சமீபத்திய செய்தி

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முழுமையாக உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு…
இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஏகமனதாக உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட இலங்கையில் உள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஐ.நா மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் வதிவிடப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சர்வதேச முகவர் அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், இந்த கொடூரமான செயலுக்கு பொறுப்பான குற்றவாளிகளையும் அதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்களையும் கண்டறிந்து கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பயங்கரவாதத்தை விரைவில் ஒழித்துக்கட்ட முடியுமென்று நம்பிக்கை வெளியிட்டார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அனுபவம்வாய்ந்த, உயர் தொழிநுட்ப மற்றும் புலனாய்வு திறன்களைக் கொண்ட 08 நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட ஏனைய நாடுகளும் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் ஏனைய பிரதிநிதிகளும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா, டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் இதன்போது தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
30 வருடங்களாக இடம்பெற்ற போரின்போதும் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வின்போதும் இலங்கை புலனாய்வுத்துறை பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பயன்படும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், நேற்று இரவு அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அவசரகால சட்ட அதிகாரங்களையும் பாதுகாப்பு படையினர் தற்போது பயன்படுத்திக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற முடியுமென்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், சாதாரண சட்டங்களின் மூலம் போதுமான சாட்சிகள் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பாதுகாப்புத் துறையை மீளொழுங்குப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவ உதவியைக் கொண்டு பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட முடியுமென்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
சமூக ஊடகங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நேற்று இரவு வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அவசரகால சட்டங்களை சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தாம் அனுமதியளிக்கப்போவதில்லை என்றும் அவை பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் இலங்கைக்கு தமது அனுதாபங்களை தெரிவித்த வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


22ம் திகதி பிற்பகல் கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார்.
உயிர்த்த ஞாயிறு சமயக் கிரியைகளில் ஈடுபட்டிருந்த போது கிறிஸ்தவ பக்தர்கள் முகம்கொடுக்க நேர்ந்த இந்த துன்பியல் நிகழ்வு குறித்து இதன்போது பேராயரிடம் தனது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த நிலைமைகளை கருத்திற் கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பேராயருடன் கலந்துரையாடினார்.
எதிர்காலத்தில் நாட்டினுள் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அது தொடர்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
பேராயர் உள்ளிட்ட அனைத்து மதகுருமார்கள் மற்றும் தேவாலயங்களுக்கு பாதுகாப்பை கோரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தான் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 நேற்றைய தினம் (2019 ஏப்ரல் 21) நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மூவர் கொண்ட விசேட விசாரணை குழுவொன்றை நியமித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சரவை செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோன் ஆகியோர் இந்த விசேட விசாரணைக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
பல அப்பாவி உயிர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பாரிய தேசிய துன்பியல் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் மற்றும் பின்னணி பற்றியும் குறித்த நிகழ்வுகளுடன் தொடர்புடைய வேறு காரணிகள் குறித்தும் கண்டறிந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இக்குழுவிற்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.

சூத்திரதாரிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம்

எந்தவொரு அடிப்படைவாத இயக்கமும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம் என்றும் தாக்குதல் நடத்திய சூத்திரதாரிகளை தேடும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஊடக அமைச்சருமான ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் தேவையான ஆலோசனைகள் முப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள் ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் நேற்று காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவிர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேற்படி தாக்குதல் சம்பவத்தையடுத்து விசேட பாதுகாப்பு சபை கூட்டமானது பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக் காலை இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் உட்பட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

நாட்டின் சில பகுதிகளில் இன்று முற்பகல் இடம்பெற்ற எதிர்பாராத வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், அச்சம்பவங்கள் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ள விசேட பிரகடனம்
“மதிப்பிற்குரிய பௌத்த குருமார்களே, ஏனைய மதத் தலைவர்களே,
அன்பிற்குரிய பெற்றோர்களே, பிள்ளைகளே, நண்பர்களே,
நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய துன்பியல் சம்பவத்தையிட்டு நான் மிகவும் வருத்தமடையும் அதேவேளை, இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்பாராத இச்சம்பவத்தினால் என்னைப் போன்றே ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாகி இருக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன். இச்சம்பவத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பதை ஆராய்வதற்காக பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, விசேட அதிரடிப் படையினர், இராணுவம், வான்படை, கடற்படை, உள்ளிட்ட பாதுகாப்பு துறைக்கு பணிப்புரை வழங்கப்பட்டு அவர்கள் அது சம்பந்தமாக துரித விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள். ஆகையால் அவ்விசாரணைகளுக்கு மக்கள் அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கின்றது.
இச்சம்பவத்தையிட்டு ஆழ்ந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் ஆளாகியிருக்கும் பின்னணியில் நம் அனைவரினதும் ஒத்துழைப்பே தற்போது மிக முக்கியமாக தேவைப்படுகின்றது. அத்தோடு நாட்டு மக்கள் என்ற வகையில் அனைவரும் அமைதி காக்கும் அதேவேளை, வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்பட்டு செயற்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் நிலைமையை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் நடந்த சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிவதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என்பதையும் நாட்டு மக்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி. வணக்கம்!”

