இந்த நாட்டில் உள்ள கல்வி முறையும் பரீட்சை முறையும் நாட்டின் குழந்தைகளின் திறமைகளை அடையாளம் காணும் அளவுக்கு ஆக்கப்பூர்வமானதாக இல்லை என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். குழந்தைகளை தேர்ச்சி பெற்றவர், தேர்ச்சி பெறாதவர் என பிரிக்கும் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கை மன்ற நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சிறுவர்களின் திறன்களை மதிப்பீடு செய்து விருதுகள் வழங்கும் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"எனது கதையில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன. முதல் அத்தியாயம் பெற்றோர்களுக்கு விடப்படுகின்ற கோரிக்கை, இரண்டாவது அத்தியாயம் தியவன்னா மத்தியில் இருந்து கொள்கைளை வகுப்பவர்களிடம் விடப்படுகின்ற கோரிக்கை, மூன்றாவது அத்தியாயம் எனது சகாக்கள் மற்றும் ஊடக  நிறுவனங்களிடம் விடப்படுகின்ற கோரிக்கை,

பிள்ளைகளை தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள்  என பிரிக்கும் கல்வி முறைக்கும் பரீட்சை முறைக்கும் பதிலாக பிள்ளைகளின் திறமைகளை மேம்படுத்தும் கல்வி முறையும் பரீட்சை முறையும் வகுக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளை தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் என பிரிக்கும் ஆபத்தான முறையொன்று உலகில் உள்ளது.  ஒவ்வொரு குழந்தையும் தேர்ச்சி பெற்றவர்களே.  ஆனால் குழந்தை எத்துறையில் திறமையானவர் என்பதைக் கண்டறிய நமது தேர்வு முறையும் கல்வி முறையும் ஆக்கப்பூர்வமாக இல்லை. கணிதத்தில் தோல்வியடைந்தால் வாழ்க்கையிலே தோல்வியடைந்தவராகிறான்.  இவ்வாறுதான் எமது கல்வி முறை கட்டியெழுப்பப் பட்டுள்ளது.  சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 50 சதவீதம் கணிதத் தேர்வில் சித்தி பெறுவதில்லை. அப்படியென்றால் அந்த 50 சதவீதமும், வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களா?  கணிதத்தில் தேர்ச்சி பெறாதவன் அழகியற் துறையில் திறமையானவனாக இருப்பான்.  சித்திரம் வரைவதில் திறமையானவனாக இருப்பான்.  தொழில்நுட்பத்தில் திறமையானவனாக இருப்பான்.  ஆனால் எமது கல்வி முறை, எமது பரீட்சை முறை அதனைக் கண்டறிந்து கொள்வதற்கு திறன் வாய்ந்தாக இல்லை.  எனவே, குழந்தைகளை தேர்ச்சி பெற்றவன், தேர்ச்சி பெறாதவன் எனப் பிரிக்கும் இந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டும்.

உலகின் பல நாடுகளும் பின்பற்றும், பின்லாந்து மட்டுமின்றி எஸ்டோனியா போன்ற நாடுகள்  ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்புகளிலே நினைவாற்றலுடன் தேர்வு எழுதத் தொடங்குகிறார்கள் என அமைச்சர் கூறினார்.

"எனது இரண்டாவது அத்தியாயம் நானும் உட்பட கொள்கை வகுப்பாளர்களிடம் விடுக்கப்படும் வேண்டுகோள்,  மேற்குலக சமூகம் 13 என்கின்ற இலக்கம் துரதிர்ஷ்டமானது என்று நம்புகின்றது.  இதற்கு விஞ்ஞான ரீதியான கருத்துக்கள் இல்லாதிருக்கலாம்.  அவ்வாறே 225 என்கின்ற இலக்கம் கூட துரதிர்ஷ்டமானது என இலங்கை மக்கள் சமூகமும் கருதுகின்றனர்.  இந்த வாதத்தினை கல்வியினால் மாத்திரமே மாற்ற முடியும். உலகில் வறுமை, தீவிரவாதம், பயங்கரவாதம் அனைத்தும் கல்வியின்மையால் எழுகின்றன. 

எனவே கட்சிகள், எதிர்க்கட்சிகள் என குழுக்களாகப் பிரிக்காமல், 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற கல்வி முறைக்கான நமது கருத்துகளை முன் வைக்க வேண்டும்.  இதற்காக இலங்கை தேசத்தவர்கள் என்ற வகையில் நாம் நமது சகோதர மொழிகளைக் கற்க வேண்டும். அவ்வாறே,  சர்வதேச மொழியாக குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும்.

தனது உரையின் மூன்றாம் அத்தியாயத்திற்கு விளக்கமளித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள்,  குழந்தைகள், ஊனமுற்ற குடிமக்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் அறிக்கைப் படுத்தும் போது ஊடகவியலாளர்கள் போன்றே ஊடக நிறுவனங்களும் உணர்வுபூர்வமாக செய்திகளை வெளியிட வேண்டும் என்றார்.

"குழந்தைகள் நீரைப் போன்றவர்கள்.  நீரின் வடிவம் என்ன?  நீர் ஊற்றும் பாத்திரத்தின் வடிவமே நீரின் வடிவமாகும்.  எனவே சிறுவர் துஷ்பிரயோகம் என்பது குடும்ப வன்முறையில் மட்டும் நின்றுவிடவில்லை. செய்தித்தாள் பக்கங்களுக்குள், கேமரா லென்ஸினுள் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படலாம். எனவே, ஊடகத்துறை அமைச்சராக அல்லாமல், ஒரு தொழில்முறை சக ஊழியராக, அறிக்கையிடுவதில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.