் எண்ணெய் நுகர்வில் சாதகமான பெறுபேறுகளை அறிந்து பாம் ஒயில் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது. நாட்டினுள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதற்கான வழிகளும் மூடப்பட்டுள்ளன. சுற்றி வளைப்புகளின் மூலம் போதைப்பொருள் மற்றும் நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை கைப்பற்றுவதற்கு முடிந்துள்ளது.

தான் அதிகாரத்திற்கு வரும்போது வெள்ளைவேன், முதலைகள், சுறா மீன்கள் பற்றி எல்லாம் போலிப் பிரச்சாரங்களை சமூகமயப்படுத்திய குழுக்கள் தமது போலிப் பிரச்சாரங்கள் வெற்றியளிக்காத நிலையில் தற்போது சுற்றாடல் பற்றி போலியான மற்றும் மோசமான கருத்துக்களை சமூகமயப்படுத்தி வருகின்றனர். நிறுவனமயப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் அரசாங்கத்திற்கும் தனக்கும் எதிராக முன்னெடுத்துவரும் போலிப் பிரச்சாரங்களை தோல்வியுறச் செய்து தன்னை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்த கொள்கையை பாதுகாக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தமது பெற்றோர்களை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கின்ற காரணத்தினால் சில பிக்குகளுக்கு சாசனப் பணியை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. எனவே சாசனத்திற்காக பிள்ளைகளை வழங்கியுள்ள குடும்பங்களுக்கு தேவையின் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் திட்டத்தின் கீழ் தொழில் ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் நீர் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் முன்வைத்த கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள், பல தசாப்தங்களாக இருந்துவரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மாவட்டத்தின் சனத்தொகையில் 92 வீதமானவர்கள் குடிநீர்ப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். துரித கருத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் நீர்வழங்கல் முன்மொழிவு முறைக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் அனைத்து குழாய் கிணறுகளையும் புனரமைத்தல், பல சமூக நீர்த்திட்டங்களை ஆரம்பித்தல் ஆகியவற்றை உடனடி தீர்வாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை, கட்டிடங்கள் மற்றும் கதிரை, மேசைகள் பற்றாக்குறை விரைவாக தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினையாக மக்கள் சுட்டிக்காட்டினர். இது பற்றிய தகவல்கள் மற்றும் புள்ளி விபரங்களை பெற்று தேவைக்கேற்ப நிதி ஒதுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் கல்வி அமைச்சுக்கு பணிப்புரை வழங்கினார்.

“கிராமத்துடன் கலந்துரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை,  களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகல், காலி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

வவுனியா நகரில் இருந்து 38 கிலோ மீற்றர் தூரத்தில் கிழக்கு மற்றும் தெற்கில் அனுராதபுர மாவட்டத்தின் பதவிய, கெப்பித்திகொல்லாவ பிரதேச செயலகப் பிரிவிற்கும் மேற்கில் நந்திமித்திர கிராமத்தையும் எல்லையாகக் கொண்டு வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவு அமைந்துள்ளது. போகஸ்வெவ 1, போகஸ்வெவ 2, கம்பிலிவெவ, வெடிவைத்தகல்லு, கோவில்புளியங்குளம் மற்றும் வெஹரதென்ன ஆகிய கிராமங்கள் இதில் அடங்குகின்றன. 478 குடும்பங்கள் வசிக்கின்ற வெடிவைத்தகல்லு கிராமத்தின் சனத்தொகை 1520 ஆகும். நெல், சேனைப் பயிர்ச் செய்கை இம்மக்களின் பிரதான வாழ்வாதாரமாகும்.

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றுவதற்காக போகஸ்வெவ கிராமத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், அங்கிருந்து போகஸ்வெவ மகா வித்தியாலயம் வரையில் செல்லும் வீதியின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்களுடன் உரையாடி பிரதேசத்தின் தகவல்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தார்.

மொபிடல் நிறுவனம் போகஸ்வெவ மகா வித்தியாலயத்திற்கும் நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கும் அன்பளிப்பாக வழங்கிய 02 மடிக் கனணிகள் மற்றும் டயலொக் நிறுவனம் அன்பளிப்பாக வழங்கிய தொலைக்காட்சி மற்றும் இணைப்பு ஆகியவற்றை ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் கையளித்தார்.

“கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்துவது ஜனாதிபதி அவர்களின் மற்றொரு நோக்கமாகும். “அறிவுப் பலம் கொண்ட சிறுவர் தலைமுறை’ என்ற தலைப்பில் ஜனாதிபதி அவர்கள் பாடசாலைகளுக்கு புத்தகங்களை வழங்கினார். ஒரு பாடசாலைக்கு பல்வேறு பாடத் துறைகளில் 500 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

உரிமை இன்றி இதுவரை அரச காணிகளை பயன்படுத்தி வந்த குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி அவர்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான 5 குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பாடநெறிகளை பயில்வதற்காக ஜனாதிபதி அவர்களினால் 03 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

போகஸ்வெவ மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் 37 கிலோமீற்றர் வீதி மற்றும் பிரதேசத்தின் இரண்டு முக்கிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் பணி வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

போகஸ்வெவ கிராமத்தில் 16 குளங்கள், கிவுல் ஓய திட்டம் உள்ளிட்ட 17 குளங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

தொல்பொருள் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் கிராமத்தின் விகாரைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள கிராமங்களை பாதுகாப்பதற்காக மின்சார வேலிகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

போகஸ்வெவ ஆரம்ப சுகாதார மத்திய நிலையத்தை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டது.

பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர், தாதியர் மற்றும் ஏனைய ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

நீண்டகாலமாக இருந்துவரும் காணி உரிமைகள் பற்றிய பிரச்சினைகளை விரைவாக தீர்த்து, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கிராமவாசிகளுக்கு வசதிகளை செய்துகொடுப்பது பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வட மாகாண ஆளுநர் திருமதி. பீ.எஸ்.எம். சார்ல்ஸ், வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், மாவட்ட மக்கள் பிரதிநிதிகள்,  ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்பு பிரதானிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வவுனியா மாவட்டத்தில் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை. (03.04.2021)