இன்று (15) முற்பகல் 11.17 மணிக்கு மலர்ந்துள்ள சுபவேளையில் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் பழ மரக்கன்றொன்றை நாட்டி, சுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டும் பாரம்பரியத்துடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் இணைந்துகொண்டார்.

முக்கொத்து சுபவேளையான இன்று மு.ப. 11.17 மணிக்கு வெண்ணிற ஆடையில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றொன்றை நடுவது இம்முறை சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
எதிர்கால தலைமுறைக்காக சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகம் உணரப்படும் இக்காலத்தில், அந்த பாரம்பரியத்துடன் இணைந்து பிரஜை என்ற தமது பொறுப்பை நிறைவேற்றுமாறு புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அவர்கள் அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 அனைத்து இலங்கையர்களுடனும் இணைந்து தேசிய பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (14) கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றுவதில் இணைந்து கொண்டார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜயந்தி சிறிசேன அம்மையார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு மூட்டி புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றினர்.
பணிகளை ஆரம்பிக்கும் பாரம்பரியத்தின் படி ஜனாதிபதி அவர்கள் தனது உத்தியோகபூர்வ வளாகத்தில் மரக்கன்றொன்றை நாட்டினார். அதனைத்தொடர்ந்து கை விசேட பாரம்பரியத்திலும் இணைந்து கொண்டார்.
மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைதந்திருந்ததுடன், அவர்கள் அனைவரையும் சுமூகமாக வரவேற்ற ஜனாதிபதி அவர்கள், உணவு உட்கொள்ளும் சுபநேரத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு விருந்துபசாரங்களையும் வழங்கினார்.
மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து தாய்நாட்டிற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இப்புத்தாண்டில் உறுதிபூண வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கேற்ப மரம் நடும் நிகழ்ச்சித்திட்டமொன்றும் நாளைய தினம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முக்கொத்து சுபநேரமான மு.ப 11.17க்கு வெள்ளை நிற ஆடைகளில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றினை நடுவது சிறந்ததாகும்.
இந்த சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அவர்கள் அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 தேசிய உணவுற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பமாகின

“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி 08ம் திகதி ஆரம்பமானது.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய ஜனாதிபதி செயலகத்தினால் நெறிப்படுத்தப்படும் தேசிய அபிவிருத்தி கருத்திட்டங்களான வறுமை ஒழிப்பு, கிராமசக்தி செயற்திட்டம், போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டம், சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்திட்டம், சிறுநீரக நோய் நிவாரண செயற்திட்டம், தேசிய உணவுற்பத்தி செயற்திட்டம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டம் உள்ளிட்ட விசேட செயற்திட்டங்கள் வெவ்வேறு அமைச்சுக்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் மற்றும் சமூக நலன்புரி செயற்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டத்திலிருந்து மாவட்டம் வரையிலான மக்களுக்கு உயர்ந்தபட்ச மக்கள் சேவையையும் அனுகூலங்களையும் பெற்றுக்கொடுத்தலே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் நோக்கமாகும்.
அரச நிறுவனங்களினால் தீர்வு காணப்பட வேண்டிய மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அரச பொறிமுறையினூடாக உயர்ந்தபட்ச வினைத்திறனுடன் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகளும் இச்செயற்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் முதலாவது வேலைத்திட்டம் அண்மையில் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தியதாக இடம்பெற்றதோடு, எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளும் உள்ளடக்கப்படும் வகையில் இன்று முதல் ஏப்ரல் 12ஆம் திகதி வரை அதன் இரண்டாம் கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு சமகாலத்தில் தேசிய உணவுற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட பல வேலைத்திட்டங்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்றன.
அதன் முதலாவது வேலைத்திட்டம் மண்முனை பிரதேச செயலாளர் பிரிவின் தந்தமலை பிரதேசத்தில் இடம்பெற்றதோடு, உப உணவுப் பயிர் விதைகளை பகிர்ந்தளித்தல், விவசாயிகளை தெளிவுபடுத்துதல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் இதன்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.
மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் TOM EJC மாங்கன்றுகளை பகிர்ந்தளித்தல், நீர்ப் பம்பிகள் வழங்குதல், நிலக்கடலை விதைகளை பகிர்ந்தளித்தல் மற்றும் விவசாயிகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்றன.
மேலும் மண்முனைப்பற்று கிரான்குளம் பிரதேசத்திலும் கோரளைப்பற்று மத்தி தியவட்டுவான், ஏறாவூர்பற்று மற்றும் மாவளையாறு பிரதேசங்களிலும் உப உணவுப் பயிர் விதைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு, விவசாயிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் இடம்பெற்றன.

