சமீபத்திய செய்தி

 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் உயர்கல்வித் துறையில் தர உறுதிக்கான முகவர் நிறுவனங்களின் சர்வதேச வலயமைப்பின் 15ஆவது மாநாட்டின் (INQAAHE) இரண்டாவது நாளான 26ம் திகதி அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

“தர உறுதி, தகைமைகள் மற்றும் அங்கீகாரம் : பூகோள மயமானதொரு உலகில் நம்பிக்கையை கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளின் கீழ் இம்மாநாடு நேற்று ஆரம்பமானது. இம்மாநாடு எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.
உயர் கல்வியமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
INQAAHE என்பது உயர் கல்வித்துறையில் தரத்தை உறுதி செய்வதற்கான அடிப்படைகள், பயன்பாடுகள் தொடர்பாக செயற்படும் சுமார் 300 நிறுவனங்களை கொண்ட சர்வதேச அமைப்பாகும். அந்த வலயமைப்பின் இரண்டு வருடங்களுக்கொருமுறை நடைபெறும் மாநாட்டின் இவ்வருட உபசரிப்பு நடவடிக்கைகளை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.
பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர்கள் மற்றும் விசேட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களுக்கான நினைவுச் சின்னங்களையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வாவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டுள்ளதுடன், உயர்கல்வித் துறையில் தர உறுதிப்பாட்டுக்கான முகவர் அமைப்பின் தலைவர் கலாநிதி சுசன்ன கரக்கான்யனினால் கருத்துரை வழங்கப்பட்டது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 தமது யோசனைக்கமைய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
25ம் திகதி பொலன்னறுவையில் இடம்பெற்ற “மைத்ரி கைவினை கலா மண்டபத்தை“ மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை வறிய மாணவர்களுக்கு வசதி படைத்த பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது அது பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் இணைவதற்கான போட்டியாக மாறியிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பல்கலைக்கழக கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பினை பெறும் பெரும்பாலான மாணவர்கள் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் அல்ல என புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாகவும் அதனால் புலமைப்பரீட்சை இன்று ஒரு கேள்விக்குறியாக மாறியிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் பிரசித்தி பெற்ற பாடசாலைகள் என்று அழைக்கப்படுகின்ற பாடசாலைகளில் இணைவதற்கான போட்டா போட்டிகளுக்குப் பதிலாக நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்து அவற்றை பௌதீக ரீதியிலும் தர ரீதியிலும் அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் அப்பொறுப்பினை அந்தந்த பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.
எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 140 மில்லியன் ரூபா செலவில் ஐயாயிரம் ஆசனங்களைக் கொண்ட மைத்ரி கைவினை கலா மண்டபம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் பொலன்னறுவை றோயல் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவன் என்ற வகையில் வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக தம்மாலான அனைத்து கடமைகளையும் தாம் பூர்த்தி செய்திருப்பதாகவும் கிடைக்கப் பெற்றிருக்கும் அவ்வளங்களை பராமரித்து பாதுகாக்க வேண்டியது தற்கால மாணவ சமூகத்தின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.
மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரனசிங்க, வித்தியாலய அதிபர் ரவி லால் விஜயவங்க உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

 ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில வர்த்தக வலயத்தில் ஆரம்பிக்கவுள்ள "சில்வர்பார்க்" பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் மற்றும் லங்கா சீமெந்து கம்பனி ஆகியவற்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நினைவுப்படிகத்தை திரைநீக்கம் செய்தபோது பிடிக்கப்பட்ட படம். (படம் ஹிரந்த குணதிலக்க)

 

 புத்தபெருமானின் போதனைகளை பாதுகாத்து, பலப்படுத்தி எழுத்து மூலம் உலகிற்கு முன்வைக்கும் பொறுப்பு இலங்கையர்களான எம்முடையதாகும் என ஜனாதிபதி தெரிவிப்பு

