கென்யாவின் நைரோபி நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) இரவு நைரோபியிலுள்ள ஜொமோ கென்யாட்டா (Jomo Kenyatta) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

கென்ய நாட்டின் விசேட பிரதிநிதிக் குழுவினரால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழாமினருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கென்ய நாட்டு வெளிநாட்டலுவல்கள் பிரதான நிர்வாக செயலாளர் அபாபு நம்வம்பா (Ababu Namwamba), நீர் வழங்கல் மற்றும் சுகாதார அலுவல்கள் தொடர்பிலான அமைச்சரும் அமைச்சரவை செயலாளருமான சைமன் கிப்றோனோ செலுகி (Simon Kiprono Chelugui) ஆகியோரும் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா உள்ளிட்ட குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அவர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா விடுதிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் அதிகாரிகள் கென்ய நாட்டு கலாசார முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
கென்ய நாட்டு ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா (Uhuru Kenyatta) அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையிலும் சுற்றாடலை பாதுகாப்பதற்கு பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்ட தலைவர் என்ற வகையிலும் ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றுதலானது மாநாட்டின் சிறப்பம்சமாக அமையும் என கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
“சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் நாளை மதியம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விசேட உரையாற்றவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.