 விவசாய கலாசாரத்தின் 52ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 07ம் திகதி முற்பகல் வரலாற்று சிறப்புக்க அநுராதபுர ஜயஸ்ரீ மகாபோதி முன்னிலையில் இடம்பெற்றது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லினை ஜயஸ்ரீ மகாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் கோலாகல விழா அடமஸ்தானாதிபதி வண.பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் ஆலோசனைக்களுக்கமைய விவசாய அமைச்சும் கமநல சேவைகள் திணைக்களமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
ஜயஸ்ரீ மகாபோதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட காலம் முதல் ஆரம்பிக்கப்பட்டதாக கருதப்படும் இந்த புத்தரிசி விழா ஊர்வலமானது, சிங்கள முறைப்படி மங்கள வாத்தியங்களுடனும் சிங்கள கலாசார அம்சங்களுடனும் கிழக்கு வாசலின் ஊடாக ஜயஸ்ரீ மகா போதியை வலம்வந்து அங்கு பிரத்தியேகமாக வைக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசிய பாத்திரத்தில் புத்தரிசி நிரப்பும் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது படியரிசியை வண.பல்லேகம சிறினிவாச நாயக்க தேரர், விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமை பதவி வகிக்கும் விவசாயிகளும் பாத்திரத்தில் சமர்ப்பித்தனர்.
பிரித்பாராயண முழக்கங்களுக்கு மத்தியில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகைதந்திருந்த விவசாய குடிமக்கள் பாத்திரம் நிறையும் வரை புத்தரிசியினை கொட்டினர். புத்தரிசி விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அதிதிகளும் பாத்திரத்தில் அரிசி நிரப்புவதில் கலந்துகொண்டனர்.
பண்டைய அரசர் காலம் முதல் பின்பற்றிவரும் இந்த சம்பிரதாயத்தை பூர்த்தி செய்வதற்கு நாடு முழுவதிலுமுள்ள விவசாயிகள் கலந்துகொண்டதுடன், மழையையும் சௌபாக்கியத்தையும் தன்னிறைவான விவசாயத்தையும் பொருளாதார சுபீட்சத்தையும் வேண்டி பல்வேறு பிரார்த்தனைகள் இதன்போது இடம்பெற்றன.
சம்பிரதாயபூர்மாக ஜயஸ்ரீ மகாபோதிக்கு சமர்ப்பிக்கப்படும் தேன் பாத்திரத்தினை வேடுவ தலைவர் வன்னில எத்தன் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் பீ.ஹரிசன், வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து புத்தரிசி பாற்சோறு பூஜை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க ருவன்வெலிசாய தூபி முன்னிலையில் இடம்பெற்றது.
அநுராதபுர மாவட்டத்தின் மகாவலி எச் வலயத்தை சேர்ந்த தம்புத்தேகம, கல்நேவ, நொச்சியாகம, மீகலேவ, தலாவ, மகா இலுப்பளம ஆகிய பிரதேசங்களில் 60,000 ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை செய்யப்பட்ட முதற்படி நெல்லினை ருவன்வெலிசாய தூபிக்கு சமர்ப்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதலாம் படியினை புத்த பகவானுக்கு சமர்ப்பித்து எதிர்வரும் காலங்களில் விளைச்சல் வளமாக கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் பிரார்த்தித்தனர். விவசாய மக்களுடன் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க ருவன்வெலிசாய தூபிக்கு பாற்சோறு காணிக்கை செலுத்தும் புண்ணிய நிகழ்விலும் கலந்துகொண்டார்.
இதன்போது ருவன்வெலிசாய விகாரையின் விகாராதிபதி வண.பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் சிறப்பு ஆன்மீக உரையொன்றினையும் நிகழ்த்தினார்.

 தற்காலத்தில் தேசத்தின் சிறிய, பெரிய கிராமங்களின் ஊடாக பல பகுதிகளிலும் பரவிக்கொண்டிருக்கும் போதைப்பொருள் பேரழிவானது இலங்கை பிள்ளைகளின் எதிர்கால பாதுகாப்பை இருள்மயப்படுத்தியும் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வை நெருக்கடிக்குட்படுத்தியும் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

எதிர்கால சந்ததியினருக்காக போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டை உரிமையாக்குவதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அரப்பணிப்பதாக முழு தேசமும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுக்கும் “சித்திரை மாத உறுதிமொழி” நிகழ்வு இன்று 03 ஆம் திகதி முற்பகல் இடம்பெற்றது.
இதன் அங்குரார்ப்பண வைபவம் சமய தலைவர்களின் ஆசீர்வாதத்துடன், ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று (03) முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், மற்றும் அரச அதிகாரிகள், முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்புத்துறை பிரதானிகளுடன் இன, மத பேதமின்றி பெருமளவான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எதிர்கால சந்ததியினருக்காக போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டினை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக தான் போதைப்பொருள் பாவனையை தவிர்த்துக்கொள்வேன் என்றும் ஏற்கனவே அதற்கு பலியாகியுள்ள மற்றும் பலியாகாத தனது உறவினர்களையும், நண்பர்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் போதையிலிருந்து மீட்டுக்கொள்வதற்காக இத்தால் தன்னிடம் ஒப்படைக்கப்படும் மகத்தான கூட்டுப்பொறுப்பை உயர்ந்தபட்ச அர்ப்பணிப்போடும் நேர்மையோடும் நிறைவேற்றுவேன் என்றும் அனைவரும் திடசங்கற்பம்பூண்டு சத்தியப்பிரமாணம் செய்தனர்.
இந்த நிகழ்வு இலத்திரனியல் ஊடகங்களின் வாயிலாக நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டதோடு, அதனுடன் இணைந்ததாக தத்தமது நிறுவனங்களிலிருந்து அரச சேவையாளர்கள், பொதுமக்கள், பாடசாலை பிள்ளைகள் ஆகிய அனைவரும் இந்த சித்திரை மாத உறுதிமொழியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் அழிவிலிருந்து நாட்டை விடுதலை செய்து, சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக குடும்ப கட்டமைப்பிலிருந்து சமூக கட்டமைப்பு வரை விரிவானதொரு கருத்து மாற்றத்துடனும் நேரடி பங்களிப்புடனும் இந்த பேரழிவை ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது ஜனாதிபதி அவர்களின் எண்ணமாகும்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வாகவே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் “சித்திரை மாத உறுதிமொழி” நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதனுடன் போதைக்கு எதிரான நிகழ்ச்சித்திட்டத்தை அனைத்து பிரிவுகளினதும் ஒத்துழைப்புடன் பலமாக முன்னெடுக்க வேண்டும் என்பது ஜனாதிபதி அவர்களின் நோக்கமாகும்.

Latest News right

நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய உறவின் சின்னம் - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 22, 2024
Default Image
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் மகுதாராம ஆலயம் மியன்மார் -இலங்கை சமய, கலாசார மற்றும்…

இறுதி ரந்தோலி ஊர்வலத்தை பார்வையிட ஜனாதிபதி இணைந்து கொண்டார்

ஆக 20, 2024
Default Image
கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவின் இறுதி…

அரச ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்புக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் பதிலடி கொடுக்கிறது - அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

ஆக 18, 2024
Default Image
“அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மூன்றாண்டுகளுக்கு 25000 உதவித்தொகை. குறைந்தபட்சம் சிறு…

ஊடக விதிமுறைகள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதித் தேர்தல் ஆணையாளர்

ஆக 09, 2024
Default Image
தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்…

தேர்தல் காரணமாக IMF கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை - அமைச்சரவை பேச்சாளர்

ஆக 06, 2024
Default Image
தேர்தல் அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக 2027 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
சிறந்த சங்கப் பிதாமகராக இருந்து காலமான கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
மறைந்த கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர் கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு…