“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்டத்திற்கான செயற்திட்டத்தின் நிறைவு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நாளை (22) புத்தளம் சக்தி விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

கௌரவ ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களாகிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டம், பிள்ளைகளை பாதுகாப்போம் தேசிய செயற்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டம் உள்ளி்ட்ட விசேட செயற்திட்டங்கள் மற்றும் வெவ்வேறு அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்த முறையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டம் முதல் மாவட்ட மட்டம் வரையில் மக்களுக்கு அதிகளவிலான சேவையையும் நன்மைகளையும் பெற்றுக்கொடுப்பதே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
அதன் முதலாவது மாவட்ட மட்ட செயற்திட்டம் கடந்த 18ஆம் திகதி புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பமானதுடன், புத்தளம் மாவட்டத்தின் 16 பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் 332 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்கும் வகையில் அப்பிரதேச மக்களின் கல்விப் பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட மக்களுக்கான பல்வேறு சேவைகள் அங்கு வழங்கப்பட்டன.
அதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போதைபொருள் ஒழிப்பு, சிறுநீரக நோய்த்தடுப்பு, சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றன.
நீண்டகாலமாக மக்கள் முகங்கொடுத்து வந்த பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை வழங்கி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டம் எதிர்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளன.
நாளைய தினம் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள புத்தளம் மாவட்ட நிறைவு விழாவையொட்டி புத்தளம் புதிய நகரசபை விளையாட்டு மைதானம், புதிய நகர மண்டபம், புத்தளம் மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா கணனி பிரிவு ஆகியனவும் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளன.