பாதுகாப்பு, வர்த்தகம், அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தல் போன்ற துறைகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு துறையிலும் இலங்கைக்கு தேவையான முழுமையான உதவியை வழங்குவதற்கு பாக்கிஸ்தான் தயாராக உள்ளது.

இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டாக் அவர்கள் (Muhammad Saad Khattak) நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார்.

 இரு நாடுகளுக்குமிடையில் தற்போதும் சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு இருந்து வருவதால் இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்குமிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து தான் கவனம் செலுத்தியிருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இருநாடுகளினதும் வர்த்தக சமூகத்தினர் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மாநாடொன்றை நடாத்துவதற்கு பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மருத்துவம், பொறியியல் மற்றும் தகவல் தொழிநுட்ப துறைகளில் உயர்கல்வி வாய்ப்புக்காக இலங்கை மாணவர்கள் 1000 பேருக்கு பாக்கிஸ்தான் முழுமையான புலமைப்பரிசிலை வழங்கி வருகின்றது. தகைமையுடைய மாணவர்களுக்கு விண்ணப்பிக்குமாறு கோரி இலங்கையில் உள்ள முன்னணி ஊடகங்களில் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு விரிவாக விளம்பரம் செய்யப்படுகின்றது. விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்துவதற்காக பாக்கிஸ்தான் அதிகாரிகள் மிக விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இந்த புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்திற்கு மேலதிகமாக உயர்கல்விபெறும் இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கும் பாக்கிஸ்தான் அக்கறை செலுத்தி வருவதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்திலிருந்து பாக்கிஸ்தான் இந்த புலமைப்பரிசில் நிகழ்ச்சிதிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு குறிப்பாக நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு அதன் நன்மைகள் கிடைக்கின்றன.

குடிவரவு நடவடிக்கைகளில் சிறந்த தொடர்பு இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதியும் உயர்ஸ்தானிகரும் கலந்துரையாடினர். பிரச்சினைக்குரிய பின்புலத்தைக்கொண்ட ஆட்களின் பயணத்தை கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளினதும் நடைமுறைகளுக்கு இது உதவும்.

பழைமை வாய்ந்த உயர்கல்வி நிறுவனமான தக்சிலாவை அபிவிருத்தி செய்வதில் பாக்கிஸ்தான் அரசாங்கம் மேற்கொண்டுவரும் குறிப்பிடத்தக்க பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, இதற்கு இலங்கையின் ஒத்துழைப்பு கிடைக்குமெனக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, பாக்கிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்விர் அஹமட் (Tanvir Ahmad) இரண்டாவது செயலாளர் (அரசியல்) ஆயிஷா அபு பக்கர் பஹத் (Ayesha Abu Bakr Fahad) ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.