நேற்று மாலை நான் பேராசிரியர் சங்கைக்குரிய இந்துராகாரே தம்மரத்தன தேரரை சந்திப்பதற்காக விகாரைக்குச் சென்றிருந்தேன். தேரர் அவர்கள் என்னிடம் “நீங்கள் நாளை ஒரு பின்தங்கிய கிராமத்திற்கு செல்கிறீர்கள் அல்லவா. நான் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். எமது தேரர்கள் குறிப்பாக இளம் பிக்குகள் அவர்களது பெற்றோர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது. சிலபோது அவர்கள் மிகுந்த கஷ்டங்களுக்குள்ளாகிறார்கள். அவர்களது பெற்றோர்களுக்காக அந்த குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தொழில் ஒன்றை வழங்குங்கள் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார். அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக நான் தேரரிடம் உறுதியளித்தேன். நாம் அதனை நிறைவேற்றுவதற்கு தயாராக உள்ளோம். அதேபோன்று குறிப்பாக இதுபோன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள விகாரைகளை முன்னேற்றுவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எமது அரசாங்கத்தின் முக்கிய கொள்கை வறுமையை ஒழிப்பதாகும். அதனால்தான் வறிய கிராமங்களுக்கு செல்கின்றோம். நாட்டின் சுமார் 75 வீதமானவர்கள் கிராமிய மக்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டதைப்போன்று இப்பிரதேசத்தில் சுமார் 85 வீதமானவர்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாம் கொள்கைகளை வகுத்துள்ளோம். நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் விவசாயத்திற்கு முன்னுரிமையளித்து செயற்படுகின்றோம். நாம் உர மானியத்தை இலவசமாக வழங்கியுள்ளோம். நெல்லுக்கு உத்தரவாத விலையை 50 ரூபா வரை அதிகரித்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகையான பயிர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு தீர்மானித்து அவற்றின் இறக்குமதியை முற்றாக தடை செய்துள்ளோம். இந்த நிதி முன்னர் வெளிநாடுகளுக்கே சென்றது. நாம் இப்போது அவற்றை முழுமையாக தடை செய்துள்ளோம். சோளம், பயறு, கௌப்பி போன்ற தானியங்கள் இப்போது பெருமளவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கிராமிய மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று நெல்லுக்கு சிறந்த விலை கிடைக்கிறது. அதேபோன்று ஏனைய பயிர்களுக்கும் நல்ல விலை கிடைக்கிறது. இந்த பயிர்ச் செய்கையின் மூலம் எமது இளைஞர், யுவதிகளுக்கும் சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும். குறைபாடுகள் உள்ளன. நீர் முகாமைத்துவம் அதுபோன்று நவீன தொழிநுட்பம் அவற்றை நாம் சரி செய்து வருகின்றோம். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழைங்குவதற்காகத்தான் வறிய குடும்பங்களுக்கு தகைமைகள், திறமைகள் இல்லாதவர்களுக்கு அரச தொழில் வாய்ப்பை வழங்க நாங்கள் தீர்மானித்தோம்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் வீதிகள், மின்சாரம் நீர் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை நான்கு வருட குறுகிய காலத்தில் நாம் பாரியளவில் அபிவிருத்தி செய்தோம். அவரது ஆட்சிக்காலத்திலேயே நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்கொண்டு சென்று ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை நிர்மாணிக்கும் பணியினை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அடுத்ததாக 5,000 குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கிறோம். குளக்கட்டமைப்பை புனர்நிர்மாணம் செய்வது விவசாயத்துறைக்கு மிகவும் முக்கியமானதாகும். நீர்ப்பாசனத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நாம் பாரிய நிதியை முதலீடு செய்துள்ளோம். பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை புனரமைப்பதுடன், கிராமிய மக்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நாம் பாரிய பணிகளை செய்து வருகிறோம்.

குறிப்பாக கிராமிய பாடசாலைகளின் பிள்ளைகளின் கல்வி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த பாடசாலையிலும் சுமார் 30, 40 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக அதிபர் குறிப்பிட்டார். நாம் அதனை துரிதமாக தீர்த்து வைப்போம்.

நாம் 60,000 பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கினோம். அந்த பட்டதாரிகளை இந்த வெற்றிடங்களுக்கு நியமிக்க வேண்டும். கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. எனவே வேறு தகைமைகள் உள்ளவர்களுக்கு டிப்ளோமா பட்டதாரிகள், உயர்தர விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை சித்தியடைந்துள்ளவர்களுக்கு இந்த பாடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கு கல்வி அமைச்சு கொள்கை ரீதியாக தீர்மானித்துள்ளது. நாட்டின் ஆசிரியர் பற்றாக்குறையை நாம் விரைவாக தீர்த்து வைப்போம்.

எமது அரசாங்கத்தின் கொள்கை சுதேச விவசாயிகள், சுதேச கைத்தொழிலாளர்களை முன்னேற்றுவதாகும். யாழ்ப்பாணத்தில் பெருமளவு சிறிய வெங்காயம் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக நேற்று என்னிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். இந்த வருமானம் கிராமிய விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. நாங்கள் சிங்களவர்களா, தமிழர்களா, முஸ்லிம்களா என்று பார்ப்பதில்லை. விவசாய சமூகத்திற்கு நிவாரணம் ஒன்றை வழங்கும்போது அது எல்லோருக்கும் கிடைக்கிறது. அவர்களுக்கு உரம் இலவசமாக கிடைக்கிறது. நெல்லுக்கு உத்தரவாத விலை கிடைக்கிறது.

