சமீபத்திய செய்தி

பாக்கிஸ்தான் விமான படை அதிகாரி எயார் சீப் மாஷல் முடாஹிடி அன்பர் ஹான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு இவர் கடந்த 5 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார். பிரதமருக்கும் பாகிஸ்தான் விமானப் படை அதிகாரிக்கும் இடையிலான சந்திப்பு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் பிரதமருக்கும் பாக்கிஸ்தான் விமானப்படை அதிகாரிக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடந்தகாலம் மற்றும் பிரச்சினைகளை நோக்கி விரல் நீட்டிக் கொண்டிருப்பதைவிடுத்து வீழ்ச்சியுற்றிருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்பும் சவாலை தான் பொறுப்பேற்றது பொருளாதாரம் விழ்ச்சியுற்றுள்ளதென்ற தெளிவுடனேயே ஆகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார். நேற்று(06) ஜனாதிபதி அலுவலகத்தில் பெருந்தோட்ட மற்றும் நிதி நிறுவன தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனம் தேர்தல் வெற்றியை எதிர்பார்த்து தயாரிக்கப்பட்ட ஒன்றல்ல, அது பல்வேறு நிபுணர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களுடன் பல வருடங்களாக ஆய்வு செய்து மக்கள் பணிக்காக தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். பல நிறுவனங்கள் நீண்டகாலமாக வெறுமனே தொழில் வழங்கும் இடங்களாக மாறியுள்ளன. இவ்வாறு நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது. நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவது புதிய தலைவர்களினதும் பணிப்பாளர் சபையினதும் பொறுப்பாகும். நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு பதிலாக புதிய வழியொன்றின் ஊடாக வீழ்ச்சியடைந்துள்ள நிறுவனங்களை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தென்னை மற்றும் தேயிலை பயிர்ச் செய்கை அபிவிருத்தியுடன் ஏனைய பயிர்ச் செய்கைகளையும் முன்னேற்ற வேண்டும். புதிய ஆராய்ச்சி மற்றும் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி விவசாயத்துறையை முன்னேற்ற வேண்டும். பாரம்பரிய கைத்தொழில்களுக்கு முன்னுரிமையளித்து பாரிய வருமானத்தை ஈட்ட முடியும். இந்த அனைத்து துறைகளினூடாகவும் பெருமளவு தொழில்வாய்ப்புகளையும் உருவாக்க முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சில நாட்களாக பட்டதாரிகள் உள்ளிட்ட குழுக்கள் தொழில் கேட்டு ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு வந்தனர். நாட்டில் சுற்றுலா, கணனி தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகளவு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனினும் கல்வி முறைமையிலுள்ள குறைபாடுகளின் காரணமாக இந்த வெற்றிட வாய்ப்புகள் பயன்படுத்தப்படாதிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தொழிற்சந்தைக்கு ஏற்ற வகையில் கல்வி முறைமையை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ஆசியா உலக பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக மாறி வருகின்றது. இன்னும் நான்கு வருடங்களில் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் எதிர்கால தலைமுறையை பயனுறுதிமிக்க வகையில் அவற்றில் ஈடுபடுத்தக்கூடிய வகையில் தேவையான சூழலை அமைத்துக் கொடுப்பது தனது முக்கியமான நோக்கமாகுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பான கருத்துப் பரிமாறலும் இந்த சந்திப்பின்போது இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர் 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.02.06

இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாகும். சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ கால ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று இன்றோடு 72 வருடங்களாகின்றது.

இன்றைய தினம் அரச, தலைவர் என்ற வகையில் நீங்கள் பெற்ற சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உறுதிபூண்டே உங்களுக்கு உரை நிகழ்த்துகின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபஜ ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்தர தின வைபவ உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆற்றிய உரை பின்வருமாறு:

அதி வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினர்களே
ஏனைய வணக்கத்துக்குரிய மதத் தலைவர்களே
கௌரவ பிரதமர் அவர்களே
கௌரவ சபாநாயகர் அவர்களே
கௌரவ பிரதம நீதியரசர் அவர்களே
கௌரவ அமைச்சர்களே, இராஜாங்க அமைச்சர்களே 
பாராளுமன்ற உறுப்பினர்களே
கௌரவ ஆளுநர்களே
கௌரவ தூதுவர்களே, உயர் ஸ்தானிகர்களே
ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சகல அரசாங்க உயரதிகாரிகளே
பாதுகாப்பு உயரதிகாரி மற்றும் இராணுவத் தளபதி அவர்களே
வான்படை தளபதி மற்றும் கடற்படை தளபதி அவர்களே
பொலிஸ் மா அதிபர் அவர்களே
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களே
பிரதம விருந்தினர்களே
இராணுவ வீரர்களே
தேசத்தின் அனைத்து சகோதர, சகோதரிகளே, அன்புக்குரிய பிள்ளைகளே
இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாகும். சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ கால ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று இன்றோடு 72 வருடங்களாகின்றது. இன்றைய தினம் அரச தலைவர் என்ற வகையில் நீங்கள் பெற்ற சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உறுதிபூண்டே உங்களுக்கு உரை நிகழ்த்துகின்றேன்.

இச்சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்குமாக தம்மை அர்ப்பணித்த சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பர்கர் ஆகிய தலைவர்களுக்கு எனது பெருமதிப்பை செலுத்துகின்றேன்.

இலங்கையினுள் வாழ்கின்ற ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்போடும் வாழும் உரிமையுண்டு. அவர்களது சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையையும், சுயாதீனமாக அபிப்பிராயம் கொள்ளும் உரிமை போன்று கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையையும் நாம் எப்பொழுதும் உறுதி செய்வோம். எந்தவொரு பிரஜைக்கும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்காகவுள்ள உரிமையை நாம் எப்பொழுதும் மதிப்போம். தத்தமது நண்பர்களை தெரிவு செய்வது போன்று அமைதியான ஒன்று கூடலுக்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுண்டு. இலங்கைப் பிரஜையொருவர் தான் தெரிவு செய்து கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக அரசியல் செயற்பாட்டிலும் அரச நிருவாகத்திலும் சம்பந்தப்படும் உரிமையை நாம் எப்பொழுதும் பாதுகாப்போம்.

இவை அனைத்தும் எவராலும் சவால்விட முடியாத மனித உரிமைகள் என்றே நாம் கருதுகிறோம். ஜனநாயகத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்தும் போது எம்மால் சரிசமப்படுத்த வேண்டிய பல துறைகள் உள்ளன. நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறையானது அதன் போது மிக முக்கியமாகிறது. அதிகாரப் பரவலாக்கலின் போது மத்திய அரசு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்புக்களுக்கு இடையே சிறந்த ஒருமைப்பாடு இருக்க வேண்டும்.

பொது மக்களும் பாதுகாப்புத் துறைகளும் ஒவ்வொருவரின் பொறுப்புக்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் பிரஜைகளுக்கு தனிப்பட்ட உரிமைகளைப் போன்று கூட்டுரிமைகளும் உள்ளனவென்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான கூட்டிணைப்பு இதன்போது முக்கியமாகிறது.

சுதந்திரத்தின் பின் இக் குடியரசுக்குள் ஆட்சிக்கு வந்த ஒவ்வோர் அரச தலைவரும் சர்வஜன வாக்கு அதிகாரத்தின் மூலமாகவே தெரிவு செய்யப்பட்டனர். அவ்வாறு மக்கள் வாக்கினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அரச தலைவர் என்ற வகையில் எனது பதவிக் காலத்திற்குள் நாட்டின் அனைவரினதும் தலைவராக, நாட்டின் நலன்கருதி உச்சகட்ட அர்ப்பணிப்போடு சேவையாற்ற நான் தயாராக உள்ளேன்.

ஜனநாயக ரீதியிலான ஒரு நாட்டில் தகுந்த திறமுறைக்கமைய அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின் அவர் இந்நாட்டின் அனைத்து மக்களதும் ஜனாதிபதியாவார். அவர் தனது பதவிக் காலத்தினுள் முழுமொத்த இலங்கை மக்களுக்காகவே சேவையாற்ற வேண்டும். அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் சேவையாற்றும் கட்டுப்பாடுடையவராகார். ஒரு சமூகத்திற்கு சேவை புரியும் அரசியல் தலைவரல்லாது அனைத்து மக்களினதும் அரச தலைவர் என்ற வகையில் சேவை புரியும் நோக்கு எனக்குள்ளது.

ஜனாதிபதியாக இன, மத, கட்சி அல்லது வேறு எவ்வித பேதங்களுமின்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களையே நான் இன்று பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். எந்தவொரு ஜனநாயக ரீதியிலான சமூகத்திலும் நன்மைக்காகவும் முன்னேற்றத்திற் காகவும் வலுவான நிறைவேற்றுத்துறையும், சட்டவாக்கத்துறையும் அத்துடன் தன்னாதிக்கமுள்ள நீதிமன்றமும் தேவைப்படுகிறது.

ஒரு நாட்டின் இருப்புக்காக இன்றியமையாத இம் முக்கிய நிறுவனங்கள் தொடர்பில் எந்தவொரு வகையிலும் மக்கள் நம்பிக்கை சீர்கெடுமானால் அது ஒரு நாட்டின் அராஜகத்திற்கு காரணமாகும். ஆகையால் அனைத்துத் தரப்புகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாட்டின் நலன் கருதியும், மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கான தேசிய நோக்கையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

இந்நாட்டு மக்களின் தேவைகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு எனக்கு உண்டு. அது எனது பொறுப்பும் கடமையுமாகும். அதனை செயற்படுத்துவதற்கான எந்தவொரு தடையையும் அரசாங்க உத்தியோகத்தர்களிடமிருந்தோ அல்லது சட்டவாக்கத் துறையினரிடமிருந்தோ, அல்லது நீதித்துறையிடமிருந்தோ நான் எதிர்பார்ப்பதில்லை.

நான் உங்களது சுதந்திரத்தை மதிப்பது மட்டுமல்லாது அதன் வளர்ச்சிக்காகவும் அர்த்தமுள்ள ஜனநாயக நாட்டில் அரசியல், பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயலாற்றுவதற்காகவும் உறுதியளிக்கின்றேன். நீண்ட காலமாக அரசாங்க நிருவாக விஸ்தரிப்பு முறையினால் மக்களின் சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. 

தகுந்த ஆய்வு அல்லது ஒருங்கிணைப்பின்றி விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளினால் இன்று மக்கள் பெரும் தொல்லைகளை எதிர்நோக்கியுள்ளனர். இதனூடாக பல ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் காலம், வளங்கள் மற்றும் ஜீவனோபாயம் போன்றவற்றை இழக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும்.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்பான அநேகமான தேவைகளுக்காக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் தேவைகளை நாங்கள் மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தவறுகளை புரிகின்ற அற்பமானவர்களுக்கு எதிராக உடனுக்குடன் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதே தவிர பெரும்பாலானவர்களின் மீது தேவையற்ற கடப்பாடுகளை விதிப்பதை நாங்கள் மேற்கொள்ளலாகாது. சட்டத்தை மதித்தும், ஒழுக்கப் பண்பாட்டோடும், நன்நெறிகளோடும் வாழ்வதற்கான உண்மைச் சுதந்திரத்தை நாம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மக்கள் சுதந்திரமாக சுயதொழிலினை, பாரம்பரிய கைத்தொழிலினை அல்லது தொழிற்றுறையினை புரிவதற்குத் தடையாகும் காலங்கடந்த சட்டதிட்டங்கள், வரி மற்றும் ஒழுங்கு விதிகள் கட்டணங்கள் துரிதமாகத் திருத்தப்பட வேண்டும்.

மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள அநாவசியமான தடைகளை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம். இலங்கை பழைமை வாய்ந்த வரலாற்றுடைய நாடாகும். பௌத்த தத்துவத்தினால் போஷிக்கப்பட்ட சகல மதத்தவர்களுக்கும், சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்பான நாடாகும்.

எனது ஆட்சிக் காலத்தினுள் எவரும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கான சுதந்திரத்தை நான் உறுதிப்படுத்துவேன். நீதி, நியாயத்தை உறுதிப்படுத்தும் அத்துடன் எந்தவொரு பிரசைக்கும் அநீதி விளையாத தார்மீகமான அரச நிருவாக முறையை நடாத்துவதற்கே பௌத்த தத்துவத்தின் மூலம் எமது ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளது.

