சமீபத்திய செய்தி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் – National Thawheed Jammath (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கம் – Jamathei Millathu Ibraheem zeilani (JMI) ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய அவ்வியக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் செயற்பட்டுவரும் ஏனைய இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளும் அவசர கால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ISIS பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கான பலம் இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் உள்ளதென ஜனாதிபதி தெரிவிப்பு…
சர்வதேச பயங்கரவாதத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்….
அமைதியான சூழலொன்றை ஏற்படுத்தும் பொறுப்புடன் ஊடகங்களை கையாளுமாறு ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள்…..
ISIS பயங்கரவாத செயற்பாடுகளை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டும் பலம் எமது நாட்டின் பாதுகாப்புத் துறையிடம் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்த பயங்கரவாத இயக்கத்தை இலங்கையிலிருந்து அடியோடு ஒழித்து விரைவாக நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். இன்று (26) கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பணிப்பாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பெருமளவு ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த எதிர்பாராத நிலைமைகளுக்கு மத்தியில் அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
இது தொடர்பான பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவத்தையும் நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தான் தயாராக இல்லை என்றும் இலங்கை பாதுகாப்பு துறை மீது தான் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பொலிஸ், விசேட அதிரடிப் படை, குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் முப்படையினர் மிகவும் வெற்றிகரமாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ISIS பயங்கரவாத இயக்கம் பற்றிய அனுபவமுள்ள உலகின் முன்னணி நாடுகளின் நிபுணர் குழுக்கள் நாட்டிற்கு வருகை தந்திருப்பதாகவும், அவர்கள் எமது பாதுகாப்பு படையினருடன் இணைந்து விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். மேலும் கிடைக்கப்பெற்றுள்ள பாதுகாப்பு தகவல்களுக்கு ஏற்ப இந்த பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட சுமார் 130 பேர் இலங்கையில் இருப்பதாகவும் அவர்களில் சுமார் 70 பேர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச பயங்கரவாதத்திற்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வருவதனை நினைவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு தற்போது இலங்கை முன்னெடுத்திருக்கும் போராட்டமும் இதற்கு காரணமாக இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். எவ்வாறான போதும் நாட்டினுள் ஏற்பட்டிருக்கும் இந்த எதிர்பாராத நிலைமைகளுக்கு மத்தியில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், நாட்டினுள் அமைதியான சூழலொன்றை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பொறுப்புடன் ஊடகங்களை கையாளுமாறும் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அனைத்து முஸ்லிம் சமூகத்தையும் ஒருபோதும் சந்தேகக் கண்கொண்டு நோக்க வேண்டாம் என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஒரு சிறு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த துன்பியல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை (2019.04.26)
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் செயற்பாடுகளின் மூலம் உலகில் ஏற்பட்டிருக்கின்ற அனேக சம்பவங்களைப்போன்றே எமது நாட்டிலும் ஏற்பட்டிருக்கும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பற்றி நான் இங்கு உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாம் 30 வருடங்களாக மிகவும் தீவிரமான பயங்கரவாத இயக்கத்துடன் போராடி அதில் வெற்றிபெற்ற நாட்டினராவோம். அந்த 30 வருட காலப்பகுதியில் சில சந்தர்ப்பங்களில் எமக்கு வெற்றிகள் கிடைத்த அதேவேளை சில சந்தர்ப்பங்களில் தோல்விகளுக்கும் முகங்கொடுக்க நேர்ந்தது.
ஒரு இலட்சம் இந்திய படையினர் இலங்கைக்கு வருகை தந்தும் எல்ரீரீஈ. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் திரும்பிச் சென்றனர் என்பதே வரலாறு. கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் பற்றி எமது நாட்டின் அரசியல் துறையில் குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் நாட்டில் முதன்முறையாக இவ்வாறானதொரு குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக சுட்டிக்காட்ட முனைகின்றார்கள். இதற்கு முன்னர் பதவியில் இருந்த அனைத்து ஜனாதிபதிகளினதும் ஆட்சிக்காலப் பகுதியில் குண்டுகள் வெடித்துள்ளன. இதுதான் உண்மையான நிலைமை. ஜே.ஆர்.ஜயவர்தன முதல் மஹிந்த ராஜபக்ஷ காலப் பகுதி வரை குண்டு வெடிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களின்போது சிங்கள மக்கள் எல்ரீரீஈ. இயக்கம் 1980களில் ஆரம்பமானபோது அனைத்து தமிழ் மக்களையும் பயங்கரவாதிகளாகவே பார்க்கத் தொடங்கினர். ஆயினும் பிற்காலத்தில் யுத்தம் தொடர்ந்தபோது எல்ரீரீஈ. இயக்கம் என்பது என்ன என்பதைப் பற்றி தெளிவாக தெரியவந்தபோது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களைப் பற்றிய தமது பார்வையை மாற்றிக்கொண்டனர்.
சிறிய ஒரு பிரிவினரே இத்தகைய பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். ஆகையால் இன்றைய தினத்திலும் குறிப்பாக நான் இந்த நாட்டு மக்களிடம் அனைத்து முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். நான் நேற்று காலை சர்வ கட்சி மாநாட்டை நடத்தியதோடு, நேற்று மாலை சர்வ மத கூட்டத்தினை நடத்தினேன். அந்த சர்வ மத கூட்டத்தின்போது இளம் முஸ்லிம் மதகுரு ஒருவர் தேம்பித் தேம்பி அழுத்தார். அவரது அழுகையை எமக்கு நிறுத்த முடியாது போய்விட்டது. “எனது பிள்ளை சிங்கள பாடசாலைக்கு செல்கிறது. நாம் காலியில் வசிக்கின்றோம். இந்த சம்பவம் உருவாகியிருக்கும் நிலைமையின் காரணமாக எம்மால் வீதியில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. 30 வருட யுத்தம் இருந்தபோது கூட பாதுகாப்பு துறையினர் ஒருபோதும் முஸ்லிம் மக்களின் ஒரு பொதியையேனும் பரிசோதனை செய்யவில்லை. ஆனால் இன்று முஸ்லிம் என்று தெரிந்ததும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். இதனால் இப்போது எனது பிள்ளையை பாடசாலைக்கு கூட அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றதெனக்” கூறி அழுதார்.
ஆகையால் நாம் மிக தெளிவாக இந்த நாட்டின். அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்வது முஸ்லிம் பொதுமக்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களை வைராக்கியத்துடன் பார்க்கக்கூடாது. நாட்டின் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டியதன் அவசியம் பற்றி எமக்கு ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன. எனவே மிகவும் சிறிய ஒரு பிரிவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மோசமான துன்பியல் சம்பவத்தை நாம் மிகத் தெளிவாக கண்டிக்கிறோம். இதனை நிராகரிக்கின்றோம். அதேபோன்று இதனை ஒரு அருவருப்பான செயலாகவே பார்க்கின்றோம்.