சுமார் 800 குடும்பங்களுக்கு விவசாயம் செய்வதற்கு காணிகள் இல்லை என மாவட்ட செயலாளர் இன்று கூறினார். அந்த பிரச்சினையை ஆராய்ந்து அதற்கு உடனடித் தீர்வை வழங்குவதற்காகவே ஜனாதிபதி என்ற வகையில் நான் கிராமங்களுக்கு வருகின்றேன். சிலருக்கு மக்களின் இந்த பிரச்சினைகள் பற்றி தெரியாது. அது அவர்களுக்கு விளங்குவதும் இல்லை. அவர்கள் இதுபோன்ற பகுதிகளுக்கு வருவதும் இல்லை. நான் காணிகளை வழங்குமாறு கூறினால் நாளை நான் காடுகளை வெட்ட சொன்னதாக கூறுவார்கள். சிலபோது வனப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கூட இதுபற்றிய தெளிவு இல்லை. வனப்பாதுகாப்பு, வன சீவராசிகள் திணைக்களம், விவசாயம், சுற்றாடல் இந்த அனைத்து அதிகாரிகளும் மக்களுக்காகவே உள்ளனர். இவர்கள் ஒன்றாக இணைந்து தெளிவுடன் மக்களின் பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களின் காலத்தில் சுற்றாடலை பாதுகாப்பதற்காக என்னைப்போன்று எவரும் செயற்பட்டது கிடையாது. யுத்தத்தின் பின்னர் கொங்கிரீட் காடுகளாகவும் குப்பை மேடுகளாகவும் இருந்த கொழும்பு நகரத்தை பசுமை நகரமாக மாற்றினோம். சுற்றாடல் என்பது மரம் நடுவது மட்டுமல்ல. தாழ் நிலங்கள், ஈர நிலங்கள் எதனையும் நிரப்புவதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. இவைதான் சுற்றாடல். ஆனால் கடந்த 5 வருட காலப் பகுதியில் அத்தகைய நிலங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இது குறித்து சூழலியலாளர்கள் பேசுவதில்லை. இப்போது சூழலியலாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் அக்காலத்தில் இருக்கவில்லை. நாங்கள் வந்ததும் ஊடகங்களும் எங்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். இவை உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளாகும். அக்காலத்தில் எமக்கு அதோ வெள்ளை வேன் வருகிறது. அதோ முதலைகளுக்கு உணவாக கொடுக்கின்றனர், மனிதர்களை தூக்கிச் சென்று மீன் தொட்டியில் உள்ள சுறாக்களுக்கு உணவாக கொடுக்கின்றனர் எனக் கூறினர் இப்போது பாருங்கள் எங்கே வெள்ளை வேன்களும் இல்லை முதலைகள், சுறாக்களும் இல்லை. அப்டியென்றால் வேறு யாரோதான் இவற்றை செய்திருக்கிறார்கள். இப்போது வேறு ஒன்றை பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது சுற்றாடல் பற்றி கதைகளை கட்டிக் கூறுகிறார்கள்.

இந்த நாட்களில் தேங்காய் எண்ணெய் பற்றி பேசப்படுகின்றது. நாங்கள் செம்பனை செய்கையை தடை செய்தோம். களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் செம்பனை யயிரிடப்படுகின்றது. இதன் மூலம் தான் பாம் ஒயில் தயாரிக்கப்படுகின்றது. இந்த பயிர்ச் செய்கையினால் நீர் வளங்கள் வற்றிப் போவதாக இதற்கு மக்களின் பெரும் எதிர்ப்பு இருந்தது. எனவே நாம் செம்பனைச் செய்கையை தடை செய்தோம். சுற்றாடலை பாதுகாப்பதற்காக. நான் அதிகாரிகளுக்கு இவற்றை படிப்படியாக அகற்றி இறப்பர் அல்லது வேறு பயிர்களை செய்கை செய்யுமாறு கூறினேன்.