எனது பதவிக்காலத்தினுள்ளும் இந்நாட்டில் பௌத்த தத்துவத்தைப் பாதுகாத்துப் போஷிப்பதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளை ஒழித்தல் மூலமே மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்க முடிகிறது. ஒற்றையாட்சியினுள் எல்லாப் பிரஜைகளுக்கும் சம உரிமைகள் உரித்தாதல் வேண்டும்.

இன்றும் எமது மக்கள் சமூகத்தினுள் இருப்பவர், இல்லாதவர் எனும் பெருமளவிலான ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. நகர்ப்புற பிரதேசங்களில் உள்ள வசதிகள் கிராமியப் பிரதேசங்களில் இல்லை. எல்லாப் பிரதேசங்களிலும் கல்வி வசதிகள் சமநிலையில் இல்லை. எல்லாப் பிரதேசங்களிலும் சுகாதார வசதிகள் சமநிலையில் இல்லை. தொழில் வாய்ப்புக்கள் எல்லாப் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படவில்லை.

இதுவொன்றும் இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ வலுப்படும் நிலைமைகள் அல்ல. அவை நாட்டின் பொதுப் பிரச்சினைகளாகும். வாழும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் போது நாங்கள் முதன் முதலாக செய்ய வேண்டியது மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்தலாகும்.  ஆகவே தான் நாங்கள் மக்களின் வறுமையை ஒழித்தலை அரசின் முன்னுரிமையாகக் கருதுகின்றோம். முப்பது வருட கால யுத்தத்தைப் போன்று மேலும் பல்வேறு காரணங்களினால் எமது நாட்டின் அபிவிருத்திப் பணிகள் மிகவும் தாமதமாகியுள்ளன. எம்மால் மேலும் காலத்தை வீணாக்க முடியாது.

எமது நாட்டின் விசேடமான புவியியல் அமைவு, பௌதீக வளங்கள் மற்றும் மனித வளங்கள் என்பவற்றை உரியவாறு பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தின் புதிய போக்குகளை அணுகி எமது அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். வினைத்திறன்மிக்க தூய்மையான ஒரு அரச சேவை நாட்டின் அபிவிருத்திக்கு இன்றியமையாத காரணியாகும். மக்களுக்கு சுதந்திரத்தின் அதிகபட்ச பயன்களை வழங்குவதாயின் அரசாங்க நிருவாகம் உரியவாறு நடைமுறைபடுத்தப் படுதல் வேண்டும். இதற்காக முழு மொத்த அரசாங்க நிருவாகமே பொறுப்பை கையேற்க வேண்டும்.

பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், கள்வர்கள், எதிரிகள், குண்டர்கள், கப்பம் பெறுபவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துபவர்கள் ஆகியோரினால் இயல்பான மக்கள் வாழ்விற்கு தடைகள் ஏற்படுமாயின் அவ்விடத்தில் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை.  தேசிய பாதுகாப்பைப் போன்று மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன்பாலும் நாங்கள் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம். பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைவாத அமைப்புக்களை மேலும் இந்நாட்டில் செயற்படுவதற்கு நாங்கள் இடமளியோம். நாடு பூராகவும் பரவியுள்ள போதைப்பொருள் இடையூறிலிருந்து பிள்ளைகளை மீட்கும் வரை பெற்றோருக்குச் சுதந்திரம் இல்லை. அரச நிறுவனங்களினுள் ஊழல்கள், மோசடிகள் இருக்கும் வரை பொது மக்களுக்குச் சுதந்திரம் இல்லை.

ஆகையால் இயல்பான மக்கள் வாழ்வுக்கு அழுத்தம் செலுத்துகின்ற அனைத்து சமூக இடையூறுகளையும் ஒழிப்பதற்காக சட்டத்தை கடுமையாகச் செயற்படுத்து வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்நடவடிக்கைகளை வினைத்திறமை யாக்குவதற்குத் தேவையான சீர்திருத்தங்களை தற்போது பாதுகாப்புத்துறையினுள் ஆரம்பித்துள்ளோம்.  சிந்திக்கும் சுதந்திரத்தையும், எழுதுவதற்கான சுதந்திரத்தையும் நான் முழுமையாக உறுதிப்படுத்துவேன். அப்போது தான் தத்துவஞானிகளைப் போன்று உயர்மட்ட கலை ஆக்கங்கள் உருவாகும்.

எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது. எந்த ஒருவரும் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம். சமூக ஊடகங்கள் சனநாயகத்திற்குப் புதிய சவால்களைத் தொடுக்கின்றது. இணையத்தளத்தில் அதிகமான காலத்தைக் கழித்துக் கொண்டு அநேகமான சந்தர்ப்பங்களில் அறிமுகமற்றவர்களுடன் தொடர்பு கொள்வதால் அவர்களது குற்றங்களின்படி பிழையான தகவல் பிரச்சாரங்களுக்கு உட்பட்டு தமது அபிப்பிராயங்களை விட வேறு அபிப்பிராயம் கொண்டவர்கள் தொடர்பில் உடனுக்குடன் தவறான அபிப்பிராயங்கள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பமுண்டு.

உங்களது மனச்சாட்சியின்படி செயற்படுமாறு நாங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். எப்பொழுதும் நாட்டைப் பற்றி சிந்தியுங்கள். ஏனைய சகோதர நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள். அரசியல் தேவைகளைப் பற்றி மட்டும் சிந்தியாது உங்கள் செயல்களினாலும் சொற்களினாலும் நாட்டுக்கு தீமை ஏற்படுமா அல்லது நன்மை ஏற்படுமா என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்கவும்.

ஆயினும் அரசு பிழையான வழியில் செல்கிறதென உங்களுடைய மனச்சாட்சிக்குத் தென்படுமாயின் எப்பொழுதும் தயங்காது அதனைச் சுட்டிக் காட்டவும். நாங்கள் எப்பொழுதும் சட்டத்தின் இறைமையை மதித்து நடக்க வேண்டும். நீதி, நியாயமாக செயற்படும் போது தான் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கின்றது. சட்டரீதியான நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் நிகழும் கலாசாரத்தை மாற்றுவதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  எமக்கு பல சவால்கள் உள்ளன. அதில் வெற்றிபெறுவதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு உங்கள் அனைவரதும் ஆதரவு தேவைப்படுகின்றது. நான் தங்களின் முன்னிலையில் வைத்த கொள்கைப் பிரகடனம் இன்று நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய செயல் நெறியாகும். அதன் வாயிலாக சுபீட்சமான ஒரு தேசத்தை உருவாக்குவது எமது எதிர்பார்ப்பாகும்.

எதிர்கால சந்ததியினருக்காக தற்கால சந்ததியினரால் தான் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். வரலாற்றினால் எம்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக எம்முடன் ஒன்று சேருமாறு அனைத்து இலங்கை வாழ் மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் அனைவரினதும் வளமான எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்கின்றேன்.

ஜப்பான் தூதுக்குழு ஒன்று உயர் கல்வி தொழில்நுட்பம் புத்தாக்கம் மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவை சந்தித்துள்ளது.

உயர் கல்வி அமைச்சில் இந்த சந்திப்பு சமீபத்தில் இடம்பெற்றது. உயர் கல்வி தொழில்நுட்பம் புத்தாக்கம் மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரோரா மற்றும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை குணப்படுத்தக்கூடிய மேலைத்தேய மற்றும் சுதேச மருத்துவ முறைகள் பற்றி அத்துறையிலுள்ள நிபுணர்களை அழைத்து தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபாக்ஷ சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார, வெளிவிவகார, சுற்றுலா மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுடைய முதலாவது நோயாளி தற்போது நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளார். வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு வைத்தியர்களால் முடிந்துள்ளது. முழுமையான அர்ப்பணிப்புடன் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறைகளையும் சேர்ந்தவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார். மக்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கும் சீனாவிலிருந்து மாணவர்கள் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் விசேட குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

சீனாவின் வூகான் நகரிலிருந்து நாட்டுக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக வழங்கி அவர்களை கவனித்துக்கொள்ளுமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி சுற்றுலாத்துறையை பாதுகாத்து தற்போதைய நிலைமைக்கு முகங்கொடுக்கக்கூடிய நடவடிக்கைகளை பற்றி கவனம் செலுத்தினார்.

நோய் பரிசோதனைக்காகவும் வைத்தியசாலைகளுக்கான வசதிகளையும் முடியுமானளவு விரிவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் பவித்ரா வண்ணியாரச்சி ஆகியோரும் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சக்தி வலு உற்பத்திக்கு நம்பகமானதொரு வலையமைப்பை நிறுவுவதற்கு இலங்கைக்கு உதவ கட்டார் அரசு முன்வந்துள்ளது.

இது சக்தி வலுத் துறையில் உயர்மட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பை இந்த நோக்கத்திற்காக கொண்டு வரும். கட்டார் நாட்டின் சக்தி வலு விவகாரத்துறை அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி (Saad SheridaAl Kaabi) நேற்று (26) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போது இந்த உறுதிமொழியை அளித்தார்.

அண்மையில் நடந்த தேர்தல் வெற்றிக்காக ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த கட்டார் அமைச்சர், தனது நாட்டின் முன்மொழிவை அமுல்படுத்துவது தொடர்பான விடயங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்கான இலங்கை பிரதிநிதியை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி சக்தி வலு உற்பத்தியில் கட்டாரின் ஒத்துழைப்பைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க சக்தி வலு மூலங்களில் இருந்து நாட்டின் 80% சக்தி வலு தேவைகளை பூர்த்தி செய்வதே தனது திட்டமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர அவர்களை தனது பிரதிநிதியாக நியமித்தார். மேலதிக கலந்துரையாடல்களுக்காக ஜனாதிபதியின் செயலாளர் டோஹாவுக்கு அழைக்கப்படவுள்ளார். இலங்கையின் சக்தி வலு திட்டம் குறித்து இவ்விஜயத்தின் போது விளக்கப்படும். பாகிஸ்தான், போலந்து உள்ளிட்ட பல நாடுகளில் இதுபோன்ற முயற்சிகளை தனது நாடு வெற்றிகரமாக நிறுவியுள்ளது என்று கட்டார் அமைச்சர் குறிப்பிட்டார்.

'சக்தி வலு உற்பத்திக்கு அப்பால் கட்டார் அரசுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த நாம் விரும்புகிறோம். எமது நாட்டின் தேயிலை, மரக்கறி மற்றும் பழங்களுக்கான சந்தை வாய்ப்பையும் எதிர்பார்க்கின்றோம். இது போன்ற உற்பத்திப் பொருட்களை ஏனைய நாடுகளுக்கும் வழங்குவதற்கான விரிவான ஆற்றல் எங்களிடம் உள்ளது' என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்கு சாதகமாக பதிலளித்த கட்டார் அமைச்சர், இலங்கைக்கான தனது இந்த விஜயம் இத்தகைய மேம்பட்ட ஒத்துழைப்பின் முதற் படியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இலங்கைக்கான கட்டார் நாட்டின் தூதுவர் ஜாசிம்பின் ஜாபிர் அல்-சரூர், (Jassimbin Jaber Al-Sorour) வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான முதலாவது பாதுகாப்பு மத்திய நிலையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மக்களிடம் கையளித்தார்.

களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் வழங்கிய காணியில். இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மத்திய நிலையத்திற்கு 55 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.13 மாத காலப்பகுதியில் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் பல பங்களிப்புக்களை வழங்கியிருந்தன. மாற்றுத் திறன் கொண்ட பிள்ளைகள் இலவசமாக இந்த நிலையத்தில் சிகிச்சைகளைப் பெற முடியும்.

இந்த நாட்டில் சர்வதேச கல்வி மையத்தை நிர்மாணிக்க உயர்கல்வி அமைச்சர் முன்வைத்த அமைச்சரவை முன்மொழிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் கூட்டத்தில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சரும் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் அமைச்சருமான கௌரவ பந்துல குணவர்தன அவர்கள் இதனை தெரிவித்தார்.