செப்டெம்பர் 11 அமெரிக்காவில் வர்த்தக நிலைய கட்டிடத்தின் மீது அல்கைதா இயக்கம் இரண்டு விமானங்களைக் கொண்டு தகர்த்தது. மற்றுமொரு விமானத்தை அனுப்பி அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு மத்திய நிலையமாகிய பென்டகன் மீது குண்டு வீசியது. உலகில் யுத்த ரீதியாக அதி நவீன தொழிநுட்பத்தையும் பாதுகாப்பையும் நவீன உபகரணங்களையும் கொண்டுள்ள பலமான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட நாட்டின் மீதே அத்தகைய தாக்குதல் இடம்பெற்றது. அந்த இரண்டு வர்த்தக கோபுரங்களிலும் இருந்த சுமார் 1600 பேர் பலியாகினர். அமரிக்கா மட்டுமல்லாது முழு உலகும் அமெரிக்க பாதுகாப்பு மத்திய நிலையத்தின் மீது குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து ஆச்சரியத்திற்குள்ளானது. குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கடுமையான செயற்பாடுகள் 2016 – 2017களில் தீவிரமாக இருந்து வந்தபோது ஐரோப்பாவின் பிரதான நாடுகளுக்கு அதுவே முக்கிய பிரச்சினையாக இருந்து வந்தது. ஐரோப்பாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தாக்குதலுக்குள்ளாகாத நாடுகளே இல்லை எனலாம். இங்கிலாந்திலும் பிரான்சிலும் ஜெர்மனியிலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி என்னை விட நீங்கள் அறிவீர்கள். அந்தளவு தாக்கத்தை இந்த சர்வதேச பயங்கரவாத இயக்கம் உலகில் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மைப்போன்ற யுத்த ரீதியில் அதி நவீன தொழிநுட்ப வசதிகள் இல்லாத நாடுகள் அல்ல இந்த நாடுகள். அனைத்து வகையான நவீன தொழிநுட்ப வசதிகளையும் கொண்ட நாடுகளின் மீதே அந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று தான் நான் இதை கூறுவதன் மூலம் சுயலாபம் பெற்றுக்கொள்வதற்காக கூறவில்லை. உலகில் மத தீவிரவாதத்திற்கும் போதைப்பொருள் வியாபாரத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. மத தீவிரவாதமும் போதைப்பொருள் கடத்தலும் சர்வதேச ஆயுத கடத்தலும் ஒரே வலையமைப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள நான் பல புத்தகங்களை வாசித்தேன். அதேபோன்று போதைப்பொருள் கடத்தலுக்கும் பயங்கரவாதத்திற்குமிடையிலும் பலமானதொரு பினைப்பு காணப்படுகின்றது. எல்ரீரீஈ. இயக்கத்தின் முக்கிய வருமான வழியாக இருந்ததும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரமுமேயாகும்.
சிலவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அவர்களது கொள்கை அடிப்படையில் உலகின் ஏனைய நாடுகளின் மீது மேற்கொண்ட தாக்குதலைப்போன்று நமது நாட்டின் மீதும் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்க கூடும். ஆயினும் அந்த தாக்குதல் எனது போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் காரணமாக விரைவுபடுத்தப்பட்டிருக்கக்கூடும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் நாம் அன்று பாராளுமன்றத்தில் பேசியதைப்போன்று வாய்க்கு வந்த எல்லாவற்றையும் பேசாது பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் செயற்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் என்பது என்னவென்பதைப் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் கட்டாய தேவையாகும். அத்தோடு இனவாதம் என்பதும் பயங்கரவாதம் என்பதும் இரு வேறுபட்ட விடயங்களாகும் என்பதையும், பயங்கரவாதம் என்றால் என்பதை பற்றியும் எமக்கு தெளிவாகத் தெரியும். இருப்பினும் சர்வதேச பயங்கரவாதம் பற்றி நாம் இதுவரையில் ஊடகங்களின் வாயிலாக மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று அதனை அனுபவிக்க நேர்ந்திருக்கிறது.
குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் அரசியல் நோக்கம் பற்றி பார்க்கின்றபோது, அவ்வியக்கம் நாடுகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அரசியல் ஸ்திரமற்ற சூழலை உருவாக்கி, மக்களின் அமைதியை சீர்குழைத்து அவர்களது நோக்கங்களை அடைந்துகொள்ள முன்னெடுத்துவரும் செயற்பாடுகளாகவே இத்தாக்குதல்கள் அமைகின்றன. முக்கியமாக அவர்கள் இந்த தாக்குதல்களை மேற்கொள்வது மேற்குலக அரசியல் சிந்தனைக்கும் மேற்குலக சமய தத்துவத்திற்கும் எதிராகவேயாகும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர்கள் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் வத்திக்கானிலும் தமது இயக்கத்தின் கொடியை ஏற்றுகின்ற நாளே அவ்வியக்கத்திற்கு உண்மையான வெற்றி கிட்டிய நாளாகுமென குறிப்பிட்டிருந்தனர். அந்த அடிப்படையிலேயே இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றதென நான் நினைக்கின்றேன்.
போதைப்பொருள்கள் பற்றி பேசுகின்றபோது நான் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கின்ற செயற்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் போதைப்பொருளுக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒருவர்தான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள். சுமார் 3 வாரங்களுக்கு முன்னர் அவரின் தலைமையில் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்து சுமார் நான்காயிரம் பேர் மோதரை பிரதேசத்தில் ஒன்று சேர்ந்து எனக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். கார்டினல் அவர்களின் இந்த போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை போதைப்பொருள் ஒழிப்பிற்கு பெரும் பலமாக இருந்தது. இதனால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கம் அதன் பின்னணி சர்வதேச தொடர்புகள் ஆகியவற்றைப் பற்றி நாம் அறிவுபூர்வமாக விளங்கிக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எமது நாட்டில் 30 வருட காலமாக இருந்து வந்த எல்ரீரீஈ. இயக்கத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. எல்ரீரீஈ. பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்த பெறுமை எமது இராணுவத்தினருக்கு இருக்கின்றது. அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உரைகளில் அநேகமானவர்கள் வீரர்கள் போன்று பேசினார்கள். இந்த தாக்குதலை அரசாங்கத்தினால் தவிர்க்க முடியாமல் போனதாக குறிப்பிட்டார்கள். நாங்கள் என்றால் எல்ரீரீஈ. இயக்கத்தை தோல்வியுறச் செய்தோம் என்றும் கூறினார்கள்.
நான் ஏற்கனவே கூறியதுபோன்று அமெரிக்காவின் பென்டகனினாலேயே அதனை தவிர்க்க முடியவில்லை. 1600 பேர் ஒரே இடத்தில் பலியானார்கள். அமெரிக்காவைப் போன்ற பாரிய நாட்டுக்கே பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் போனது. குறிப்பாக அதி நவீன தொழிநுட்பமுள்ள ஒரு நாட்டினாலேயே அது முடியாமல் போனது. எல்ரீரீஈ. இயக்கத்திற்கு எதிரான யுத்தத்தில் சர்வதேச ரீதியாக எமக்கு சிறியளவிலான உதவியே கிடைத்தது. சர்வதேசத்தில் பெரும்பாலானவர்கள் எல்ரீரீஈ. இயக்கத்திற்கு உதவினர். அது இலங்கையில் இடம்பெற்ற விடுதலை போராட்டம் என்றே மேற்குலக நாடுகள் எல்ரீரீஈ. இயக்கத்திற்கு உதவினர்.
மனித உரிமைப் பற்றி பேசி கடந்த நான்கு ஆண்டுகளாக இராணுவத்தினரையும் புலனாய்வு துறையையும் பலவீனப்படுத்தியவர்களை இன்று இந்த தாக்குதலின் பின்னர் கண்டுகொள்ள முடியாதுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக எனக்கும் அரசாங்கத்திற்குமிடையில் இருந்துவரும் முரண்பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதற்கு அடிப்படையான காரணம் நாட்டின் இராணுவ புலனாய்பு பிரிவை பலவீனப்படுத்தி இராணுவ அதிகாரிகளை தேவையற்ற விதத்தில் சிறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நான் அரசாங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பை வெளியிட்டமையாகும். அச்சந்தர்ப்பங்களில் இந்த நாட்டின் மனித உரிமை அமைப்புகளின் உறுப்பினர்கள் சகலருக்கும் சட்டம் சமமானதாக இருக்க வேண்டுமென வாதிட்டார்கள். ஆயினும் சட்டம் அனைவருக்கும் சம்மானதுதான் அதற்காக பாதுகாப்பு படையினரை பலவீனப்படுத்த முடியாது என்று கூறினேன். அதேபோன்று புலனாய்வு துறையை பலவீனப்படுத்தவும் இடமளிக்க முடியாதெனக் கூறினேன். முன்னாள் இராணுவ தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற போது நான் மேற்கொண்ட ஒரு உரையின் காரணமாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியது உங்களுக்கு நினைவு இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
அவ்வாறு நான் இராணுவத்தையும் புலனாய்வு பிரிவையும் பாதுகாக்கவே போராடினேன். எமது சில புலனாய்வு துறை நிபுணர்கள் கடந்த காலங்களில் நாட்டைவிட்டுச் சென்றனர். சிலர் இலங்கையில் இருக்க முடியாது என என்னிடம் கூறி வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றனர். நான் சில நாடுகளின் தூதுவராலயங்களுக்கு அவர்களை அனுப்பினேன். ஏனென்றால் அரசாங்கத்தின் பங்காளி தரப்பினர் இவர்களை இருந்த பதவிகளில் தொடர முடியாதென உறுதியாகக் கூறினர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது எத்தகைய இயக்கம் என்பதைப் பற்றி நாம் எமது கவனத்தை செலுத்த வேண்டும். இங்கு வருகை தந்திருக்கின்ற ஊடகவியலாளர்களிடமும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களிடமும் நான் மிகவும் கௌரவமாக கேட்டுக்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களின் வாயிலாக மக்களை அமைதிப்படுத்துகின்ற பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தை மாற்றுவதற்கு, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு, மக்களை அமைதியாக வைத்திருப்பதற்கு, மக்களை மகிழ்ச்சியாகவோ அச்சத்துடனோ வைத்திருப்பதற்கு அரசியல்வாதிகளை பார்க்கிலும் ஊடகங்களினாலேயே முடியும். உலகில் எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சுதந்திர ஊடகங்களின் நடவடிக்கைகளின் மூலம் அந்த பயங்கரவாத தாக்குதலின் நோக்கம் சிலவேளை நிறைவேறி இருக்கின்றது. அரசாங்கங்களும் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கின்றன.