இது சிறந்ததல்ல என சுகாதார அமைச்சும் தெரிவித்தது. எமது தேங்காய் எண்ணெய்யே சிறந்ததாகும். நாம் பாம் ஒயில் இறக்குமதியையும் தடை செய்தோம். தேங்காய் எண்ணெய்க்கு இன்று உலகில் அதிக கேள்வி உள்ளது. நாம் அந்தளவுக்கு தென்னையை பயிர்ச் செய்யவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் தென்னை மரங்கள் வெட்டப்பட்டன. அதனால் எமக்கு வெளிநாடுகளிலிருந்து தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்யவேண்டி ஏற்பட்டது. இவற்றை ஒவ்வொரு வியாபாரிகளும் கொண்டு வருகிறார்கள். எனினும் இவற்றை இறக்குமதி செய்யும்போது. அதன் தரத்தை பரிசீலனை செய்வதற்கு அரச நிறுவனங்கள் உள்ளன.

போதைப்பொருட்கள் சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு வரப்படுவதை பிடிப்பதற்கு நிறுவனங்கள் உள்ளன. அதேபோன்று தேங்காய் எண்ணெய் மற்றும் பல்வேறு உணவு வகைகள் கொண்டு வரப்படும்போது அவற்றின் தரம் தொடர்பாக கண்காணிப்பதற்கு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களின் கடமை அவற்றை பரிசீலனை செய்து உரிய தரத்தை கொண்டிருக்காதவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகும். ஆனால் இப்போது அவ்வாறானவை கண்டுபிடிக்கப்படும்போது தரமற்ற நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் கொண்டுவரப்படுவதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. அவற்றை கொண்டு வருவது நாங்கள் அல்ல.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களை 2015ஆம் ஆண்டு தோல்வியுறச் செய்வதற்கான ஒரு காரணமாக அமைந்தது எத்தனோல் ஆகும். சென்ற இடங்களில் எல்லாம் எத்தனோல் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அது உங்களுக்கு நினைவு இருக்கும் நாங்கள் எத்தனோலை முற்றாக தடை செய்துள்ளோம். தேவையான எத்தனோலை இலங்கையிலேயே உற்பத்தி செய்வோம். ஆனால் அவை திருட்டுத்தனமாக நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. நாங்கள் மக்கள் மத்தியில் உலப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.  வர்த்தகர்கள் அவற்றை திருட்டுத்தனமாக கொண்டு வருகிறார்கள். போதைப்பொருட்கள் திருட்டுத்தனமாக கொண்டு

வரப்படுகின்றது. போதைப்பொருள்கள் கொண்டு வரப்படும்போது அவை கண்டுகொள்ளப்படாதிருந்த ஒரு காலம் இருந்தது. இப்போது போதைப்பொருட்களை கைப்பற்றும்போது போதைப்பொருள் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். போதைப்பொருட்களை கைப்பற்றாவிட்டால் அவை கொண்டு வரப்படுவது பற்றி, அவை விநியோகிப்படுவது பற்றி எவருக்கும் தெரியாது. திருட்டுத் தனமாக கொண்டு வரப்படுவதை கண்டு பிடிப்பதற்காகவே அரச நிறுவனங்கள் உள்ளன. அவற்றை கைப்பற்றாவிட்டால் அவை மக்களிடம் செல்லும்.

அரசாங்கத்தின் மற்றுமொரு கொள்கைதான் ஊழலை ஒழிப்பதாகும். நாம் திருடர்களை பிடிக்க வேண்டும். எமது மக்கள்தான் இவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் மத்தியில் மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் நல்ல விடயங்கள் பற்றி கூற நான் கேட்டதில்லை. அவர்கள் மீது ஏச்சு, பேச்சுக்கள் தான் அதிகம். போதைப்பொருட்களை பிடிப்பதில்லை என்றும் திருடர்களை பிடிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். அண்மையில் போதைப்பொருட்களை பிடிக்கும் ஒரு நல்ல பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது. இடமாற்றம் செய்யும்போதுதான் ஒரு நல்ல அதிகாரியை இடமாற்றி விட்டதாக கூறப்படுகின்றது. எனவே சில ஊடகங்கள், சமூக ஊடகங்கள் கருத்துருவாக்கம் செய்யும் முறை பற்றி நீங்கள் இப்போது விளங்கிக்கொள்ள முடியும். அந்த அதிகாரி ஒரு நல்ல அதிகாரியாக இருக்க முடியும். ஆனால் அப்படி ஒரு அதிகாரி இருக்கும்போது எங்களது பிரதேசத்தில் ஒரு சிறந்த அதிகாரி இருக்கிறார். அவர் போதைப்பொருட்களை பிடிக்கிறார். அவர் மிகவும் நல்லவர் என்று ஏன் ஆரம்பத்திலேயே கூறப்படுவதில்லை. ஏன் அத்தகைய அதிகாரிகள் மதிக்கப்படுவதில்லை. அப்படியானால் இந்தப் பகுதியில் நல்ல அதிகாரிகள் இருப்பதை நாங்கள் அறிந்துகொள்ள முடியும்.

