தபால் துறை சேவையில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்குமாயின் அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஆணைக்குழு மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்;ஷ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

உப அஞ்சல் அலுவலர்கள் மற்றும் தரம் 1 அஞ்சல் சேவை பதவி உயர்வை பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னைய அரசாங்க காலத்தில் ஒப்பந்ந காரருக்கு செலுத்தப்பட வேண்டிய உரிய கொடுப்பனவுகள் இன்னும் நிலுவையில் இருந்து வருகின்றது. வரவு செலவு திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க முடியாத சூழ்நிலை தற்பொழுது அரசாங்கத்துக்கு உண்டு.

இதன் காரணமாகவே அரசாங்கம் குறைநிரப்பு பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தை முழு அளவில் செயற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிட்டும். அதன் மூலம் தபால் துறையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும்  அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.

தபால் திணைக்களத்தில் நீண்ட காலமாக பதவி உயர்வு தொடர்பில் நிலவிய பிரச்சினைக்கு தீர்வைக்காணும் வகையில், இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தபால்மா அதிபர் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையின் பெறுபேறாக இந்த பதவி உயர்வு இன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்காக விடயதான அமைச்சர் என்ற ரீதியில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஜனாதிபதியின் சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்திற்கு அமைவாக பணியாற்றும் ஊழியர்கள் தாம் திருப்தி கொள்ளக்கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே செயற்திறன் மிக்க அரச சேவையை முன்னெடுக்க முடியும். இதன் அடிப்படையிலேயே அரசாங்கம் செயல்ப்பட்டு வருகின்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தொடர்ச்சியான வேலைப் பகிஸ்கரிப்பு, வேலை நிறுத்தம் முதலானவை இடம்பெற்றன. அதன் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான தபால்கள் ஒரே இடத்தில் குவிந்தன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.