நெருக்கடியான காலங்களில் நாட்டிற்காக கொள்கை வகுப்பாளர்கள் மிகப்பெரிய தியாகங்களைச் செய்ய வேண்டும் என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மின்வெட்டு தொடர்பில் நேற்று வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் பேச்சுவார்த்தை மேசையில் எடுத்த தீர்மானங்கள் மற்றும் அமைச்சரவையில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மின்வெட்டு மேலும் ஏற்படக்கூடாது என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும,

“மேற்படி விடயத்தில் நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பீக் ஹவர்ஸில் 25 வாட் மின்விளக்கை அணைத்து வைக்க முடியுமானால், அந்த ஐந்து மணி நேரத்தில் 140 மெகாவாட் சேமிக்க முடியும்.

அதாவது, பீக் ஹவர்ஸில் ஐந்து மணி நேரம் 25 வாட் மின்விளக்கை அணைத்து வைப்பது என்பது நாம் பெரிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியது போல் ஆகும். ஆனால் அது மட்டும் செய்தால் போதாது. அந்த தியாகத்தை குடிமக்கள் மட்டும் செய்தால் போதாது. கொள்கை வகுப்பாளர்களாகிய நாம் இந்த தருணத்தில் மிகப்பெரிய தியாகத்தை செய்ய வேண்டியவர்கள். கொள்கை வகுப்பாளர்களாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அந்த அர்ப்பணிப்பை செய்து காட்ட வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். சில அரச அலுவலகங்களில் குளிரூட்டி இயந்திரங்களை  18 முதல் 19 டிகிரி செல்சியஸ் வரை குறைத்துள்ளனர்.  பொதுவாக குளிரூட்டியின் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் இருந்தால் போதுமானது என மின்சக்தி வல்லுனர்கள்  கூறுகின்றனர். ஏனென்றால் நாம் ஐஸ்லாந்தில் வசிக்கவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.