நான் இப்படி கூறுவதையிட்டு கோபம் கொள்ள வேண்டாம். எமது சில இலத்திரனியல் ஊடகங்களில் அடிக்கடி “பிரேக்கிங் நியுஸ்” வெளியிடப்படுகின்றது. கடந்த நான்கு நாட்களாக நான் அதனை அவதானித்தேன் பிரேக்கிங் நியுஸ் ஒன்று வருகின்றபோது அனைவரும் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு அதனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவை பிரேக்கிங் நியுசாக வருகின்ற அளவிற்கு பொருத்தமான விடயங்கள் அல்ல. பிரேக்கிங் நியுஸ் வரவேண்டும் தான். ஆனால் அதன் மூலம் மிக மிக முக்கியமான ஒரு செய்தியே மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அண்மையில் வந்த அத்தகைய பிரேக்கிங் நியுஸ்களை பார்க்கின்றபோது ஏன் இதனை இவ்வளவு கலவரப்பட்டு வெளியிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த பிரேக்கிங் நியுஸ்களை இன்னும் 12 மணி நேரத்திற்கு பின்னர் கூறினாலும் பரவாயில்லை எனத் தோன்றியது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாக நாட்டை அமைதிப்படுத்துவதற்கும் நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த பயங்கரவாதத்தை விரைவில் ஒழித்துக்கட்டுவதற்கும் உங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு மிகவும் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அரச புலனாய்வு பணிப்பாளருக்கு இந்த தாக்குதல் சம்பவம் பற்றி முதலில் முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. வெளிநாடு ஒன்றினால் புலனாய்வு பணிப்பாளருக்கு வழங்கப்பட்ட கடிதம் நீண்டதொரு கடிதமாகும். அதை நீங்களும் பார்த்திருக்கக்கூடும். அந்த கடிதத்தில் இவ்வாறானதொரு தாக்குதல் விரைவில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தாக்குதல்கள் நடத்தப்படும். எனினும் அதேபோன்று முக்கியமாக மக்கள் ஒன்றுசேரும் இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து கடிதத்தில் உள்ள விடயம் தாக்குதல் இடம்பெறும் விதம், குண்டுவெடிப்புகள், ஸ்னைப்பர் தாக்குதல்கள், வேறு வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்று 5 அல்லது 6 விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அத்தோடு அத்தாக்குதலுடன் தொடர்புபடுகின்றவர்களின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த விடயங்கள் எமது வெளிநாட்டு நட்பு புலனாய்வு துறையினால் எமது புலனாய்வு துறை பணிப்பாளருக்கு ஏப்ரல் 04ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை இந்த கடிதம் அங்குமிங்கும் சென்றுள்ளது. புலனாய்வு துறை பணிப்பாளர் தனது பணியை செய்திருக்கின்றார். பாதுகாப்பு செயலாளருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் இதனை பெரிதாக கொள்ளாது, இதன் பாரதூரத்தை கருத்திற்கொள்ளாது தேசிய பாதுகாப்பு பிரதானிக்கு இந்த கடிதத்தில் குறிப்பொன்றை எழுதி அனுப்பியுள்ளார். அந்த தேசிய பாதுகாப்பு பிரதானி அந்த கடிதத்தை அவரது கடமை நிமித்தம் சாதாரண முறையிலேயே அனுப்பி இருக்கிறார். அவர் அந்த கடிதத்தை பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியிருக்கிறார். பொலிஸ்மா அதிபரின் கைக்கும் பாதுகாப்பு செயலாளரின் கைக்கும் சென்ற அதுவே ஊடக நண்பர்களுக்கு கிடைத்த முழுமையான விபரங்கள் அடங்கிய கடிதமாகும். அதுவே இவ்வாறு குறிப்புகளுடன் சென்றிருக்கிறது. அதன் பின்னர் பொலிஸ்மா அதிபர் அதில் குறிப்பொன்றை எழுதி இன்னும் 05 பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு அனுப்பியிருக்கின்றார். அந்த பிரதி பொலிஸ்மா அதிபர்களில் ஒருவர் பிரதி பொலிஸ்மா அதிபரான பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தசநாயக்கவாகும். அவர் பிரபுக்கள் பாதுகாப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு இந்த கடிதத்தின் விபரங்களை அனுப்பி இப்படியான தாக்குதல் ஒன்று இடம்பெறவிருப்பதால் பிரபுக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆயினும் பாதுகாப்பு செயலாளர் அல்லது பொலிஸ்மா அதிபர் அல்லது கடிதத்தை அனுப்பி வைத்த 5 பிரதி பொலிஸ்மா அதிபர்களில் 4 பேரும் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வில்லை. இந்த வகையில் ஏப்ரல் 04ஆம் திகதி முதல் ஏப்ரல் 12ஆம் திகதி வரை ஒருவர் மாறி ஒருவருக்கு இக்கடிதம் கைமாறியுள்ளது. நான் வெளிநாடு சென்றதாகவும் எவருக்கும் நாட்டின் பாதுகாப்பை பொறுப்பளிக்கவில்லை என்றும் என்மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் வெளிநாடு செல்கின்றபோது பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளிநாடு செல்லும்போதும் பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கவில்லை. பதில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை 2007 – 2010 காலப் பகுதியில் யுத்தம் கடுமையாக இருந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ 5 சந்தர்ப்பங்களில் என்னிடம் பொறுப்பளித்திருக்கிறார். ஆனால் 2010க்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவும் எவருக்கும் பதில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கவில்லை.
எனவே இந்த கடிதம் ஏப்ரல் 04ஆம் திகதி இலங்கையில் முக்கியஸ்தர்களிடம் கிடைக்கப்பெற்று ஏப்ரல் 12ஆம் திகதி வரை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு மத்தியில் பரிமாற்றப்பட்டிருக்கிறது. நான் ஏப்ரல் 16ஆம் திகதி வெளிநாடு சென்றேன். அதாவது அந்த கடிதம் கிடைக்கப்பெற்று 12 நாட்களின் பின்னரே நான் வெளிநாடு சென்றிருக்கின்றேன். அதுவரையில் அந்த கடிதம் கிடைக்கப்பெற்றது பற்றி பாதுகாப்பு செயலாளரோ பொலிஸ்மா அதிபரோ எனக்கு அறிவிக்கவில்லை. இந்த கடிதத்தை என்னிடம் காட்டவும் இல்லை. இது நான் தப்பித்துக்கொள்வதற்காக கூறுகின்ற விடயங்கள் அல்ல. என்றாலும் உண்மையான நிலைமை பற்றியே இங்கு குறிப்பிடுகின்றேன். 16ஆம் திகதி நான் இந்தியாவுக்கு யாத்திரை பயணம் ஒன்றை மேற்கொண்டேன். 3 நாட்கள் இந்தியாவில் இருந்தேன். இந்தியாவில் இருந்து இங்கு வருவதற்கு ஒரு மணித்தியாலமே தேவைப்படும். ஆயினும் அப்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆகையால் நான் ஓய்வுக்காகவே சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு நான் 3 நாட்கள் தங்கியிருந்தேன். 21ஆம் திகதி மாலையிலேயே நான் இலங்கை வர இருந்தேன். 21ஆம் திகதி காலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் சிங்கப்பூரிலுள்ள எனது நண்பர் ஒருவர் அவரது கைத்தொலைபேசியில் இதோ ஜனாதிபதி அவர்களே, சமூக ஊடகங்களில் இப்படியொரு கடிதம் சுற்றிக்கொண்டிருக்கிறது என என்னிடம் காட்டினார். அது பிரதி பொலிஸ்மா அதிபர் தசநாயக்க பிரபுக்கள் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இத்தகைய சம்பவமொன்று இடம்பெறக்கூடும். ஆகையால் அவர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறி அனுப்பிய கடிதமாகும். நான் தசநாயக்கவின் அந்த கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள சமூக ஊடகத்திலேயே பார்த்தேன். அந்த கடிதம் பொலிஸ்மா அதிபரின் பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சென்றிருக்கின்றது. அவர் தான் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளர். பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைகளை, ஆவணங்களை அனுப்புகின்றவர். அதாவது பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர்தான் இந்த கடிதத்தை தசநாயக்கவுக்கும் ஏனைய பொலிஸ்மா அதிபர்களுக்கும் அனுப்பியிருக்கிறார். பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர் பிரபுக்கள் பாதுகாப்பு பற்றி தசநாயக்கவிடம் தெரிவித்திருக்கிறார். என்றாலும், தசாநாயக்க என்பவர் ஜனாதிபதியினதோ பிரதமரினதோ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரி அல்ல, ஆயினும் அந்த பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர் தனது அந்த கடிதத்தை ஏனையவர்களுக்கு அனுப்பியதை போன்று ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் அனுப்பியிருக்க வேண்டும். என்றாலும் இந்த இருவரில் ஒருவருக்கேனும் அந்த கடிதம் அனுப்பப்படவில்லை. பிரதமருக்கு அறிவிக்கப்படவும் இல்லை. அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவும் இல்லை. இதனாலேயே எமக்கு தெரியாது என அண்மையில் கூறப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டம் கடைசியாக ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி இடம்பெற்றது. அதற்கடுத்த அமைச்சரவைக் கூட்டம் ஏப்ரல் 16ஆம் திகதி நடைபெற இருந்தது. ஏப்ரல் 09ஆம் திகதி கூட்டத்தின்போது அனைத்து அமைச்சர்களும் அதற்கடுத்த அமைச்சரவை கூட்டத்தை நடத்த வேண்டாம். நாம் விடுமுறைப் பெற வேண்டியுள்ளதெனக் கூறினர். ஆகையால் தான் அடுத்த அமைச்சரவைக்கூட்டம் தாமதப்பட்டது என்பதை தெளிவாகக் கூற வேண்டும். ஆயினும் இந்த பொறுப்பிலிருந்து கைநழுவுவதற்காக நான் இதை கூறவும் இல்லை. அதற்கு நான் தயாராகவும் இல்லை. ஆயினும் இதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப் பொறுப்பினை அரசு பொறுப்பேற்கின்றபோது புலனாய்வு பிரிவினை முடக்கி புலனாய்வு அதிகாரிகளை கூண்டில் அடைத்த முப்படைகளை பலம் இழக்கச் செய்தலாகிய அனைத்து பொறுப்புக்களையும் அரசாங்கமும் அரசாங்கத்தின் பங்காளிகளாகிய அனைவரும் இதை ஏற்க வேண்டும். அதேபோன்று இச்சம்பவத்தின் போது பாதுகாப்பு செயலாளரும் பொலிஸ்மா அதிபரும் தமது பொறுப்புக்களை எவ்விதத்திலும் நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாவது எனக்கு இவ்விடயத்தை அறியத் தந்திருக்கலாம். இவ்விருவரும் 17ஆம் திகதி புத்தாண்டுக்காக வெற்றிலை கொடுக்கவும் என்னிடம் வந்தார்கள். பால் பொங்கியதன் பின்னர் இவ்விருவரும் வந்து எனக்கு வெற்றிலை கொடுத்தார்கள். அப்போதாவது அப்படியானதொரு கடிதம் வந்திருப்பாக என்னிடம் கூறாது சென்று விட்டார்கள்.
