2021.04.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

01. தேசிய சுவடிகள் கூடத்தில் டிஜிட்டல் காப்பகத்தை உருவாக்கல்

1640 தொடக்கம் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மற்றும் சுதந்திரத்தின் பின்னர் மிகவும் பெறுமதியான ஆவணங்கள் மற்றும் 19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் இலங்கையில் வெளியிடப்பட்ட பத்திரிகைகள் உள்ளிட்ட அனைத்து வெளியீடுகளதும் சட்ட ரீதியான காப்புக்கள் தேசிய சுவடிகள் கூடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு நாளாந்தம் அதிகளவான ஆவணங்கள் சேர்ந்த வண்ணம் இருப்பதுடன், அதற்காக டிஜிட்டல் வெளியீடுகள் மற்றும் ஆவணங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிஇஒளிபரப்புக்கள், இணையத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் போன்றன உள்ளடங்கும். அதற்கமைய குறித்த டிஜிட்டல் ஆவணங்களின் நம்பகத்தன்மை மற்றும் போலியற்றத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் டிஜிட்டல் காப்பு தொடர்பான சர்வதேச தரநியமங்களை பின்பற்றி டிஜிட்டல் காப்பகத்தை அமைப்பதற்காக புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாச்சார விவகார அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைத்தல்

விவசாயிகளின் உற்பத்திகளை நேரடியாக சந்தைப்படுத்துவதற்கும், போட்டித்தன்மை மூலம் மிகவும் வினைத்திறனான விலைப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமான வகையில் விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான 15 பொருளாதார மத்திய நிலையங்கள் நாடளாவிய ரீதியில் இயங்கி வருகின்றது. அதற்கமைய மட்டக்களப்பு மற்றும் வவுனியா விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதுடன், யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முதலாம் கட்ட கட்டுமானப்பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ நிதியத்தை நிறுவுவதற்கும் முறையான பொறிமுறையை பின்பற்றி குறித்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபார அலகுகளை ஒதுக்கி வழங்குவதற்கும் கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. தேயிலை செய்கையை ஊக்குவிப்பதற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையை திருத்தம் செய்தல்

2019 ஆம் ஆண்டில் மொத்த தேயிலை உற்பத்தி 300 மில்லியன் கிலோகிராம்கள் ஆவதுடன், அவற்றில் 75% வீதமான 225 மில்லியன் கிலோகிராம்கள் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேயிலை உற்பத்தியை உயர் மட்டத்தில் பேணுவதற்காக சிறிய தேயிலை தோட்டக்காணிகளில் உற்பத்திப்பெருக்கை அதிகரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. தேயிலையை மீள் பயிரிடல் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக 04 வருடங்கள் எடுப்பதாலும், அதற்கான செலவு அதிகமானதாலும் மீள் பயிரிடல் மற்றும் புதிய பயிரிடல் போன்றவற்றுக்கு போதுமானளவு ஆர்வம் காட்டாமையால் 2025 ஆம் ஆண்டளவில் 360 மில்லியன் கிலோகிராம்கள் உற்பத்தி இலக்கை அடைவதற்காக போதுமானளவு ஊக்குவிப்புக்கள் வழங்கவேண்டியுள்ளது. அதற்கமைய தேயிலை மீள்பயிரிடல் மானியத் தொகை ஹெக்ரயர் ஒன்றுக்கு புதிய பயிரிடல் மானியத் தொகையாக ஹெக்ரயர் ஒன்றுக்கு 400,000 ரூபாய்களில் இருந்து 500,000 ரூபாய் வரைக்கும் அதிகரிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 2021-2025 ஒருங்கிணைந்த திட்டத்தின் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக துரித பெறுகைச் செயன்முறையை நடைமுறைப்படுத்தல்