 ஆண்டுதோறும் 30,000 மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 21,000 மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்புகளைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள் என்றும், சர்வதேச கல்வி மையம் நிறுவப்பட்ட பின்னர், பசுமையான மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்லும் செல்வத்தை நம் நாட்டுக்கு சேமிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். எங்கள் மாணவர்கள் உயர் கல்விக்காக நாட்டை விட்டு வெளியேறும்போது, சுமார் 50 பில்லியன் ரூபாய் நாட்டை விட்டு வெளியேறுகிறது, இது ரூபாய் தேய்மானத்தின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அமைச்சர் கூறினார். இத்தகைய சூழ்நிலையில் கூட பங்களாதேஷ், மாலைதீவு போன்ற நாடுகளிலிருந்து மாணவர்கள் உயர் கல்விக்காக நம் நாட்டுக்கு வருகிறார்கள், கடந்த ஆண்டு இதுபோன்ற 1,568 மாணவர்கள் வந்துள்ளனர் என்று அமைச்சர் வலியுறுத்தினார். தகவல் தொழில்நுட்பம், உயிரியல் முறைமைகள் தொழினுட்பம், பொறியியல்துறை, ஆங்கிலம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களில் கல்வியைக் கற்பதே அவர்களின் பிரதான நோக்கம்.

 உலகில் முதலிடத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவுவதற்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாரியம் வழங்கும் வரி சலுகைகளை வழங்குவதன் மூலம் இந்த நாட்டில் வெளிநாட்டுக் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கும் வழிவகுப்பேன் என்று அமைச்சர் விளக்கினார். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பாடநெறி கட்டணத்தை நிலையான வெளிநாட்டு நாணயத்தில் செலுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என்று அவர் மேலும் கூறினார்.

 கணக்கியல் துறையில் நிபுணர்களை உருவாக்க முன்மொழியப்பட்ட சர்வதேச கல்வி மையத்தை வளமான களமாக மாற்றுவதற்கு தனது ஆதரவை வழங்குவதாக வொஷிங்டனில் உள்ள சர்வதேச கணக்காளர் கூட்டமைப்பின் (IFAC) தலைவர் டாக்டர் இன்-கி ஜூ உறுதியளித்ததாக அமைச்சர் குணவர்தன மேலும் இதன்போது தெரிவித்தார். இந்த உண்மையை தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ஊடகங்களுக்கு இதன்போது கோரிக்கை விடுத்தார்.

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 100,000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தில், பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் விசேட குழுவின் மூலம் தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடியவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என்று தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்துக்கு அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் பாரிய அளவில் கிடைத்துவருகின்றது. அரச அதிகாரிகள் தொடர்பில் நம்பிக்கை இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். தகவல் தொழில்நுட்ப அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெவித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை பலநோக்கு அபிவிருத்தி செயலணி முன்னெடுக்கும். திணைக்களத்துக்கு விரைவில் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விசேட குழுவின் மூலம் தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடியவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். இதற்கான குழு இவர்களின் தகைமை குறித்தும் கண்டறியும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பிரதேச செயலாளர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். அரசாங்கம் பொது மக்களுக்கு மேற்கொள்ளும் சேவையை செயல்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் எந்தவித அரசியல் தலையீடுகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல் என்ற குறிக்கோளை அடையும் நோக்கத்துடன் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கல்வி பொது தராதர சாதாரண தரத்திலும் பார்க்க குறைந்த கல்வி தரத்தைக் கொண்டவர்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திணைக்களத்தின் மூலம் தொழில்வாய்ப்பைப் பெறவுள்ளளோருக்கு 6 மாத தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் 2020.02.15 திகதிக்கு முன்னர் பயனாளிகள் வாழும் கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றிற்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சியின் பின்னர் தொழில் தகைமைக்கு ஏற்ப தொழில்வாய்ப்பு வழங்கப்படும். விவசாய உற்பத்தி உதவியாளர் பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு சேவை உதவியாளர் அடங்கலாக 25 சேவை பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான விண்ணப்ப படிவங்களை பிரதேச செயலக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பான விபரங்கள் அடங்கிய விளம்பரத்தை பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் (20.01.2020 வெளியான தினகரன், தினமின மற்றும் டெய்லி நியூஸ் ஆகிய தமிழ் சிங்களம் ஆங்கிளம் ஆகிய பத்திரிகைகளில் வெளியpட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீழ்ச்சி அடைந்துள்ள கொழும்பு பங்குச் சந்தையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு துரிதமான நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கம் பங்களிப்பு செய்யவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குத் தரகர்களுடன் நேற்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கடந்த 4 அரை வருட காலப்பகுதியில் கொழும்பு பங்குச் சந்தை பாரிய பின்னடைவுக்குள்ளானது. இதன் காரணமாக பங்கு சந்தை தரகர்களின் நிறுவனங்கள் பல மூடப்பட்டன, இதனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றிய பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்திருப்பதாகுவும் கொழும்பு பங்குச் சந்தையுடன் தொடர்புபட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலின் போது பிரதமரிடம் சுட்டிக்காட்டினர்.