எமது நாட்டில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றவர்களைப்போன்றே இவ்வாறு எவ்வித பொறுப்புமின்றி செயற்படுகின்றவர்களும் இருக்கின்றார்கள். இவ்வாறு தமது பொறுப்பை நிறைவேற்றாததினால் ஏற்பட்ட உயிர் சேதத்திற்கும் பொருட் சேதத்திற்கும் சர்வதேச ரீதியில் சுற்றுலா துறைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட சகல வித பாதகமான தாக்கங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபருமே பொறுப்புக்கூற வேண்டும். ஆகையால் தான் அவ்விருவரையும் பதவி விலகுமாறு நான் கோரினேன். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பாக அவர்களை பதவி விலகுமாறு கோரினேன். அதற்கமைய பாதுகாப்பு செயலாளர் நேற்று பதவி விலகினார். பொலிஸ்மா அதிபர் தாம் பதவி விலகுவதாக என்னிடம் கூறினார்.
இங்கே இன்னுமொரு விடயத்தையும் மிகத் தெளிவாக குறிப்பிட வேண்டும். பொலிஸ் திணைக்களத்தை நான் பொறுப்பேற்று நான்கு மாதங்களே ஆகின்றன. இந்த குறுகிய காலத்திற்குள் பொலிஸ் துறையில் நான் பாரிய மாற்றங்களை மேற்கொண்டிருக்கின்றேன். அதனை செயற்திறன்மிக்கதொரு அமைப்பாக மாற்றியிருக்கின்றேன். நான்கு வருடங்களுக்கு முன் பொலிசுக்கு கள்ளச் சாராயத்தை கைப்பற்றும் அதிகாரம்கூட இருக்கவில்லை. அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை நானே ஏற்படுத்தினேன். பொலிஸ் துறையை நான் பொறுப்பேற்றபோது 30 பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு வாகனம் கூட இல்லையென தெரிய வந்தது. உடனடியாக குத்தகை ரீதியில் 30 டபள்கெப் வண்டிகளை பெற்றுக்கொடுக்க பணித்தேன். என்மீது பலி சுமத்தியபோதும் கடந்த நான்கு வருடங்களாக பொலிசுக்கு பொறுப்பான அமைச்சர்கள் செயற்பட்ட விதம் இதுவே.
நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் எவ்வித தவறும் இல்லை. நான் அவற்றை நிதானமாக செவிமடுத்தேன். பொலிஸ் திணைக்களத்தில் நான் ஏற்படுத்திய புத்துணர்ச்சி காரணமாகவே போதைப்பொருள் ஒழிப்புக்கெதிரான பலமிக்கதொரு செயற்திட்டத்தை செயற்படுத்த என்னால் முடிந்தது. இதுவரை என்னைத் தவிர எந்தவொரு அரசியல்வாதியும் போதைப்பொருளுக்கெதிரான வேலைத்திட்டத்தைப் பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆயினும் நான் அதை ஆரம்பித்திருக்கின்றேன். அதன்மூலம் இந்த நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றேன். அதற்கு மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருக்கின்றது. இத்தாக்குதலினால் அந்த செயற்பாட்டிற்கும் பாதகம் ஏற்பட்டிருக்கின்றது.
பொலிசார் அதிரடிப்படையினர், குற்றப் புலானாய்வு திணைக்களம், முப்படையினர் இந்த சம்பவத்தின் பின்னர் தமது பணிகளை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர். இதுவரையில் 70க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாம் எமக்கு கிடைத்த தகவல்களின்படி இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புபட்ட சுமார் 140 பேர் இலங்கையில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுற்றி வளைப்புக்கள், வெடிப் பொருட்களை கண்டறிதல் போன்ற விடயங்கள் குறித்து எமது பாதுகாப்பு படையினரின் வினைத்திறனான செயற்பாடுகள் எந்தளவு தீவிரப்படுத்தப்பட்டிருக்ன்றது என்பதை இப்போது உங்களால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆகையால் அடுத்து வரும் சில நாட்களில் இந்த பிரச்சினையை முற்றாக கட்டுப்படுத்த முடியுமென்று நான் நம்புகின்றேன். உலகின் ஏனைய நாடுகள் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதைப் போன்று எமக்கும் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியும். இந்த பிரச்சினையை நாம் முற்றாக கட்டுப்படுத்துவோம். அதற்கான சக்தி பொலிசாருக்கும் முப்படையினருக்கும் உள்ளது. புலனாய்வு மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கான திறமைகள் இவை அனைத்தும் அவர்களுக்கு இருக்கின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சில முக்கிய நாடுகளின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்து எமது பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயற்படுகின்றனர். ஆயினும் எந்தவொரு நாட்டு இராணுவமும் இலங்கைக்குள் கொண்டு வரப்படவில்லை. கொண்டு வரப்போவதுமில்லை. அது குறித்த துறை சார்ந்த அறிவையும் பயிற்சிகளையும் தேவையான நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொள்வதற்கே நாம் வெளிநாட்டு நிபுணர்களுடன் இணைந்து செயற்படுகின்றோம்.
ஆகையால் எமக்கு எவ்வாறான பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்தபோதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும் முற்றாக ஒழித்துக் கட்டவும் எம்மால் முடியுமென நான் உறுதியாக நம்புகின்றேன்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றலில் சர்வ கட்சி மாநாடு இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைவதின் முக்கியத்துவம் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது. நாடு என்ற வகையில் இந்த சந்தர்ப்பத்தில் பயங்ரவாதத்தை வேரறுப்பதற்கும் பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கும் ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குதாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் உறுதியளித்தனர்.
இந்த பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நாட்டு மக்களின் நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காகவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பில் கட்சி தலைவர்களுக்கு தெளிவூட்டிய ஜனாதிபதி அவர்கள், புதிய போக்குகளின் மத்தியில் பாதுகாப்பு பிரிவுகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். அதேபோன்று ஒன்றிணைந்த பாதுகாப்பு செயற்பாட்டு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் அதனூடாக அனைத்து பாதுகாப்பு செயற்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அரசியல் கருத்துக்களையும் நோக்கங்களையும் புறம் தள்ளி பொதுமக்களுக்காக நாட்டில் சமாதானமான சூழலை கட்டமைப்பதற்கு ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த துரதிர்ஸ்டவசமான சம்பவம் தொடர்பிலும் பாதுகாப்பு துறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பிலும் எடுத்துரைத்ததுடன், அந்தக் குறைபாடுகளை திருத்திக்கொண்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர். நாட்டின் பாதுகாப்பு துறையினர் தொடர்பில் நம்பிக்கை வைத்து அவர்களது தலைமையின் கீழ் பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அனைத்து அரசியல் தலைமை தலைவர்களும் பாதுகாப்புத் துறையுடன் சம்பந்தப்பட்ட அனுபவம் வாய்ந்தவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதின் முக்கியத்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பசில் ராஜபக்ஷவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஜாதிக்க ஹெல உருமய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுர்தீன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி தீகாம்பரம், மலைநாட்டு மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஸ்ணன், ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீ லங்கா கொம்னியுஸ்ட் கட்சியின் தலைவர் டிவ்.குணசேகர, லங்கா சமசமாஜ கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, தேசிய ஒருமைப்பாடு கட்சியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 மதிப்பிற்குரிய பௌத்த குருமார்களே,

