அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

2021.02.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. 2021 நிதியாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

இலங்கையின் அரசியலமைப்பு, 154G அரசியலமைப்பின் பிரகாரம் நிறுவப்பட்டுள்ள நிதி ஆணைக்குழு மாகாண சபைகளுக்கான வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் செலவிடல்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் பற்றி மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதற்கமைய, நிதி ஆணைக்குழு 2021 நிதியாண்டுக்கான பரிந்துரைகள் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளது. நிதி ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், அரசியலமைப்பின் 154G(7) அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த பரிந்துரைகளைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிதற்கும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

உள்ளூர் நெசவு மற்றும் பத்திக் ஆடைகள் இறக்குமதி ஒழுங்குபடுத்தல், கடற்றொழில் கலன்கள், பயணிகள் போக்குவரத்துக் கடல் கலன்கள் இறக்குமதி ஒழுங்குபடுத்தல் மற்றும் உள்ளூர் கைத்தொழில்களின் தேவைகளுக்காக உள்ளூரில் தயாரிக்கப்படாத தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்காக 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் காணப்படும் ஒழுங்குவிதிகள் அடங்கலாக 2020 திசம்பர் மாதம் 14 ஆம் திகதி 2206ஃ5 இலக்கம் மற்றும் 2020 திசம்பர் மாதம் 24 2207/15 இலக்க அதி விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த ஒழுங்குவிதிகளின் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. முதலீடுகளை துரிதப்படுத்தல்

அண்மையில் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் சிலர் இலங்கையில் முதலிடுவதற்காக தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அவ்வாறான முதலீட்டாளர்களுக்கு வசதியளிப்பதற்காக தற்போது நடைமுறையிலுள்ள பொறிமுறை நீண்ட செயன்முறையைக் கொண்டுள்ளதால், முதலீட்டாளரின் ஆர்வத்திற்கமைய இலங்கையில் முதலீடுகள் தொடர்பான அதிகாரிகள் கருத்திட்டங்களை மேற்கொள்வதற்கு முயற்சி எடுக்க நேரிட்டுள்ளது. இந்நிலையின் கீழ் அவ்வாறான முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக மிகவும் முறைசார் பொறிமுறையை நிறுவுவதற்கான துரித தேவையுள்ளமையை அரசாங்கம் அடையாளங் கண்டுள்ளது. அதனால், 'அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள முதலீட்டு முகாமைத்துவ குழு' எனும் பெயரில் திறைசேரி செயலாளரின் தலைமையில் ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் முதலீட்டு சபையின் தலைவரின் பங்குபற்றலுடன் குழுவொன்றை நியமிப்பதற்கும், முதலீட்டு யோசனைகளுக்கு துரிதமான அனுமதிகளை வழங்குவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் குறித்த குழுவிடம் ஒப்படைப்பதற்கும் நித அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. முன்மொழியப்பட்டுள்ள அம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ வனத்தை பிரகடனம் செய்தல்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் துரித அபிவிருத்தி கருத்திட்டங்களால் காட்டு யானைகள் உள்ளிட்ட ஏனைய வன விலங்குகளின் வாழிடங்கள் மற்றும் இடமாறும் நடைபாதைகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இந்நிலைமையால் குறித்த பிரதேசங்களில் நாளாந்தம் யானை மனித மோதல்கள் அதிகரித்து வருவதுடன், அதற்குத் தீர்வாக, காட்டு யானைகள் இடமாறும் நடைபாதைகள் அமைந்துள்ள விதங்களை ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தி காட்டு யானைகள் மற்றும் ஏனைய வன விலங்குகளுக்கான காட்டு யானைகள் முகாமைத்துவ வனத்தை பிரகடனப்படுத்துவதற்கு தேவையான ஆரம்பப் படிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான 23,746.55 ஹெக்ரயார் நிலப்பரப்பில் முன்மொழியப்பட்டுள்ள வனம் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் உடன்பாட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான சட்ட வரைஞரின் உடன்பாட்டு எட்டப்பட்ட பின்னர், அரச வர்த்தமானியில் அறிவிப்பதற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வன சீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. கைத்தொழில் அமைச்சின் காரியாலய வளாகத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைத்து புதிய காரியாலய வளாகத்தை நிறுவுதல்