நான் அதிகாரத்திற்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. நாம் பல்வேறு நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமித்தோம். அது குறித்து என்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. நாம் இவர்களை விசேட தொழில்வல்லுனர்கள் குழுவொன்றின் மூலமே நியமித்தோம். இப்போது என்னைத் தூற்றுகிறார்கள். வியத்மக அமைப்பையும் தூற்றுகிறார்கள். தொழில்வல்லுனர்களையும் தூற்றுகின்றனர். இவர்களுக்கு வேலை செய்ய முடியாது. இவர்களுக்கு மக்களின் பிரச்சினைகள் பற்றி தெரியாது. அதிகாரிகளுடன் செயற்படத் தெரியாது போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியானால் இவர்களை படிப்படியாக மாற்றுவதற்கு நான் தீர்மானித்தேன். அப்படி மாற்றம்போது எனக்கு கடிதங்களும் குறுஞ் செய்திகளும் வருகின்றன இவர் ஒரு சிறந்த அதிகாரி. இவர் மிகவும் நல்லவர். ஏன் இவரை மாற்றுகின்றீர்கள் என கேட்கின்றனர். ஆனால் இருக்கும் வரையில் அவரைத் தூற்றுகின்றார்கள். மாற்றும்போது நல்லவர் எனக் கூறப்படுகின்றது. இந்த அரசாங்கத்திற்கும் எனக்கும் எதிராக நிறுவனமயப்பட்ட ரீதியில் இந்த போலி கருத்துக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்கள், நாட்டில் இருந்த யுத்தத்தை நிறைவு செய்து, பாரிய அபிவிருத்தியை செய்தார். இவை அனைத்தையும் செய்ததன் பின்னர் திருடர் திருடர் எனக் கூறி அவரை தோல்வியுறச் செய்து நல்லாட்சி என்ற ஒரு அரசாங்கத்தை கொண்டு வந்து எமது படை வீரர்களை சிறையில் தள்ளினர். சர்வதேச நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது கலாசாரம் சீரழிக்கப்பட்டு தேரர்களையும் சிறையில் தள்ளி இவையனைத்தையும் அழிவுக்குள்ளாக்கினர். பெரஹராக்களுக்கு யானைகள் கொண்டு செல்லப்படுவதை தடை செய்வது எமது பாரம்பரியத்தை, தேசியத்தை இல்லாமல் ஆக்குவதாகும். விவசாயத்துறைக்கு உரிய இடம் வழங்காது மிளகு போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து மீள்ஏற்றுமதி செய்து எமது பெருந்தோட்டக் கைத்தொழில் துறையை அழிவுக்குள்ளாக்கியது எமது தேசிய கலாசாரத்தை இல்லாமல் செய்து வெளிநாட்டு சக்திகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்காகும். அமெரிக்காவுடன் எம்சிசி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. நாம் வந்து அதனை நிறுத்தினோம். அப்போது  அதிகளவு கோசங்கள் எழுப்பப்பட்டன. ஜெனிவாவில் வேறு நாடுகளுடன் இணைந்து படை வீரர்களுக்கு எதிரான முன்மொழிவில் கைச்சாத்திடப்பட்டது. பின்னர் நாம் அதிலிருந்து விலகிக்கொண்டோம். இது பற்றி பேசப்படுவதில்லை. நான் எப்போதும் சொல்லக்கூடிய விடயம் கோட்டாபய ராஜபக்ஷ என்ற நபர் முக்கியமல்ல. என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானதாகும். அதனை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு எதிராகவே இன்று எதிர்சக்திகள் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளன. மக்களுக்கு உறுதியளித்த விடயங்களையே நான் செய்து வருகின்றேன். இந்த குறுகிய காலப்பகுதியில் அதனை நான் செய்திருக்கிறேன்..