கிறிஸ்தவ மதகுருமார்கள் உள்ளிட்ட ஏனைய மதகுருமார்களே,
அன்பிற்குரிய பெற்றோர்களே, பிள்ளைகளே, அன்பர்களே,
கடந்த 48 மணித்தியாலங்களில் எமக்கு முகங்கொடுக்க நேர்ந்த அனுபவங்கள் மிகுந்த வேதனைமிக்க, மிகவும் துக்ககரமான சம்பவங்கள் நிறைந்த துரதிஸ்டவசமான சந்தர்ப்பமாகும் என்பதை என்னைப் போலவே நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். உங்கள் முன் உரை நிகழ்த்தும் இன்றைய தினம் ஒரு தேசிய துக்க தினமாகும். துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாகவே அரசு இதனை பிரகடனப்படுத்தியது. நாம் ஒருபோதும் எதிர்பார்க்காத இந்த பயங்கரவாத, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இலங்கை அரசு என்ற வகையிலும் இந்த நாட்டு மக்கள் என்ற வகையிலும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறவேண்டும். இந்த சம்பவத்தைப் பற்றி இத்தருணத்தில் இந்த நாட்டுக்குள் பல்வேறு கருத்துக்கள், திறனாய்வுகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் விமர்சனங்கள் ஆகியன ஏற்பட்டிருக்கின்றன. இது ஒரு சுதந்திரமான ஜனநாயக சமூகத்தின் இயல்பான தன்மை என்றே கருதுகிறேன். உலகிலேயே மிகவும் பயங்கரமான காட்டுமிராண்டித்தனமான எல்ரீரீஈ பயங்கரவாதிகளின் 27 வருடங்களுக்கும் மேலான மிக கொடூரமான அனுபவங்களை நாம் பெற்றிருக்கின்றோம். அக்காலகட்டத்தில் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த நிலைமை, அதன் துன்ப துயரங்கள், பொருளாதார ரீதியில் நாட்டில் ஏற்பட்ட பின்னடைவுகள் ஆகியவற்றைப் பற்றி நான் எடுத்துரைக்கத் தேவையில்லை.
அந்த நீண்ட கால அனுபவங்கள் 2009 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்து இப்போதைக்கு 10 வருடங்கள் ஆகிவிட்டன. அவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டில் மிக உயரிய சமாதானம் நிலவியது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி முதல் இது வரையிலான நான்கரை வருடங்கள் ஜனநாயகம், ஊடக சதந்திரம், மக்களின் உரிமைகள் ஆகியவற்றை மிகச் சிறந்த முறையில் அனுபவித்துவந்த காலம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அத்தகைய பின்னணியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட இத் தேசிய துன்பியல் சம்பவத்தை நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அதன் உண்மைத்தன்மையை நாட்டு மக்கள் முன் எடுத்துரைப்பதும் ஒழிவு மறைவின்றி அனைத்து விடயங்களையம் இந்த நாட்டு மக்களாகிய உங்கள் முன் வைக்க வேண்டியதும் எனது கடமையும் பொறுப்புமாகும். இந்த பயங்கரவாத அமைப்பை பற்றி 2017 ஆம் ஆண்டு முதல் எமது பாதுகாப்பு துறைகளுக்கு அறியக் கிடைத்திருந்தது. அதற்கமைய அவ்வமைப்பினர் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் பெற்று வருவதாகவும் அறியக் கிடைத்தது. இதனால் எமது பாதுகாப்பு தரப்பினர் இவ்வமைப்பின் நடவடிக்கைகளைப் பற்றி மோப்பம் பிடித்து தகவல்களைத் திரட்டி வந்தார்கள். இருப்பினும் இவ்வமைப்பை சார்ந்தவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தகுந்த சாட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான தகவல்களும் எமது பாதுகாப்பு துறைக்கு கிடைத்திருக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களாக தேசிய பாதுகாப்பு சபை கூடிய நேரங்களில் எல்லாம் இந்த அமைப்பின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள், அவர்கள் மேற்கொண்ட உள்நாட்டு வெளிநாட்டு பயணங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து நாம் அறிந்து வைத்திருந்தோம் என்பதைக் கூறவேண்டும். இருப்பினும் நாம் ஒருபோதும் எதிர்பாராத நேரத்தில் இவ்வமைப்பு சர்வதேச பயங்கரவாத குழுவொன்றின் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் எமது நாட்டில் ஏற்படுத்திய இந்த மாபெரும் உயிர்ச்சேதத்தினால் வறிய அப்பாவி குடும்பங்களின் பிஞ்சுக் குழந்தைகள் முதல் செல்வந்த குடும்பங்களின் அங்கத்தவர்கள் வரையிலும் இந்த நாட்டுக்கு வருகைத்தந்திருந்த உல்லாச பிரயாணிகளும் வர்த்தகர்களும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார்கள். இவ்வனைவருக்காகவும் மீண்டும் இந்நாட்டு மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வேதனையையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சோதனையும் வேதனையும் நிறைந்த இச்சந்தர்ப்பத்தில் நமது நாட்டின் குடிமக்களாகிய எமது அன்பிற்குரிய கிறிஸ்தவ மதத்தினர் வெளிப்படுத்திய ஒழுக்கத்தையும் அடக்கத்தையும் பற்றி நான் இங்கு நிச்சயம் குறிப்பிட வேண்டும். மதிப்பிற்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும் மக்களும் இந்த நாட்டினுள் மோதல்கள் ஏற்படாதவகையில் அமைதியான முறையில் மக்களை வழிநடத்தியதையிட்டும் மக்களை வழிநடத்தும் வகையில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் மிகுந்த பொறுமையுடனும் செயற்பட்டதற்காகவும் இத்தருணத்தில் இந்த கிறிஸ்தவ மக்கள் சமூகத்தை நான் பெரிதும் மதிக்கின்றேன்.
இப்போது இந்த சம்பவத்தின் பின்னர் நாட்டு மக்கள் என்ற வகையில் எம்முன் இருப்பது இந்த துயரத்திலும் அழிவிலுமிருந்து எவ்வாறு மீள் எழுவது என்ற செயற்பாடே ஆகும். அச்செயற்பாட்டின் போது எமது பாதுகாப்புத் துறை பொலிஸ் உள்ளிட்ட முப்படைகளின் கட்டமைப்பில் முழுமையான ஒரு மறுசீரமைப்பினை ஒரு வார காலத்திற்குள் ஏற்படுத்தவும் நான் எதிர்பார்க்கின்றேன். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு துறை தலைமைகளில் மாற்றங்களையும் ஏற்படுத்தவுள்ளேன். இந்த சம்பவம் நிகழ்ந்த கணம் முதல் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களினதும் உயிரிழந்தவர்களினதும் துன்பங்ளையும் துயரங்களையும் புரிந்து கொண்டு சமயோசிதமான முறையில் பொலிஸாரும் பாதுகாப்புத் துறையினரும் செயற்பட்டதையிட்டு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இங்கு நான் உங்களுக்கு ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டும். காட்டுமிராண்டித்தனமான எல்ரீரீஈ அமைப்பு ஆரம்பமான 80களில் இந்த நாட்டின் சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்கள் இந்த நாட்டின் அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாகவே நோக்கினர். ஆயினும் காலப்போக்கில் எல்லா தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை அந்த மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆகையினாலேயே எம்மால் இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடிந்தது. ஆகையால் இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள மக்களிடமும் தமிழ் மக்களிடமும் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல என்பதை மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
எல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை குறிப்பாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான மிலேச்சத்தனமான பயங்கரவாத அமைப்புக்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது மிகச் சிலரே. ஆகையினால் நாட்டினுள் சிங்கள, முஸ்லிம், தமிழ் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கைத்தையும் பேணிப் பாதுகாப்பது கட்டாயத் தேவையாக அமைவதுடன் அனைவர் மீதும் நம்பிக்கையுடன் வாழ வேண்டியது அவசியமாகின்றது.
நாட்டில் அமைதியை ஏற்படுத்தவே பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் அவசரகால சட்டதிட்டங்களை வர்த்தமானியில் வெளியிட நேர்ந்தது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மாத்திரம் வர்த்தமானியில் அறிவிப்பதன் மூலம் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இந்த அவசர கால சட்டங்களை அறிவிக்காது இருப்பின் குறிப்பாக பொலிசாருக்கு இப்போது இருக்கின்ற அதிகாரங்கள் போதுமானதாக அமையாததுடன் பாதுகாப்பு செயற்பாடுகளில் தரைப்படை, வான்படை, கடற்படை ஆகிய முப்படைகளை உள்வாங்க இயலாது போய்விடும். அந்த நிலைமையை சமாளித்து முப்படையினருக்கு தேவையான அதிகாரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்காகவே குறிப்பாக அவசரகால சட்டதிட்டங்களுடன் பயங்கரவாத தடை சட்டத்தை மாத்திரம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் எவ்விதத்திலும் நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மட்டுப்படுத்துவதற்காகவோ எவருக்கும் பாதகங்களை ஏற்படுத்தும் வகையிலோ சுதந்திரமான இயல்பு வாழ்க்கைக்கு சவாலாக அமையும் விதத்திலோ இந்த சட்ட திட்டங்களை உபயோகப்படுத்த விடமாட்டேன் என்ற பொறுப்பை தனிப்பட்ட வகையில் நான் ஏற்றுக்கொள்கின்றேன். நாட்டின் பேச்சு சுதந்திரம், ஊர்வலங்கள் செல்வதற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளல், ஊடக சுதந்திரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இச்சட்ட திட்டங்கள் எவ்விதத்திலும் எவருக்கும் இடையூறாகவோ சவாலாகவோ அமையாது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
அத்தோடு இத்தருணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்த நேரம் முதல் இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டுவரும் முப்படைகள், பொலிஸ், விசேட அதிரடிப்படை ஆகியவற்றின் செயற்திறன், குற்ற விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவுகளின் மிகுந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றை மீண்டும் மீண்டும் பாராட்டுவதுடன் இப்புலனாய்வு பணிகளின் போது உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரையும் இங்கு நான் மதிப்புடன் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
ஏற்கனவே இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் சந்தேக நபர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு பெருமளவு தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால் மீண்டும் இவ்வாறான மனம் வருந்தத்தக்க துன்பியல் சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்வதற்கான மிகத் தெளிவான ஆற்றல் எமக்கு இருக்கின்றது என்பதையும் இங்கு நான் கூற வேண்டும்.
அத்தோடு இந்த சம்பவத்தின் பின்னர் பலம்மிக்க சுமார் ஏழு எட்டு எமது நட்பு நாடுகள் அவர்களின் பூரண ஒத்துழைப்பை எமக்கு வழங்க முன்வந்திருக்கின்றனர். அவர்களின் ஒத்துழைப்பினை பெற்று எதிர்காலத்தில் செயற்படவிருக்கின்றோம். இந்த சம்பவம் பற்றி ஊடகங்களிலும் சமூகத்திலும் முன்வைக்கப்படுகின்ற ஒரு முக்கியமான கருத்தாக எமது நட்பு நாடொன்றினால் கொடுக்கப்பட்ட புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எமது பாதுகாப்பு துறையினர் எதனால் செயற்படவில்லை என்பது இங்கே கலந்துரையாடப்படும் மக்களுக்கு கேள்விக்குறியாகவுள்ள விடயமாக இருக்கின்றது.
ஆயினும் அவ்வாறு அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கபெற்ற அத்தகவல்கள் பற்றி புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளினால் எனக்கும் அறியத்தரப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். கிடைக்கப்பெற்ற அத்தகவல்களை எனக்கு அறிவித்திருப்பார்களாயின் உடனடியாக தக்க நடவடிக்கைகளை நான் எடுத்திருப்பேன் ஆகையால் அப்பொறுப்புக்களை ஏற்று செயற்பட வேண்டியவர்கள் அப்படி செய்யத் தவறியிருப்பதால் அவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க நான் தீர்மானித்திருக்கின்றேன்.
நேற்று மாலை கூடிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்பட்டது. ஆகையினாலேயே நான் அரச பாதுகாப்பு துறையிலும் புலனாய்வு துறையிலும் முழுமையான மறுசீரமைப்பினை மேற்கொண்டு இவ்வாறான பயங்கரவாத செயல்கள் மீண்டும் ஏற்படாத வகையில் மிகக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குறிப்பாக மலரும் நாளைய பொழுதில் இந்த நாட்டு மக்களுக்கு அச்சமும் பயமும் இன்றி வாழ்வதற்கு தேவையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கான சகல திட்டங்களையும் நான் வகுத்திருக்கின்றேன்.
குறிப்பாக அன்றாட வாழ்க்கையில் அரச ஊழியர், பாடசாலை மாணவரகள் வர்த்தகர்கள் நாட்டின் பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழத்தக்க சூழலை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம் என்பதை அரசாங்கம் என்ற வகையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் அத்தோடு ஒரு முக்கியமான விடயத்தை இங்கு கூற வேண்டும். ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதைப் போன்று சுமார் மூன்று தசாப்த கால பயங்கரவாத யுத்த அனுபவங்களையும் அதன் வெற்றியையும் பற்றி பேசுகின்ற நாம் இந்த சம்பவங்களுக்கும் அந்த பயங்கரவாத அமைப்பிற்கும் இடையே காணப்படுகின்ற வித்தியாசங்களை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கின்றது. ஏனெனில் இவ்வாறான பிரச்சினைகளின் போது நாம் உணர்வுபூர்வமாக கதைப்பதை விட புத்திசாதுர்யமாக கதைப்பதே சாலச் சிறந்தது என நான் நம்புகின்றேன்.
பிரபாகரனின் எல்ரீரீஈ பயங்கரவாத அமைப்பு உள்நாட்டு ரீதியிலேயே பலமிக்க பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்திருந்தது. ஆயினும் அந்த அமைப்பிற்கு அன்று நாம் முகங்கொடுத்த விதத்தை விட வித்தியாசமான விதத்திலேயே இன்று எமக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கின்றது. அதாவது சர்வதேச ரீதியில் பலமிக்கதோர் அமைப்பு இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக அறியவந்திருக்கின்றது. ஆகையால் உள்நாட்டு ரீதியில் உருவாகிய பயங்கரவாத அமைப்பின் தன்மைக்கும் எமக்கு புதிய அனுபவமாக இருக்கின்ற இந்த துன்பகரமான பலமிக்க சர்வதேச பயங்கரவாத அமைப்பின் செயற்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்கின்றது. ஆகையால் இவ்விடயம் தொடர்பில் நாம் மிகுந்த பொறுமையுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட வேண்டும் என நான் நினைப்பதைப் போன்றே நீங்களும் நினைப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.
ஆகையால் புதிய தொழிநுட்பம், உயரிய தொழிநுட்பம் ஆகியவற்றை உபயோகப்படுத்தி பாதுகாப்பு தரப்புக்களின் உத்திகளையும் உபயோகப்படுத்தி பயங்கரவாதத்திற்கு எதிரான மிக உயரிய தொழிநுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளின் ஆலோசனைகளையும் வளங்களையும் வழிகாட்டல்களையும் பெற்று இந்த சர்வதேச பயங்கரவாத அமைப்பினை நமது தாய் நாட்டிலிருந்து வேறோடு பிடுங்கியெறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்பதை உங்களுக்கு நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். ஆகையால் இவ்வாறான விடயத்தில் எமது ஒற்றுமையே பலமாக அமைகின்றது.
அரசியல் கட்சி பேதங்களின்றி மத பேதங்களின்றி இன பேதமின்றி செயற்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும். இனவாதம் என்பது என்ன? பயங்கரவாதம் என்பது என்ன? என்பதை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அறிவும் ஆற்றலுமிக்க நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். ஆகையால் இந்த பாரதூரமான பயங்கரவாத அமைப்பு இலங்கையை இவ்வாறு தேர்ந்தெடுத்திருப்பதைப் பற்றி நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
இந்த நாட்டில் இருந்துவந்த சமாதானமான சூழ்நிலையை சிதைத்து நாட்டு மக்கள் மத்தியில் பய பீதியை ஏற்படுத்தி குறிப்பாக ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு நம் நாட்டின் ஒரு குழுவினருடன் இணைந்து மேற்கொண்டிருக்கும் இந்த மிருகத்தனமான தாக்குதலில் நாம் பெற்ற அனுபவத்தை மீண்டும் பெறாதிருப்பதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வது இத்தருணத்தில் தகுந்ததல்ல என்பதே எனது நம்பிக்கையாகும். ஆகையால் அவ்வாறு செயற்பட வேண்டாம் என மிகுந்த கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற மற்றும் செய்யாத அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து வட்ட மேசை கலந்துரையாடலை நடத்துவதற்கும் அரசின் எதிர்கால திட்டங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறவும் எதிர்பார்க்கின்றேன்.
அதேபோன்று பௌத்த, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் ஆகிய அனைத்து மதத் தலைவர்களையும் இந்த நாட்டின் பல்வேறு துறை சார்ந்த கல்விமான்களையும் அறிஞர்களையும் அழைத்து ஒரே மேசையில் அவர்களுடன் இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி இந்த அரசின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இந்த நாட்டின் எதிர்காலத்தை சுதந்திரமான ஒரு சமூகமாக வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்க கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகையால் வதந்திகளைப் பரப்பாது உண்மை மீது மாத்திரம் நம்பிக்கை வைத்து வதந்திகளை நம்பி ஏமாறாது செயற்படுவது இத்தகைய தருணத்தில் மிகவும் தேவைப்படுகின்றது. ஆகையால் அரசியல் லாபம் கருதி செயற்படாது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் இன்று இந்த நாட்டில் வாழும் மக்களைப் போன்றே எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காகவும் இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எமது இந்த முடிவிற்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு மிகுந்த கௌரவத்துடன் உங்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
உங்கள் அனைவருக்கும் நன்றி
மும்மணிகளின் ஆசி
கடவுள் துணை

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முழுமையாக உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு…
இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஏகமனதாக உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட இலங்கையில் உள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஐ.நா மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் வதிவிடப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சர்வதேச முகவர் அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், இந்த கொடூரமான செயலுக்கு பொறுப்பான குற்றவாளிகளையும் அதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்களையும் கண்டறிந்து கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பயங்கரவாதத்தை விரைவில் ஒழித்துக்கட்ட முடியுமென்று நம்பிக்கை வெளியிட்டார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அனுபவம்வாய்ந்த, உயர் தொழிநுட்ப மற்றும் புலனாய்வு திறன்களைக் கொண்ட 08 நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட ஏனைய நாடுகளும் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் ஏனைய பிரதிநிதிகளும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா, டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் இதன்போது தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
30 வருடங்களாக இடம்பெற்ற போரின்போதும் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வின்போதும் இலங்கை புலனாய்வுத்துறை பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பயன்படும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், நேற்று இரவு அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அவசரகால சட்ட அதிகாரங்களையும் பாதுகாப்பு படையினர் தற்போது பயன்படுத்திக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற முடியுமென்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், சாதாரண சட்டங்களின் மூலம் போதுமான சாட்சிகள் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பாதுகாப்புத் துறையை மீளொழுங்குப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவ உதவியைக் கொண்டு பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட முடியுமென்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
சமூக ஊடகங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நேற்று இரவு வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அவசரகால சட்டங்களை சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தாம் அனுமதியளிக்கப்போவதில்லை என்றும் அவை பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் இலங்கைக்கு தமது அனுதாபங்களை தெரிவித்த வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


