"ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சிறுவர்கள் எதிர்கொள்ளும் முதல் சவாலாகும். தொற்றுநோய் சூழ்நிலையில் பரீட்சைகளை தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். புலமைப்பரிசில் பரீட்சை 05 மாதங்களின் பின்னரே நடைபெறுகின்றது. ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த பரீட்சையே ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கடந்த 19ஆம் திகதி கொழும்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஊடகத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“நமது நாடு மிகவும் திறமையான குழந்தைகளைக் கொண்ட நாடு.  குழந்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள், அந்த நம்பிக்கையை கடந்த முறை காப்பாற்றியதால் அந்த வெற்றியை நாட்டுக்கு காட்டினோம். அதனால்தான் ஒவ்வொரு தாய் தந்தையரையும் தங்கள் குழந்தைகளை நம்புங்கள், பிள்ளைகளின் பலத்தில் நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். முழு நாட்டிலும் உள்ள மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூற்று எட்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். ” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.