இன்று சர்வதேச செய்திகளை பார்த்தால் பல நாடுகளில் கொரோனா நோய்த் தொற்றினால் அதிகளவானோர் மரணிக்கின்றனர். மூன்றாவது அலையும் வந்து அந்த நாடுகள் மூடப்பட்டுள்ளன. நாம் எமது நாட்டை முன்கொண்டு செல்கிறோம். மீண்டும் சுற்றுலா பயணிகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். பெரும் எண்ணிக்கையான நாடுகள் தமது மக்களுக்கு தடுப்பூசிகளை இன்னும் வழங்கவில்லை. நாங்கள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதும் இல்லை. எனினும் நாம் ஏனைய நாடுகளுடன் பேசி தடுப்பூசிகளை கொண்டு வந்து மக்களுக்கு வழங்குகிறோம். முழு உலகமும் கொவிட் நோய் தொற்றின் காரணமாக பொருளாதார கஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளன. வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதாரத்தையே நான் பொறுப்பேற்றேன். அதுபற்றி நான் அறிந்திருந்தேன். அதற்கு மேலதிகமாக இந்த கொவிட் சவாலுக்கு மத்தியில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து கிடைத்த சுமார் 5 பில்லியன் டொலர் வருமானம் சுமார் 03 மில்லியன் தொழில்வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. நாங்கள் சரியான பொருளாதார கொள்கையொன்றை பின்பற்றிய காரணத்தினால் நாங்கள் உணவில் தன்னிறைவு அடைய வேண்டுமென்ற கொள்கையை கொண்டுவந்த காரணத்தினால், நாங்கள் பசுமை கலாசார தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய காரணத்தினால்தான் நாம் இன்று முன்னோக்கிச் செல்ல முடியுமாக உள்ளது,

வெளிநாடுகளிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும்போது பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. உலக சந்தையின் விலையுடன்தான் எமது விலை தீர்மானிக்கப்படுகின்றது. ஏனெனில் நாங்கள் உணவுகளுக்கு வரி அறவிடுவதில்லை. சீனிக்கு மட்டுமே வரி அறவிடப்பட்டிருந்தது. நாம் அதனையும் நீ்க்கினோம். எமது நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமானவற்றை நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வராமல் உள்நாட்டிலேயே பயிரிடும்போது அந்த வருமானம் எமது விவசாயிகளுக்கு செல்லும் அதேபோன்று நாங்கள் நுகர்வோர் பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இதனால்தான் நாங்கள் நெல்லுக்கு நிர்ணய விலையை வழங்கி இருக்கிறோம். அந்த விலைக்கு அதிகமாக கொடுத்தால் அரிசியின் விலை கட்டாயம் அதிகரிக்கும். அந்த பணமும் எங்களது விவசாயிக்கே செல்கிறது. இடைத்தரகர்களுக்கு செல்வதை நாம் முடியுமானவரை நிறுத்தப் பார்க்க வேண்டும். அதுதான் அரசாங்கத்தின் கடமை. அதனையே நாம் செய்ய வேண்டும்.