22ம் திகதி பிற்பகல் கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார்.
உயிர்த்த ஞாயிறு சமயக் கிரியைகளில் ஈடுபட்டிருந்த போது கிறிஸ்தவ பக்தர்கள் முகம்கொடுக்க நேர்ந்த இந்த துன்பியல் நிகழ்வு குறித்து இதன்போது பேராயரிடம் தனது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த நிலைமைகளை கருத்திற் கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பேராயருடன் கலந்துரையாடினார்.
எதிர்காலத்தில் நாட்டினுள் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அது தொடர்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
பேராயர் உள்ளிட்ட அனைத்து மதகுருமார்கள் மற்றும் தேவாலயங்களுக்கு பாதுகாப்பை கோரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தான் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 நேற்றைய தினம் (2019 ஏப்ரல் 21) நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மூவர் கொண்ட விசேட விசாரணை குழுவொன்றை நியமித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சரவை செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோன் ஆகியோர் இந்த விசேட விசாரணைக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
பல அப்பாவி உயிர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பாரிய தேசிய துன்பியல் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் மற்றும் பின்னணி பற்றியும் குறித்த நிகழ்வுகளுடன் தொடர்புடைய வேறு காரணிகள் குறித்தும் கண்டறிந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இக்குழுவிற்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.

