அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (04) முற்பகல் அனுராதபுரம் வரலாற்று முக்கியத்துவமிக்க ஜய ஸ்ரீ மகாபோதி வளாகத்தில் இடம்பெற்றது.

விவசாயிகள் தாம் பெற்றுக்கொண்ட அறுவடையின் முதற் பகுதியை காணிக்கையாக வழங்குவது பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் வருடாந்த சம்பிரதாயமாகும். 54வது தடவையாக இடம்பெற்ற தேசிய புத்தரிசி விழா அட்டமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச நாயக்க தேரரின் ஆலோசனையின் பேரில் விவசாயத்துறை அமைச்சும் கமநல சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

உரிய பருவ காலத்தில் மழை கிடைக்கப்பெற்று தமது பயிர் நிலங்கள் செழிப்புற்று விளங்க இயற்கையின் பலமும் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் நாலா திசைகளிலும் இருந்து வருகை தந்திருந்த விவசாய சமூகத்தினர் புத்தரிசி விழா சம்பிரதாயங்களில் பங்குபற்றினர்.

பாரம்பரிய சம்பிரதாயங்களின்படி புத்தரிசி விழா ஊர்வலமானது மங்கள வாத்தியங்களுடன் கிழக்கு வாசலின் ஊடாக ஜய ஸ்ரீ மகா போதியை வலம்வந்து, அங்கு பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரத்தில் மிகுந்த கௌரவத்துடனும் பக்தியுடனும் புத்தரிசி நிரப்பப்பட்டது.

சங்கைக்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பாத்திரத்தில் புத்தரிசியை நிரப்பும் சம்பிரதாயத்தை நிறைவேற்றினார்.

அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்திருந்த விவசாயிகள் பாத்திரத்தில் புத்திரிசியை நிரப்பும் சம்பிரதாயத்தில் இணைந்து கொண்டனர்.

புத்திரிசி விழாவிற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சஞ்சிகையின் முதல் பிரதி கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன அவர்களினால் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே நிகார ஜயசுந்தர பண்டாரவினால் ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நெய் பாத்திரம் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

புத்திரிசி விழாவுடன் இணைந்ததாக ஆதிவாசிகளினால் சம்பிரதாயபூர்வமாக ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தேன் பாத்திரம் ஆதிவாசிகளின் தலைவர் வன்னில எத்தோவின் சார்பில் பிரதித் தலைவர் உருவரிகே குணபண்டாவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஒன்பது மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் பிக்குகளினால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு விதை நெல்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். புத்திரிசி விழா நிகழ்வினைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், ஜய ஸ்ரீ மகாபோதிக்கு மலர்கள், வெள்ளி நாணயங்களை பூஜை செய்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களும் அயோமா ராஜபக்ஷ அம்மையாரும் அட்டமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச நாயக்கத் தேரரை சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்தனர்.

மகாசங்கத்தினர், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, சஷிந்திர ராஜபக்ஷ, ஷெகான் சேமசிங்க, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ்.குமாரசிறி ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.