சர்வஜன வாக்கெடுப்பை கையாளும் ஊடகங்களின் பலம் அரசியல் நிறுவனங்களின் பலத்தை விட மிக அதிகம் எனவும், அந்த பெரும் பலத்துடன் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பும் இருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஊடக சட்ட மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
"ஊடக வரலாற்றில் நம்பகத்தன்மையும் மரியாதையும் அதிகம் இருந்து வந்துள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் இன்று அந்த நற்பெயருக்கு நம்பகத்தன்மை இருக்கிறதா? ஊடகத்திற்கு உள்ள கௌரவம் குறைந்துள்ளது. அவ்வாறே நம்பகத்தன்மையிலும் குறையுள்ளது என்பதை வெகுசன ஊடக அமைச்சர் என்ற வகையிலும், ஊடகத் துறையில் உள்ள நாம் அனைவரும் எவ்வித வாதங்களும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். அது எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அவ்வாறெனில் அதற்கான தீர்வுகள் என்ன? அந்த தீர்வுகளுக்கான அர்த்தமுள்ள உரையாடலை உருவாக்குவதே இந்த விவாதத்தின் அடிப்படை.
ஊடகத்துறையில் நமது நம்பகத்தன்மை ஐந்து முக்கிய விடயங்களில் கீழ் களங்கம் அடைந்துள்ளது என்று நான் நம்புகிறேன். முதலாவது, எஜமானனின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல், பொதுமக்களின் நலனுக்காக அல்ல, அரச ஊடகமெனில் அரசாங்கம் என்ற எஜமானுக்கு, இதன் மூலம் சமநிலை இழந்துள்ளது. இது எனது நம்பிக்கையின் அடிப்படையில் முதல் விடயமாகும். இரண்டாவது விடயம் தீவிர அரசியல் மயமாக்கல், அதை நாம் அனுபவிக்கிறோம். சில சமயங்களில் இது வெளிப்படையாக மட்டுமல்ல, மறைமுகமாகவும் நடக்கின்றது. அவ்வாறே, அடுத்த தீவிரமான பிரச்சினை என்னவென்றால், தனியுரிமையின் எல்லைகள் மிகத் தீவிரமான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.. பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் உள்ளனர்.
அடுத்த விடயம் என்னவெனில், தகவலின் அடிப்படையில் அல்லாமல், மனோபாவத்தின் அடிப்படையில் போலிச் செய்திகளால் மக்கள் ஏமாறுகிறார்கள். அவ்வாறே நாம் அடிக்கடி பார்ப்பதும் அனுபவிப்பதுமான ஒரு விடயம்தான் தேசியம் மற்றும் மதத்தின் அடிப்படையிலான வெறுப்பான கருத்துக்கள். நான் கண்டறிந்த விடயங்களுள் இது இன்னொரு விடயமாகும். இதனால் தான் நாம் வரலாற்றில் பெற்றுக் கொண்ட கண்ணியம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதிலிருந்து எப்படி விடுபடுவது? தணிக்கை தான் இதற்கு சரியான தீர்வு என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இவ்வாறான கருத்தாடல்கள் இருக்காலம், ஆனால் நாம் பதற்றமடையத் தேவையில்லை. நான் வெகுசன ஊடக அமைச்சர் என்ற வகையில் இது சரியான தீர்வு அல்ல என நான் கருதுகின்றேன். நான் அதை நிராகரிக்கிறேன். ஆனால் எமக்கு ஒருவித ஒழுங்குமுறை தேவைப்படுகின்றது. .அதை யாரும் நிராகரிக்க முடியாது என்று நினைக்கிறேன்.
இக் கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் ரஞ்சன ஹேரத், முன்னாள் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, ஜனாதிபதி சட்டத்தரணி ஜகத் விக்கிரமநாயக்க, கலாநிதி ரங்க கலன்சூரிய, ஊடகவியலாளர் மற்றும் ஆய்வாளர் நாலக குணவர்தன, இலத்திரனியல் ஒலிபரப்பாளர் சங்கத்தின் தலைவர் அசங்க ஜயசுந்தர, ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் முன்னணி சமூக ஊடக ஆர்வலர்கள் சிலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.