கைத்தொழில் அமைச்சு தற்போது இயங்கி வரும் காணி 01 ஏக்கர் 07 பேர்சர்ஸ் இனைக் கொண்டுள்ளதுடன், குறித்த காணி பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான பெறுமதியைக் கொண்ட இடத்தில் அமைந்துள்ளது. குறித்த காணியின் சமகாலப் பெறுமதி 2.32 பில்லியன் ரூபாய்கள் என அரச மதிப்பீட்டாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ள செயற்பாட்டுக்கு ஏற்புடைய வகையில் குறித்த காணித்துண்டை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றி வழங்குவதற்கும், அதற்குப் பதிலாக தேவையான தளபாடங்கள் மற்றும் ஏனைய வசதிகளுடன் கூடிய 50,000 சதுர அடிகளைக் கொண்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதும் 75 வாகன தரிப்பிட வசதிகளை கொண்டதுமான கட்டடிடமொன்றை கைத்தொழில் அமைச்சுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் பெற்றுக் கொள்வதற்கும் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. களுத்துறை கைத்தொழில் பேட்டையை விரிவாக்கம் செய்தல்

களுத்துறை பிரதேச செயலகப் பிரிவில் 'புலர்டன் தோட்டம்' காணியில் 50 ஏக்கர் காணியில் களுத்துறை கைத்தொழில் பேட்டை அமைந்துள்ளதுடன், தற்போது 33 முதலீட்டாளர்கள் தமது தொழிற்சாலைகளை ஆரம்பித்து வர்த்தக உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த முதலீட்டாளர்கள் 837 மில்லியன் ரூபாய்கள் முதலிட்டுள்ளதுடன், 775 தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கான காணித்துண்டுகளை வழங்குவதற்கு மேல்மாகாணத்தில் அமைந்துள்ள 08 கைத்தொழில் பேட்டைகளிலும் காணிகள் இல்லை. குறித்த விடயத்தை கருத்தில் கொண்டு, களுத்துறை கைத்தொழில் பேட்டைக்கு அருகாமையில் அமைந்துள்ள 1.946 ஹெக்ரயார் அரச காணித்துண்டை கைத்தொழில் பேட்டையை விரிவாக்கம் செய்வதற்காக ஒதுக்குவதற்கும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்ட பின்னர் பிரதேச கைத்தொழில் பேட்டைகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கைத்தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கும் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. அரச உடமையாக்கப்பட்ட மண் மற்றும் மரங்களை விடுவிப்பதற்கான செயன்முறை

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள நீதிமன்றங்களால் அரச உடமையாக்கப்பட்ட மண் மற்றும் மரங்களை வணக்கத் தலங்களை அமைப்பதற்கும் செப்பனிடுவதற்கும் மானிய விலையில் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், குறித்த அங்கீகாரம் 2020 திசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொறிமுறையை திருத்தம் செய்து தொடர்ந்து அமுலாக்கம் செய்வதற்கு நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. மனித வியாபாரம் தொடர்பாகக் கண்காணித்தல் மற்றும் தடுத்தலுக்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2021 – 2025

மனித வியாபாரம் தொடர்பாகக் கண்காணித்தல் மற்றும் தடுத்தலுக்கு 2015 – 2019 வரை நடைமுறையில் காணப்பட்ட செயற்பாட்டுத் திட்டத்தை மீளாய்வுக்குட்படுத்தி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பெற்றுக் கொண்ட அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை கருத்தில் கொண்டு, 2021-2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2021-2025 ஆண்டுக்கான மனித வியாபாரம் தொடர்பாகக் கண்காணித்தல் மற்றும் தடுத்தலுக்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. கொவிட் 19 தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டம்

கொவிட் 19 வைரசில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக நாட்டின் மொத்த சனத்தொகையில் 14 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கும் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, பதில் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த கீழ்க்காணும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• COVAX வசதியளிப்பின் கீழ் கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக் கொள்வதைத் துரிதப்படுத்துவதற்காக COVAX பொறிமுறை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தரநியம இழப்பீடு ஒப்பந்தத்தில் (Standardized Indemnification Agreement) கையொப்பமிடுவதற்கும்

• இந்தியாவின் The Serum Institute Life Sciences Private Limited இற்கு நேரடி விலைமனுக் கோரலின் அடிப்படையில் Oxford AstraZeneca தடுப்பூசி 10 மில்லியன்களை 52.5 அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை அரச மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் மூலம் கொள்வனவு செய்வதற்கும்

