தேசிய உணவுற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பமாகின

“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி 08ம் திகதி ஆரம்பமானது.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய ஜனாதிபதி செயலகத்தினால் நெறிப்படுத்தப்படும் தேசிய அபிவிருத்தி கருத்திட்டங்களான வறுமை ஒழிப்பு, கிராமசக்தி செயற்திட்டம், போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டம், சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்திட்டம், சிறுநீரக நோய் நிவாரண செயற்திட்டம், தேசிய உணவுற்பத்தி செயற்திட்டம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டம் உள்ளிட்ட விசேட செயற்திட்டங்கள் வெவ்வேறு அமைச்சுக்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் மற்றும் சமூக நலன்புரி செயற்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டத்திலிருந்து மாவட்டம் வரையிலான மக்களுக்கு உயர்ந்தபட்ச மக்கள் சேவையையும் அனுகூலங்களையும் பெற்றுக்கொடுத்தலே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் நோக்கமாகும்.
அரச நிறுவனங்களினால் தீர்வு காணப்பட வேண்டிய மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அரச பொறிமுறையினூடாக உயர்ந்தபட்ச வினைத்திறனுடன் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகளும் இச்செயற்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் முதலாவது வேலைத்திட்டம் அண்மையில் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தியதாக இடம்பெற்றதோடு, எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளும் உள்ளடக்கப்படும் வகையில் இன்று முதல் ஏப்ரல் 12ஆம் திகதி வரை அதன் இரண்டாம் கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு சமகாலத்தில் தேசிய உணவுற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட பல வேலைத்திட்டங்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்றன.
அதன் முதலாவது வேலைத்திட்டம் மண்முனை பிரதேச செயலாளர் பிரிவின் தந்தமலை பிரதேசத்தில் இடம்பெற்றதோடு, உப உணவுப் பயிர் விதைகளை பகிர்ந்தளித்தல், விவசாயிகளை தெளிவுபடுத்துதல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் இதன்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.
மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் TOM EJC மாங்கன்றுகளை பகிர்ந்தளித்தல், நீர்ப் பம்பிகள் வழங்குதல், நிலக்கடலை விதைகளை பகிர்ந்தளித்தல் மற்றும் விவசாயிகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்றன.
மேலும் மண்முனைப்பற்று கிரான்குளம் பிரதேசத்திலும் கோரளைப்பற்று மத்தி தியவட்டுவான், ஏறாவூர்பற்று மற்றும் மாவளையாறு பிரதேசங்களிலும் உப உணவுப் பயிர் விதைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு, விவசாயிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் இடம்பெற்றன.