கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் உயர்கல்வித் துறையில் தர உறுதிக்கான முகவர் நிறுவனங்களின் சர்வதேச வலயமைப்பின் 15ஆவது மாநாட்டின் (INQAAHE) இரண்டாவது நாளான 26ம் திகதி அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

“தர உறுதி, தகைமைகள் மற்றும் அங்கீகாரம் : பூகோள மயமானதொரு உலகில் நம்பிக்கையை கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளின் கீழ் இம்மாநாடு நேற்று ஆரம்பமானது. இம்மாநாடு எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.
உயர் கல்வியமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
INQAAHE என்பது உயர் கல்வித்துறையில் தரத்தை உறுதி செய்வதற்கான அடிப்படைகள், பயன்பாடுகள் தொடர்பாக செயற்படும் சுமார் 300 நிறுவனங்களை கொண்ட சர்வதேச அமைப்பாகும். அந்த வலயமைப்பின் இரண்டு வருடங்களுக்கொருமுறை நடைபெறும் மாநாட்டின் இவ்வருட உபசரிப்பு நடவடிக்கைகளை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.
பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர்கள் மற்றும் விசேட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களுக்கான நினைவுச் சின்னங்களையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வாவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டுள்ளதுடன், உயர்கல்வித் துறையில் தர உறுதிப்பாட்டுக்கான முகவர் அமைப்பின் தலைவர் கலாநிதி சுசன்ன கரக்கான்யனினால் கருத்துரை வழங்கப்பட்டது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.