விவசாய கலாசாரத்தின் 52ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 07ம் திகதி முற்பகல் வரலாற்று சிறப்புக்க அநுராதபுர ஜயஸ்ரீ மகாபோதி முன்னிலையில் இடம்பெற்றது.
அறுவடை செய்யப்பட்ட நெல்லினை ஜயஸ்ரீ மகாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் கோலாகல விழா அடமஸ்தானாதிபதி வண.பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் ஆலோசனைக்களுக்கமைய விவசாய அமைச்சும் கமநல சேவைகள் திணைக்களமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
ஜயஸ்ரீ மகாபோதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட காலம் முதல் ஆரம்பிக்கப்பட்டதாக கருதப்படும் இந்த புத்தரிசி விழா ஊர்வலமானது, சிங்கள முறைப்படி மங்கள வாத்தியங்களுடனும் சிங்கள கலாசார அம்சங்களுடனும் கிழக்கு வாசலின் ஊடாக ஜயஸ்ரீ மகா போதியை வலம்வந்து அங்கு பிரத்தியேகமாக வைக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசிய பாத்திரத்தில் புத்தரிசி நிரப்பும் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது படியரிசியை வண.பல்லேகம சிறினிவாச நாயக்க தேரர், விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமை பதவி வகிக்கும் விவசாயிகளும் பாத்திரத்தில் சமர்ப்பித்தனர்.
பிரித்பாராயண முழக்கங்களுக்கு மத்தியில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகைதந்திருந்த விவசாய குடிமக்கள் பாத்திரம் நிறையும் வரை புத்தரிசியினை கொட்டினர். புத்தரிசி விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அதிதிகளும் பாத்திரத்தில் அரிசி நிரப்புவதில் கலந்துகொண்டனர்.
பண்டைய அரசர் காலம் முதல் பின்பற்றிவரும் இந்த சம்பிரதாயத்தை பூர்த்தி செய்வதற்கு நாடு முழுவதிலுமுள்ள விவசாயிகள் கலந்துகொண்டதுடன், மழையையும் சௌபாக்கியத்தையும் தன்னிறைவான விவசாயத்தையும் பொருளாதார சுபீட்சத்தையும் வேண்டி பல்வேறு பிரார்த்தனைகள் இதன்போது இடம்பெற்றன.
சம்பிரதாயபூர்மாக ஜயஸ்ரீ மகாபோதிக்கு சமர்ப்பிக்கப்படும் தேன் பாத்திரத்தினை வேடுவ தலைவர் வன்னில எத்தன் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் பீ.ஹரிசன், வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து புத்தரிசி பாற்சோறு பூஜை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க ருவன்வெலிசாய தூபி முன்னிலையில் இடம்பெற்றது.
அநுராதபுர மாவட்டத்தின் மகாவலி எச் வலயத்தை சேர்ந்த தம்புத்தேகம, கல்நேவ, நொச்சியாகம, மீகலேவ, தலாவ, மகா இலுப்பளம ஆகிய பிரதேசங்களில் 60,000 ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை செய்யப்பட்ட முதற்படி நெல்லினை ருவன்வெலிசாய தூபிக்கு சமர்ப்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதலாம் படியினை புத்த பகவானுக்கு சமர்ப்பித்து எதிர்வரும் காலங்களில் விளைச்சல் வளமாக கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் பிரார்த்தித்தனர். விவசாய மக்களுடன் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க ருவன்வெலிசாய தூபிக்கு பாற்சோறு காணிக்கை செலுத்தும் புண்ணிய நிகழ்விலும் கலந்துகொண்டார்.
இதன்போது ருவன்வெலிசாய விகாரையின் விகாராதிபதி வண.பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் சிறப்பு ஆன்மீக உரையொன்றினையும் நிகழ்த்தினார்.