• பிரித்தானியாவின் AstraZeneca நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்பூசிகள் 3.5 மில்லியன்களை கொள்வனவு செய்வதற்கும் அரச மருந்துகள் கூட்டுத்தாபனமும் குறித்த நிறுவனமும் ஒப்பந்தமொன்று எட்டுவதற்கும்

10. சுற்றாடல் நேய சேதனப் பசளைகள் விநியோக முன்னோடிக் கருத்திட்டம் - நெற் செய்கைக்கான 2021 சிறுபோக விநியோகம்

2020 சிறுபோகம் மற்றும் 2020/21 பெரும்போக செய்கையில் சுற்றாடல் நேயமிகுந்த சேதனப் பசளைப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு சேதனப் பசளை மற்றும் திரவ சேதனப் பசளைகளை இலவசமாகப் பெற்றுக் கொடுப்பதற்கான முன்னோடி கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் பயன்களைப் பெறுவதற்கு குறைந்தது 04 போகங்களாவது தொடர்ந்து செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கமைய, குறித்த முன்னோடிக் கருத்திட்டம் மேலும் 2021 இல் சிறுபோகத்தில் மேற்கொள்வதற்கும், அதற்குத் தேவையான சேதனப் பசளை மற்றும் திரவ சேதனப் பசளை போன்றவற்றை பசளைகள் தொடர்பான ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அனுமதியளிக்கப்பட்ட பசளை உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கும், குறித்த குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பசளை வழங்குவதற்கும் கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கை பொலீசுக்கு 2,000 முச்சக்கர ஊர்திகளை கொள்வனவு செய்தல்

நாடளாவிய ரீதியில் சட்ட அமுலாக்கல் மற்றும் சட்ட ஒழுங்குகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான நிறுவனமான இலங்கை பொலிசுக்கு ஒப்படைக்கப்படும் கடமைகளைச் சரியான வகையில் மேற்கொள்வதற்கு போதுமானளவு வாகனங்கள் இன்மையால், அதற்கு துரித தீர்வாக 2,000 முச்சக்கர ஊர்திகளை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. பாகிஸ்தான் இஸ்லாமாபாத் கொம்சட்ஸ் (COMSATS) பல்கலைக்கழகம் மற்றும் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கு (ITT) இடையிலான ஒத்துழைப்பு நோக்கு கூற்று

பாகிஸ்தான் இஸ்லாமாபாத் கொம்சட்ஸ் (COMSATS) பல்கலைக்கழகம் மற்றும் தொழிற்சாலை தொழிநுட்ப நிறுவனத்திற்கு (ITT) இடையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு நோக்கு கூற்று கையொப்பமிடுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நோக்கு கூற்றில் கையொப்பமிடுவதற்காக தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. பாகிஸ்தான கராச்சி பல்கலைக் கழகத்தில் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞானம் தொடர்பான சர்வதேச நிலையம் மற்றும் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தான் கராச்சி பல்கலைக் கழகத்தில் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞானம் தொடர்பான சர்வதேச நிலையம் மற்றும் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையில் ஆராய்ச்சி மற்றும் கற்கை நடவடிக்கைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலீட்டு சபை மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் முதலீட்டுச் சபைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலீட்டு சபை மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் முதலீட்டுச் சபைக்கும் இடையிலான முதலீட்டு ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் வரிச் சட்டத்தை திருத்தம் செய்தல்

2021 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து பங்குதாரர்களுக்கான இலகுவானதும், வெளிப்படைத் தன்மையுடன் கூடியதுமான, வினைத்திறனான வரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வரி யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் அதற்கு ஏற்புடைய ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. 2020/21 பெரும்போக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்

2020/21 பெரும்போக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தின் பெறுபேறுகள் அமைச்சரவையால் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச விலை கிடைக்கும் வகையில் தனியார் துறையினருடன் போட்டித் தன்மையில் நெல் கொள்வனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவ்வாறு, உயர்ந்தபட்ச விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்பட்டாலும் எதிர்வரும் காலங்களில் நாட்டரிசியின் விலையை 98 ரூபாவுக்கு யாதொரு மாற்றமுமின்றி பேணுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.