பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு 1000 புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மொஹமட் சாத் பட்டக்குக்குமிடையே அலரி மாளிகையில் (24) நடைபெற்ற சந்திப்பின்போதே பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இந்த புலமைப்பரிசில்களை வழங்க உறுதியளித்துள்ளார். அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் இலங்கை மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை சமர்ப்பிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
பாகிஸ்தான்-இலங்கை கல்வி ஒத்துழைப்புக்கான செயற்திட்டத்தின் கீழ் இந்த புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளதுடன் பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், பௌதிக விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானம், பட்டப்பின் படிப்பு, கலாநிதி பட்டம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு இதன்மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மாணவர்களுக்கு இத்தகைய புலமைப் பரிசில் வழங்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துக்கு நன்றி தெரிவித்ததுடன் யுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்புகளுக்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்தார்.