சூத்திரதாரிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம்

எந்தவொரு அடிப்படைவாத இயக்கமும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம் என்றும் தாக்குதல் நடத்திய சூத்திரதாரிகளை தேடும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஊடக அமைச்சருமான ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் தேவையான ஆலோசனைகள் முப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள் ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் நேற்று காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவிர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேற்படி தாக்குதல் சம்பவத்தையடுத்து விசேட பாதுகாப்பு சபை கூட்டமானது பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக் காலை இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் உட்பட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

நாட்டின் சில பகுதிகளில் இன்று முற்பகல் இடம்பெற்ற எதிர்பாராத வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், அச்சம்பவங்கள் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள விசேட பிரகடனம்
“மதிப்பிற்குரிய பௌத்த குருமார்களே, ஏனைய மதத் தலைவர்களே,
அன்பிற்குரிய பெற்றோர்களே, பிள்ளைகளே, நண்பர்களே,
நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய துன்பியல் சம்பவத்தையிட்டு நான் மிகவும் வருத்தமடையும் அதேவேளை, இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்பாராத இச்சம்பவத்தினால் என்னைப் போன்றே ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாகி இருக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன். இச்சம்பவத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பதை ஆராய்வதற்காக பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, விசேட அதிரடிப் படையினர், இராணுவம், வான்படை, கடற்படை, உள்ளிட்ட பாதுகாப்பு துறைக்கு பணிப்புரை வழங்கப்பட்டு அவர்கள் அது சம்பந்தமாக துரித விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள். ஆகையால் அவ்விசாரணைகளுக்கு மக்கள் அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கின்றது.
இச்சம்பவத்தையிட்டு ஆழ்ந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் ஆளாகியிருக்கும் பின்னணியில் நம் அனைவரினதும் ஒத்துழைப்பே தற்போது மிக முக்கியமாக தேவைப்படுகின்றது. அத்தோடு நாட்டு மக்கள் என்ற வகையில் அனைவரும் அமைதி காக்கும் அதேவேளை, வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட்டு செயற்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் நிலைமையை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் நடந்த சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என்பதையும் நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி. வணக்கம்!”

இன்று (15) முற்பகல் 11.17 மணிக்கு மலர்ந்துள்ள சுபவேளையில் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் பழ மரக்கன்றொன்றை நாட்டி, சுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டும் பாரம்பரியத்துடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் இணைந்துகொண்டார்.

முக்கொத்து சுபவேளையான இன்று மு.ப. 11.17 மணிக்கு வெண்ணிற ஆடையில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றொன்றை நடுவது இம்முறை சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
எதிர்கால தலைமுறைக்காக சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகம் உணரப்படும் இக்காலத்தில், அந்த பாரம்பரியத்துடன் இணைந்து பிரஜை என்ற தமது பொறுப்பை நிறைவேற்றுமாறு புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அவர்கள் அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 அனைத்து இலங்கையர்களுடனும் இணைந்து தேசிய பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (14) கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றுவதில் இணைந்து கொண்டார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜயந்தி சிறிசேன அம்மையார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு மூட்டி புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றினர்.
பணிகளை ஆரம்பிக்கும் பாரம்பரியத்தின் படி ஜனாதிபதி அவர்கள் தனது உத்தியோகபூர்வ வளாகத்தில் மரக்கன்றொன்றை நாட்டினார். அதனைத்தொடர்ந்து கை விசேட பாரம்பரியத்திலும் இணைந்து கொண்டார்.
மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைதந்திருந்ததுடன், அவர்கள் அனைவரையும் சுமூகமாக வரவேற்ற ஜனாதிபதி அவர்கள், உணவு உட்கொள்ளும் சுபநேரத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு விருந்துபசாரங்களையும் வழங்கினார்.
மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து தாய்நாட்டிற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இப்புத்தாண்டில் உறுதிபூண வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கேற்ப மரம் நடும் நிகழ்ச்சித்திட்டமொன்றும் நாளைய தினம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முக்கொத்து சுபநேரமான மு.ப 11.17க்கு வெள்ளை நிற ஆடைகளில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றினை நடுவது சிறந்ததாகும்.
இந்த சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அவர்கள் அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest News right

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான மெய்நிகர் இருதரப்பு கலந்துரையாடல்

செப் 28, 2020
இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கும்…

கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை தெளிவுபடுத்தினார் ஜனாதிபதி

செப் 25, 2020
பல்கலைக்கழக பாடவிதானம் தொழிற்சந்தையை நோக்கமாகக்கொள்ள வேண்டும். தொழிநுட்ப விஞ்ஞானம்…

முதலீட்டாளர்களை இனங்கண்டு, புத்தாக்க உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை

செப் 24, 2020
வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவருவதற்கு பிரச்சார நிகழ்ச்சித்திட்டம்... உள்நாட்டு…

28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஒன்றுகூடல்

செப் 24, 2020
ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்பு... சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் மீளாய்வு...…

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க கிராமங்களுக்கு ஜனாதிபதி விஜயம்

செப் 23, 2020
முதலாவது சந்திப்பு ஹல்துமுல்லையில் : பிரச்சினைகளை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு மக்கள்…

நீர் பிரச்சினைக்கு தீர்வு காண பொது பொறிமுறை தொடர்பில் கவனம்

செப் 23, 2020
இலங்கையில் பொது நீர்நிலை முகாமைத்துவ அணுகுமுறையை செயல்படுத்துவதற்கு ஒரு மூலோபாய…

மீண்டும் ஆரம்பமாகின்றது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ SMS சேவை

செப் 21, 2020
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை (SMS) மீண்டும் நாளை ஆரம்பமாகவுள்ளது.…

நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு சிறு, மத்திய தொழிற்துறை

செப் 21, 2020
சிறு மற்றும் மத்திய தொழிற்துறை இன்று நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக…

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

செப் 20, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (19 .09.2020) புத்தளம் மாவட்டத்தின்…

Ceylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம்

செப் 18, 2020
நீண்டகாலமாக உலகம் பூராகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள Ceylon Tea தரத் சின்னத்திற்கு…