2022 ஆம் ஆண்டினை முறையான ஆண்டாக உருவாக்குவதற்கான முதல் படிமுறையாக, மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் அனைத்து ஊடகவியலாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களுக்கு பதிலாக தரவு அடிப்படையிலான உண்மைத்தகவல்களை சமூகமயப்படுத்துவது ஊடகங்களின் கடமையாகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் முகமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
“இத்தகைய சந்தர்ப்பத்தை விளம்பரத்தை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யவில்லை. இந்நாட்டு மக்கள் கட்டுக்கதைகளை மையமாகக் கொண்டு மூன்றாவது தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதுவரை, ஐந்து மில்லியனுக்கும் குறைந்த மக்களே மூன்றாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக, எதிர்காலத்தில் அபாய நிலை ஏற்படலாம் என சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்கான பொறுப்பினை ஊடகங்கள் கொண்டுள்ளன. இந்த விடயத்திற்கு பொறுப்பான கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியில், அறியாமை மற்றும் கட்டுக்கதைகளுக்கு எதிராக பொதுமக்களை விழிப்பூட்டுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்' என்றார்.
உலகில் மிகவும் முன்னேறிய சுகாதார கட்டமைப்பு மற்றும் பொருளாதார ரீதியில் சக்தியைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மில்லியனையும் கடந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள், இவ்விடயத்தில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு அரசியல் கட்சியை சேர்ந்திருந்தாலும், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் தடுப்பூசி வேலைத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட விசேட தலைமைத்துவத்தை நாம் அனைவரும் மறந்துவிடக் கூடாது. இதன் காரணமாக, ஆரோக்கியமான ஒரு தேசமாக எழுந்து நிற்க எம்மால் முடிந்துள்ளது' என மேலும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அனுஸ பெல்பிட்ட உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.