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையானது உலகவாழ் பௌத்த சமூகத்திற்காக மேற்கொண்ட உன்னத பணி என மகாசங்கத்தினரால் பாராட்டு
திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு சங்கைக்குரிய மூன்று நிக்காயக்களினதும் மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (23) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் இந்த முன்மொழிவு உத்யோகபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹெனா சிங்கரிடம் கையளிக்கப்பட்டது.
உன்னத திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து திரிபீடகத்தை இன்னும் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் பாதுகாத்து உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
புத்த பெருமானின் போதனைகளை உள்ளடக்கிய திரிபீடகத்தை பாதுகாத்து வளப்படுத்தி எழுத்து மூலம் அதனை உலகிற்கு முன்வைக்கும் பொறுப்பு இலங்கையர்களான எம்மைச் சார்ந்ததாகுமென்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். நூல் உருப் படுத்தப்பட்ட திரிபீடகம் அச்சுப் பிரதியாக வெளியிடப்படும் வரை அதனை பாதுகாத்த பெருமை இலங்கை மகாசங்கத்தினரையே சாரும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், யுனெஸ்கோவின் உலக ஞாபக நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த உன்னத மரபுரிமை பட்டியல்படுத்தப்படுவதை பார்க்கிலும் முக்கியத்துவம் பெறுவது இதன் மூலம் இதன் உரிமை மற்றும் பொறுப்பு தொடர்பில் இலங்கை முழு உலகினதும் அங்கீகாரத்தை பெறும் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எத்தகைய எதிர்ப்புகள், சவால்கள் வந்துபோதும் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு எடுத்து வைக்கப்பட்ட எட்டினை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
இங்கு விசேட அனுசாசன உரையை நிகழ்த்திய மகாநாயக்க தேரர்கள் உன்னத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்குவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை உலகவாழ் பௌத்த மக்களின் பாராட்டை பெறும் எனக் குறிப்பிட்டனர்.
சியாமோபாலி மல்வத்தை பிரிவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர், சியாமோபாலி அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்னாபிதான, அமரபுர மகா நிக்காயவின் கொட்டுகொட தம்மாவாச மகா நாயக்க தேரர், ராமான்ஞய மகா நிக்காயவின் நாபான பேமசிறி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா நாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் மற்றும் மகாசங்கத்தினரும் தேரவாத பௌத்த நாடுகளான மியன்மார், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளின் மகாசங்கத்தினரும், வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்துள்ள மகாசங்கத்தினரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா, சஜித் பிரேமதாச உள்ளிட்ட அமைச்சர்களும் ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹெனா சிங்கர், யுனெஸ்கோ அமைப்பு உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட இராஜதந்திரிகளும் தியவடன நிலேமே நிலங்க தேல பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, அரசாங்க அதிகாரிகள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்டத்திற்கான செயற்திட்டத்தின் நிறைவு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நாளை (22) புத்தளம் சக்தி விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

கௌரவ ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களாகிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டம், பிள்ளைகளை பாதுகாப்போம் தேசிய செயற்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டம் உள்ளி்ட்ட விசேட செயற்திட்டங்கள் மற்றும் வெவ்வேறு அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்த முறையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டம் முதல் மாவட்ட மட்டம் வரையில் மக்களுக்கு அதிகளவிலான சேவையையும் நன்மைகளையும் பெற்றுக்கொடுப்பதே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
அதன் முதலாவது மாவட்ட மட்ட செயற்திட்டம் கடந்த 18ஆம் திகதி புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பமானதுடன், புத்தளம் மாவட்டத்தின் 16 பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் 332 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்கும் வகையில் அப்பிரதேச மக்களின் கல்விப் பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட மக்களுக்கான பல்வேறு சேவைகள் அங்கு வழங்கப்பட்டன.
அதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போதைபொருள் ஒழிப்பு, சிறுநீரக நோய்த்தடுப்பு, சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றன.
நீண்டகாலமாக மக்கள் முகங்கொடுத்து வந்த பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை வழங்கி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டம் எதிர்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளன.
நாளைய தினம் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள புத்தளம் மாவட்ட நிறைவு விழாவையொட்டி புத்தளம் புதிய நகரசபை விளையாட்டு மைதானம், புதிய நகர மண்டபம், புத்தளம் மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா கணனி பிரிவு ஆகியனவும் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளன.

