நாட்டைக் கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தின் மற்றுமொரு கட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (19) ஆரம்பமானது.

நாட்டின் எந்தவொரு இடத்திலிருந்தும் பிரதான வீதிகளுக்கு பிரவேசிக்கக்கூடிய வகையில் மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்துவது இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டத்தின்மூலம் பேராதனை, கலஹா, தெல்தோட்டை ஊடாக ரிக்கில்லகஸ்கட வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ்வீதியின் மொத்த தூரம் 52 கிலோமீற்றர்களாகும். இதற்காக 60 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இவ்வீதி காப்பற் இடப்பட்டு புனரமைக்கப்பட்டதன் பின்னர் வாகனப் போக்குவரத்திற்காக இதுவரை செலவிடப்பட்ட நேரத்தைப் பார்க்கிலும் சுமார் 45 நிமிடங்கள் குறைவடையும்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றிய முதலாவது மக்கள் கூட்டம் இதுவாகும். தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றி பொதுமக்கள் சந்திப்பில் பங்குபற்றக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

மக்களிடம் தான் கூறிய “பாதுகாப்பான நாட்டை” உருவாக்குவதற்காக கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இதற்காக பாதுகாப்புச் செயலாளர் முதல் திறமைவாய்ந்த அதிகாரிகள் புலனாய்வு துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் நாட்டில் பயங்கரவாதமோ மத அடிப்டைவாதமோ உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென்றும் ஜனாதிபதி  அவர்கள் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்திலில் ஈடுபட்டுள்ள பாரிய வலையமைப்பொன்று கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர் தலைமுறையை அதிலிருந்து மீட்பதற்கு தேவையான பின்புலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மக்களுக்கு சுதந்திரமும் நீதி, நியாயமும் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் சேர்ந்த மக்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தனது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வறுமையை ஒழிப்பதற்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குதல், வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல், வறிய மக்களுக்காக “கிராமத்திற்கு ஒரு வீடு” நிகழ்ச்சித்திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டமும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளாகும். அக்கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்காக பலமானதொரு அரசாங்கத்தை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் செயற்படுவார்களென்று ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

அதிகாரிகளுக்கு பயமின்றி தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி நாட்டுக்காக பணியாற்றுமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.  

கடந்த 5 வருடக் காலப் பகுதியில் நாட்டுக்கு கிடைத்த முதலீட்டு வாய்ப்புகளை அன்றைய அரசாங்கத்தின் செயற்திறனின்மை காரணமாக இழக்க வேண்டியதாயிற்று. முதலீடுகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இந்தியா, சீனா மற்றும் மேற்கு நாடுகள் எமது அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன. அந்நாடுகளின் முதலீடுகள் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டப்ளியு.ஆர்.பேமசிறி ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், கலஹா பிரதேசத்தில் உள்ள மரக்கறி வியாபாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். சில கடைகளுக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், மரக்கறிகளின் விலைகளை கேட்டறிந்ததுடன், அதிக விலைக்கான காரணத்தையும். விசாரித்தார். தமது பிரதேசத்தில் உள்ள மரக்கறிகள் தம்புல்லை நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுவதே விலை அதிகரிப்புக்கு காரணமாகுமென வியாபாரிகள் தெரிவித்தனர்.

குறித்த தரப்பினருடன் விரைவாக கலந்துரையாடி தீர்வொன்றுக்கு வருமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நிகழ்வில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்களுக்கு பிரதேச மக்கள் பெரும் வரவேற்பளித்தனர். ஜனாதிபதி அவர்கள் அம்மக்களுடனும் சுமூகமாக கலந்துரையாடினார்.

மொஹான் கருணாரத்ன

பிரதிப் பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.02.19