2021-2025 ஒருங்கிணைந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2021 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2025 இல் நாடளாவிய ரீதியில் 78.8% வீதமான வீட்டு அலகுகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த இலக்கை அடைவதற்காக நீர் விநியோகக் குழாய்கள் 40000 கிலோ மீற்றர்கள் வரை இடுவதற்கும் சமகால உற்பத்தி இயலளவு நாளொன்றுக்கு 2.35 மில்லியன் கனமீற்றர்களாக அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நீர் விநியோகத் திட்டங்களில் காணப்படும் சிக்கலான தன்மையால் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பெறுகைச் செயன்முறை ஏனைய நிறுவனங்களை விட அதிக காலம் எடுப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் நீர்க்குழாய்கள் மற்றும் உபகரணங்களின் பெறுகைச் செயன்முறையை ஒருங்கிணைந்த பொறிமுறையின் கீழ் வழங்குவதற்கும் மற்றும் அதற்கான அலகுக் கட்டண முறையை அறிமுகப்படுத்துவதற்கும் நீர் குழாய்கள் இடப்படும் ஒப்பந்தத்தை வழங்கும் போது அலகுக்கட்டண முறையை அறிமுகப்படுத்துவதற்கும் நீர்வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. 2021/2022 ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உணவுப்பொருள் விநியோகத்துக்கான ஒப்பந்தத்தை வழங்கல்

2021/2022 ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உணவுப்பொருள் விநியோகத்துக்காக ஒப்பந்தக்காரரை தெரிவுசெய்வதற்காக தேசிய போட்டித்தன்மை விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய 2021 ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 2022 ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உணவுப்பொருட்கள் விநியோகத்துக்காக தெரிவுசெய்யப்பட்ட விநியோகத்தர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை முடிவுறுத்தி புதிய சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை கொண்டுவரல்

2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஒட்டுமொத்த சுற்றுலாத்துறையை 04 முக்கிய நிறுவனங்களாக பிரித்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை சம்மேளனப் பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் போன்றன நிறுவப்பட்டுள்ளன. ஆனாலும் ஒட்டுமொத்த சுற்றுலாத்துறையும் 04 நிறுவனங்களுக்கு பிரிந்து உள்ளமையால் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் பிரச்சினை மேலெழுதல் மற்றும் வளங்கள் வீண்விரயம் போன்றன இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய சுற்றுலாத்துறையின் நிலைபேறான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்காக 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கை சட்டத்தை முடிவுறுத்தி புதிய சுற்றுலா நடவடிக்கை சட்டத்தின் சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் அதன்மூலம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை சம்மேளனப் பணியகம் போன்றவற்றை இணைத்து 'இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபை' எனும் பெயரில் புதிய அதிகாரசபையை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் 'விசேட வைப்புக் கணக்கு' திறப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லையை நீடித்தல்

அந்நிய செலாவணியை எமது நாட்டுக்கு அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக 2020 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறையிலுள்ள விசேட வைப்புக் கணக்குக்கான ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் குறித்த கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறே குறித்த கணக்குகளில் காணப்படும் வைப்புக்களை தொடர்ந்து பேணும் நோக்கில் மேலதிக வட்டியை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் மாதம் வரையில் குறித்த வைப்புக் கணக்குகளில் 360.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளது. குறித்த விசேட வைப்புக் கணக்குகளை திறப்பத்தற்கான கால எல்லை 2021 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதியுடன் முடிவடைய இருப்பதால் தொடர்ந்து பணத்தை வைப்பிலிடுவதற்கு விருப்பம் தெரிவிக்கும் தரப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் குறித்த காலவரையறையை தொடர்ந்து நீடிப்பதற்காகவும், அதற்காக அந்நிய செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கட்டளைகளை பிறப்பிப்பதற்கும் நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக 06 மில்லியன் 'ஸ்புட்னிக் v' தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை குழுவின் பரிந்துரைக்கமைய 07 மில்லியன் 'ஸ்புட்னிக் v ' தடுப்பூசிகளை, ஒரு தடுப்பூசி 9.95 அமெரிக்க டொலர்கள் வீதம் 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்காக 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசியின் அளவுக்கு மேலதிகமாக 06 மில்லியன் 'ஸ்புட்னிக் v' தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காகவும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.