நாம் பயிர்ச் செய்கையின் வினைத்திறனை அதிகரிக்க வேண்டும். அதற்காகவே நாம் தொழிநுட்பத்தை கொண்டுவர முயற்சிக்கிறோம். நீங்கள் இப்போது எமக்கு ஒரு ஏக்கர் மட்டுமே வயல் காணி உள்ளது. எங்களுக்கு  இப்போது இருக்கின்ற முறைமைக்கு ஒரு ஏக்கர் போதாது என்று குறிப்பிட்டீர்கள். இப்போது நாங்கள் ஒரு ஏக்கரில் அதிக அறுவடையை எப்படி பெற்றுக்கொள்வது என்று பார்க்க வேண்டும். தொழிநுட்பத்தை பயன்படுத்தி அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் முறை பற்றி பார்க்க வேண்டும். புதிய முறைமைகளை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த அனைத்துக்கும் எமது அதிகாரிகள் இருக்கின்றனர். எனவே தான் நான் அதிகாரிகளுடன் உங்களிடம் வருகின்றேன். இல்லாவிட்டால் அதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மத்திய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர்கள் அந்த அமைச்சுக்களின் பிரதான அதிகாரிகள் அந்த அதிகாரிகளுடன் வருவது இந்த பிரச்சினைகளுக்கு நேரடியாக தீர்வுகளை கண்டறிந்து கொள்கை ரீதியான மாற்றங்களை செய்வதற்காகும்.

இதற்கும் சிலர் என்னை தூற்றுகின்றனர். எனக்கும் கொழும்பில் இருந்து கொண்டு இது பற்றி பேச முடியும். என்றாலும் உங்களிடம் வந்து இது பற்றி கண்டறிந்து சரியான முறையில் பிரச்சினைகளை தீர்க்கவே நான் விரும்புகிறேன். இங்கு மட்டுமல்ல வரும் வழியில் உள்ளவர்களுடனும் நான் பேசுகிறேன். அவர்களுடைய விபரங்களையும் பெற்றுக்கொண்டு இந்த அதிகாரிகளுக்கு அந்தப் பிரச்சினைகளுக்கு நேரடியாக பதிலளிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும். அது போலவே கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவும் முடியும். தனிப்பட்ட பிரச்சினைகள் ஏராளம் உள்ளன என்பது எனக்குத் தெரியும். அவற்றை இங்கு பகிரங்கமாக பேச முடியாது. அவற்றை எழுதித் தாருங்கள். எனது அதிகாரிகள் இங்கு வந்து இருக்கிறார்கள். அவர்களிடம் கையளியுங்கள். நாம் சென்றதன் பின்னர் தனிப்பட்ட பிரச்சினைகளில் தீர்க்கக்கூடியவற்றை தீர்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

நான் வரும் வழியில் ஆரம்ப சுகாதார மத்திய நிலையம் ஒன்றை பார்த்தேன். நான் அவர்களுடன் உரையாடினேன். மாலை வேளைகளில் ஏதேனும் ஒரு பிரச்சினை ஏற்பட்டால் நோயாளியை அதிக தூரம் கொண்டு செல்ல வேண்டும். வவுனியாவிற்கு அல்லது பதவியவுக்கு செல்ல வேண்டும். இதுபோன்ற சுகாதார பிரச்சினைகள் உள்ளன. இங்கு வந்திருக்கும் அதிகாரிகளுக்கு அவற்றுக்கான நேரடியான பதில்களை வழங்க முடியும்.

கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டத்திற்காக நான் வருகை தந்திருக்கும் 17 வது மாவட்டம் இதுவாகும். ஏனைய மாவட்டங்களுக்கும் பின்தங்கிய கிராமங்களுக்கும் செல்லும்போது பெரும்பாலும் அதே பிரதேசத்தில் உள்ளவர்கள் வருகிறார்கள். இந்த முதல் சுற்று முடிவடைந்ததும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து அந்த மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமென்பது எனது எதிர்பார்ப்பாகும். ஒரு வருடத்தில் நாங்கள் மூன்று முறையாவது மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய கிராமங்களுக்கு செல்வோம். இந்த கிராமங்களை முன்னேற்றி பிரச்சினைகளை தீர்த்ததன் பின்னர் எமக்கு மாவட்டத்தின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.