கொழும்பு பங்குச்சந்தை பரிமாற்றத்தை துரிதப்படுத்துவதற்காக வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகளை கொழும்பு பங்கு சந்தையில் முதலீட்டுக்காக பயன்படுத்தப்படவேண்டும் என்றும் பங்குச் சந்தை தரகர்கள் சங்கம் இதன்போது சுட்டிக்காட்டின.

கடந்த 4 அரை வருட காலப்பகுதியில் 15 வருட காலம் அளவில் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதனால் மீண்டும் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு தற்போதைய அரசாங்கம் துரிதமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார். இதன் கீழ் கொழும்பு பங்குச்சந்தையை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

இந்த 2020 ஆம் ஆண்டில் 1,000 மாணவர்களுக்கு கணனி டிப்ளோமா அல்லது உயர்தர டிப்ளோமா பாடநெறியை தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஹோமாகம தியகமவில் அமைந்துள்ள தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அமைச்சர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு கலந்துறையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

வார இறுதி நாட்களில் இந்த டிப்ளோமா பாடநெறியை கற்பதற்கு ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும் என்றும், இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.

தொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் வகையில் உடனடியாக அரச தொழில்களுக்கு நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த பட்டதாரிகளுடன் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.DSC 5955பயிற்றப்படாத ஊழியர்கள் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய பிரிவினராக உள்ளனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒரு பலமான அடிப்படையுடன் கைத்தொழில் துறை நாட்டில் கட்டியெழுப்பப்படவில்லை. நாட்டின் எதிர்கால பயணத்திற்கு உள்ள பெரும் பலம் மனிதவளமாகும். எனவே நாட்டின் கற்ற இளைஞர், யுவதிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து, அவர்களை பொருளாதார அபிவிருத்திக்கு பங்காளர்களாக ஆக்குவது முக்கிய தேவையாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.DSC 6014ஒரு சிறு பிரிவினரால் ஏற்படும் தவறுகளின் காரணமாக முழு அரச சேவையின் மீதும் குற்றம் சுமத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. அன்றாடம் இடம்பெறும் தவறுகள் முழு அரச சேவைக்கும் இழுக்கை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மக்க வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தின் மூலமே அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. வினைத்திறனானதும் முறையானதுமான அரச சேவையின் மூலம் தமக்கு ஊதியம் வழங்கும் மக்களுக்கு நியாயமானதொரு சேவையை பெற்றுக்கொடுப்பது அரச ஊழியர்களின் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவுபடுத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வேண்டும். இதற்காக அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் அனைத்து பிள்ளைகளையும் நாட்டின் பொருளாதாரத்தின் பங்காளர்களாக மாற்றும் கல்வி முறைமையொன்று திட்டமிடப்பட்டு வருகின்றது. உலகின் ஏனைய நாடுகளின் தொழில்வாய்ப்புகளுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டிய தேவையுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற் சந்தைகளுக்கு பொருத்தமான வகையில் புதிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட மூலோபாயத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும். இளைஞர், யுவதிகள் தொழிற் தேடிச் செல்வதற்கு பதிலாக தொழில் வாய்ப்புகள் இளைஞர், யுவதிகளை தேடிவரும் கல்வி முறைமையொன்றை விரைவாக ஏற்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர்களான ஷெகான் சேனசிங்க, ஜானகவக்கும்புர, கஞ்சன விஜேசேகர, கனக்க ஹேரத் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பிரேமரத்ன, டி.பி.ஜானக்க, தேனுக விதானகமகே, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…