ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையம் வர்த்தக நகரான கொழும்புடன் இணையும் தெற்கு அதிவேகப் பாதையின் இறுதிக் கட்டமான பாலட்டுவ தொடக்கம் பரவகும்புக்க வரையான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (23) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

கொடகம, பாலட்டுவ வெளியேறும் வாயிலுக்கு அருகில் பாதையை திறந்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் பாலட்டுவ தொடக்கம் தெற்கு அதிவேகப் பாதையினூடாக பரவகும்புக்க வரை பயணித்தனர்.

அங்கு கடந்து வந்த அனைத்து நுழைவாயில்களுக்கு அருகிலும் கூடியிருந்த மக்கள் பாரிய வரவேற்பளித்தனர்.

திறந்து வைக்கப்பட்ட பாலட்டுவ தொடக்கம் பரவகும்புக்க வரையான பகுதியின் நீளம் 58 கிலோமீற்றர்களாகும். இதற்காக 169 பில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.

பாலட்டுவ தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி 96 கிலோமீற்றர்களாகும். நான்கு கட்டங்களின் கீழ் மாத்தறை – பெலியத்த, பெலியத்த – பரவகும்புக்க, பரவகும்புக்க – அந்தரவெவ மற்றும் அந்தரவெவ – மத்தளை வரையான பகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்காக 225 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து 222 கிலோமீற்றர்களைக் கொண்ட இப்பாதையே இந்நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிக நீண்ட அதிவேகப் பாதையாகும். புதிய பகுதி வாகனப் போக்குவரத்திற்கு இணைக்கப்பட்டுள்ளமையால் கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு மூன்றரை மணித்தியாலங்களில் பயணிக்க முடியும்.

தெற்கு அதிவேகப் பாதையில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் மாத்தறை கொடகம நுழைவாயில் இதன் பின்னர் பயன்படுத்தப்படாததுடன், பாலட்டுவ புதிய நுழைவாயில் இதன் பின்னர் பயன்படுத்தப்படும். மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி அப்பரெக்க, பெலியத்த, கசாகல, அங்குனு கொல பெலஸ்ஸ, பரவகும்புக்க மற்றும் சூரியவெவ என்ற ஆறு நுழைவாயில்களைக் கொண்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் கைவிடப்பட்டிருந்த பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதாக பரவகும்புக்க வெளியேறும் இடத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அதிவேகப் பாதைகளை நிர்மாணிப்பதோடு அவற்றில் சுதந்திரமாக பயணிக்கக்கூடிய வகையில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்கா விமான நிலையத்தை மையமாகக்கொண்டு வர்த்தக மற்றும் நிதி கேந்திர நிலையமொன்று உருவாக்கப்படுவதோடு, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையத்தை மையமாகக்கொண்டு சர்வதேச தொழிநுட்ப சேவை வழங்கும் கேந்திர நிலையமொன்று அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை மையமாகக்கொண்டு ஒன்பது “சி” வடிவிலான பொருளாதார மையங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இவை அனைத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சாணக்க மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மாத்தறை பாலட்டுவ பௌத்தோதய மகா விகாரைக்குச் சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டனர்.

விகாராதிபதி சங்கைக்குரிய கெட்டமான்னே குணாநந்த தேரர் உள்ளிட்ட விகாரைக்கு சமூமளித்திருந்த மகாசங்கத்தினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆசிர்வதித்தனர்.

 மொஹான் கருணாரத்ன

பிரதிப் பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.02.23