 பாளி மொழியிலான தேரவாத திரிபீடகத்தை யுனெஸ்கோ உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்குவதற்கான தொழிநுட்ப செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் புத்திஜீவிகள் குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எசெல வீரகோன், பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இக்குழுவில் சங்கைக்குரிய பேராசிரியர் மெதகம்பிட்டிய விஜித நந்த தேரர், வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஜீ.விஜித நந்தகுமார், இலங்கை யுனெஸ்கோ ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் பிரேமலால் ரத்னவீர, தொல்பொருள் திணைக்களத்தின் பதில் கடமை பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவல, பேராசிரியர்களான கே.டீ.பரணவிதான, மாலினீ எந்தகம, பி.பீ.நந்ததேவ, சந்திம விஜேபண்டார ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந்த குழு உறுப்பினர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று 19ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

 புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தினால் சூழல் நேய தேசமொன்றை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “பூ அபிமானி” ஹரித ஹரசர சூழல் பாராட்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (18) பிற்பகல் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றது

இலங்கையின் கனிய வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதன் மூலம் ”பேண்தகு எதிர்காலம் – அபிவிருத்தி அடைந்த நாட்டை” கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் தனது தேசத்திற்கான கடமைகளை நிறைவேற்றி கனிய வளங்களை பாதுகாப்பதற்காகவும் சுற்றாடலின் பொது நலனுக்காகவும் மேற்கொண்ட உன்னத பணிகளை பாராட்டி ஜனாதிபதி அவர்களினால் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன. புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தனித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புவிச்சரிதவியல் கொடி ஜனாதிபதி அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, புவிச்சரிதவியல் சுரங்க பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல, பணிப்பாளர் நாயகம் கலாநிதி சீ.எச்.ஈ.ஆர்.சிறிவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக வகைகூற வேண்டிய முக்கிய நபரை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது சம்பந்தமான தனது கொள்கை பற்றிய தெளிவான கூற்றை சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

தான் அதுபற்றி சிங்கப்பூர் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்திட்டத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று (18) முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
2015 ஜனவரி 08ஆம் திகதி 62 இலட்சத்து 50 ஆயிரம் மக்களின் வாக்குகளின் மூலம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கிய விடயமாக அமைந்திருந்தது ஊழல், மோசடிகளை ஒழிப்பதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்காக கடந்த நான்கு வருட காலப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவற்றில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத பல்வேறு தீர்மானங்கள் அடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வரலாற்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளையான மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக கண்டறிவதற்கு தான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது ஆணைக்குழுக்கள் பற்றி அதுவரையில் மக்கள் மத்தியில் இருந்து வந்த நம்பிக்கையீனம் மற்றும் பின்னடைவான கருத்துக்களை மாற்றியமைத்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இந்த விசாரணையை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சிலவேளைகளில் அவர்களுக்கெதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அதனை அரச நிர்வாகத்தில் இடம்பெற்ற பலவீனமான நிகழ்வாக தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
நல்லாட்சி எண்ணக்கருவினுள் ஒரு நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்குள்ள முக்கிய சவாலாக ஊழல், மோசடிகள் இருக்குமானால் அதனை ஒழிப்பதற்கு நாட்டை நேசிக்கின்ற அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அதிகாரத்தை பாதுகாப்பதன்றி நாட்டின் உண்மையான நிலைமை பற்றிப் பேசி அவற்றிற்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு எவரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அத்தகைய நிலைமையில் எவரும் இதுபற்றி வௌிப்படையாக பேசுவதில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இலஞ்ச, ஊழலை ஒழிப்பதற்கு தெளிவான நிகழ்ச்சித்திட்டமொன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை உள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
சிறந்த அரச சேவையின் மூலம் இலஞ்ச, ஊழல் இல்லாத சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகளுக்கு எதிராக தண்டனை வழங்குதல் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.
இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்திட்டம் இதன்போது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் இலஞ்ச, ஊழலை இல்லாதொழித்து அதன் மூலம் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் சுற்றாடல் ரீதியான பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்துவது இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும். சுமார் ஒரு வருட காலமாக இலஞ்ச, ஊழல் சட்டத்தில் இலஞ்ச, ஊழலுக்கான தண்டனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேறு பலவீனமான சட்டதிட்டங்களுடன் தொடர்பான விடயங்கள் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் திருத்தப்பட்டு அதற்கேற்ப இந்த புதிய திட்டங்கள் அடங்கிய ஐந்தாண்டு தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து நிறுவனக் கட்டமைப்பிலும் ஊழலை ஒழித்தல், தண்டனை முறைமைகள் மற்றும் சட்ட கொள்கைகளை திருத்துதல் ஆகிய முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தேசிய செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சுமார் 40 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடாத்தப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் கருத்துக்களை கவனத்திற் கொள்வதற்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மூன்று நிக்காயாக்களின் சங்கைக்குரிய மகாசங்கத்தினர் உள்ளிட்ட சகல மத தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட சட்டத்துறை முக்கியஸ்தர்களும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா பீ டெப்லிட்டி, ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹானா சிங்கர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 இலங்கை பிக்கு பரம்பரையின் உன்னத பங்களிப்பில் பேணப்பட்டு வந்த தூய பௌத்த போதனைகள் உள்ளடங்கிய தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படுவதையிட்டு நாளை மார்ச் (16) முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதி “திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தேரவாத திரிபீடகத்தினை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு அனைத்து பௌத்த நாடுகளினதும் ஒத்துழைப்புடன் இலங்கை முன்மொழிவினை சமர்ப்பிக்கும் தேசிய மகோற்சவம் மூன்று நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் தலைமையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றலில் மார்ச் 23ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவுள்ளது.
தேரவாத திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அலுவிகார புண்ணிய பூமியில் அண்மையில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தி பாதுகாப்பதற்கு ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை மகாசங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து உலகளாவிய பௌத்த மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகம், புத்தசாசன அமைச்சு, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன ஏனைய அமைச்சுக்களுடன் ஒன்றிணைந்து “திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரம் முழுவதும் பல்வேறு சமய நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாரம் முழுவதும் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள், இல்லங்கள், வாகனங்கள் மற்றும் பெருந்தெருக்களில் பெளத்த கொடியினை காட்சிப்படுத்துமாறு சகல மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
“திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வார காலத்தில் மாலை 6.00 மணி முதல் 6.15 வரை நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் ஒலி பூஜைகள் இடம்பெறும். அத்தோடு “திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரத்துடன் இணைந்ததாக புனித தந்தங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வுகளும் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரம் ஆரம்பமாகும் மார்ச் 16ஆம் திகதி பொலிஸ் பிரிவு மட்டத்தில் நாடளாவிய ரீதியில் அன்னதான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கை விகாரைகளிலும் பல்வேறு சமய செயற்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்டிட வசதியின்றி மர நிழலில் இடம்பெறும் அறநெறி பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 226 விகாரைகளில் அறநெறி பாடசாலை கட்டிடங்களின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இந்த அனைத்து நிர்மாணப் பணிகளையும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்து அவற்றை மாணவர்களிடம் கையளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. மார்ச் 18ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை மையப்படுத்தி சமய நிகழ்வுகள் இடம்பெறுவதோடு, மார்ச் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனியார் நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 20ஆம் திகதி புதன்கிழமை பௌர்ணமி தினம் “ஜனாதிபதி சதகம் யாத்ரா” நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் திரிபீடக தர்மபோதனைகள் பற்றி மக்களை தெளிவுபடுத்தும் போதனை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மார்ச் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்யும் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், மார்ச் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரச நிறுவனங்களினால் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமய வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 23ஆம் திகதி சனிக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெறும் தேசிய மகோற்சவத்துடன் “திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரம் நிறைவுபெறும்.

 கென்யாவின் நைரோபி நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) இரவு நைரோபியிலுள்ள ஜொமோ கென்யாட்டா (Jomo Kenyatta) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

கென்ய நாட்டின் விசேட பிரதிநிதிக் குழுவினரால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழாமினருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கென்ய நாட்டு வெளிநாட்டலுவல்கள் பிரதான நிர்வாக செயலாளர் அபாபு நம்வம்பா (Ababu Namwamba), நீர் வழங்கல் மற்றும் சுகாதார அலுவல்கள் தொடர்பிலான அமைச்சரும் அமைச்சரவை செயலாளருமான சைமன் கிப்றோனோ செலுகி (Simon Kiprono Chelugui) ஆகியோரும் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா உள்ளிட்ட குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அவர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா விடுதிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் அதிகாரிகள் கென்ய நாட்டு கலாசார முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
கென்ய நாட்டு ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா (Uhuru Kenyatta) அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையிலும் சுற்றாடலை பாதுகாப்பதற்கு பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்ட தலைவர் என்ற வகையிலும் ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றுதலானது மாநாட்டின் சிறப்பம்சமாக அமையும் என கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
“சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் நாளை மதியம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விசேட உரையாற்றவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

 கென்யாவின் நைரோபி நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) முற்பகல் கென்யாவிற்கு பயணமானார்.

கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் விசேட அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அவர்கள் இந்த சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
“சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்” எனும் தொனிப்பொருளில் மார்ச் 11ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வு மார்ச் 15ஆம் திகதி வரை நைரோபி நகரில் நடைபெறவுள்ளது.
அதன் உயர்மட்ட பிரதான கூட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதோடு, நாளை நண்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மாநாட்டில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிலையான உணவுக் கட்டமைப்பு, உணவு பாதுகாப்பு, உயிர் பல்வகைமை அழிவடைதலை தடுத்தல், வறுமை மற்றும் இயற்கை வளங்களின் முகாமைத்துவத்துடன் தொடர்பான சுற்றாடல் சவால்கள், வளங்களின் வினைத்திறனான பயன்பாடு, சக்தி வளங்கள், இரசாயன பதார்த்தங்கள், கழிவு முகாமைத்துவத்திற்கான வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் துரித தொழிநுட்ப மாற்றங்களுக்கு உள்ளாகும் பருவத்தில் புத்தாக்கப் பேண்தகு வர்த்தக அபிவிருத்தி தொடர்பில் இம்முறை மாநாட்டின்போது கவனம் செலுத்தப்படும்.
கென்யாவிற்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்கள், கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவையும் சந்திக்கவுள்ளார்.
1970ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக்கும் கென்யாவிற்குமிடையில் நட்பு ரீதியான தொடர்புகளே இதுவரை காணப்படுகின்றன. பொதுநலவாய அமைப்பு மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைப்பு (IORA) ஆகியவற்றில் இவ்விரு நாடுகளும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கென்யா இலங்கையின் விசேட வர்த்தக பங்காளராக காணப்படாவிடினும் பரஸ்பர அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை காணப்படாத பொருளாதார தொடர்புகள் தொடர்பில் இரு நாடுகளும் தற்போது ஆர்வம் செலுத்தி வருகின்றன.
ஆடை உற்பத்தி, நீர் மின் உற்பத்தி, தோட்டக்கலை மற்றும் மோட்டார் வாகன பயிற்சி துறைகளில் தற்போது இலங்கையர்கள் கென்யாவில் பணியாற்றி வருகின்றனர்.

 மாத்தறை மாவட்ட சாரணிய சங்கத்திற்கு நூறு வருடங்கள் நிறைவுபெறுவதை முன்னிட்டு இடம்பெறும் நூற்றாண்டு ஜம்போரி நிகழ்வின் உத்தியோகபூர்வ இலட்சினையை வெளியிடும் நிகழ்வும் அவ் இலட்சினையை இலங்கையின் பிரதான சாரணரான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கும் நிகழ்வும் இன்று (12) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

மாத்தறை மாவட்ட சாரணிய சங்கத்தின் ஆலோசகரும் பிரதியமைச்சருமான புத்திக பத்திரணவினால் ஜனாதிபதி அவர்களுக்கு இலட்சினை அணிவிக்கப்பட்டது.
நூற்றாண்டு விழா ஜம்போரி நிகழ்வு 2019.05.01 முதல் 2019.05.05 வரை இடம்பெறவுள்ளதுடன், அதனை முன்னிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இணையத்தளமும் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாத்தறை மாவட்ட சாரணர் ஆணையாளர் வீ.ஜீ.இந்திக பிரசன்ன, உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர் சஞ்சய குமார, நூற்றாண்டு விழா ஜம்போரி நிகழ்வின் பிரதித்தலைவர் பத்மகுமார டயஸ் சமரவீர, செயலாளர் திருந்த துஷாக்க லியனகுணவர்த்தன ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Latest News right

நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய உறவின் சின்னம் - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 22, 2024
Default Image
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய, கலாசார மற்றும்…

இறுதி ரந்தோலி ஊர்வலத்தை பார்வையிட ஜனாதிபதி இணைந்து கொண்டார்

ஆக 20, 2024
Default Image
கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவின் இறுதி…

அரச ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்புக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்கிறது - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 18, 2024
Default Image
“அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு 25000 உதவித்தொகை. குறைந்தபட்சம் சிறு…

ஊடக விதிமுறைகள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதித் தேர்தல் ஆணையாளர்

ஆக 09, 2024
Default Image
தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்…

தேர்தல் காரணமாக IMF கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை - அமைச்சரவை பேச்சாளர்

ஆக 06, 2024
Default Image
தேர்தல் அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக 2027 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
சிறந்த சங்கப் பிதாமகராக இருந்து காலமான கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
மறைந்த கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர் கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு…