- 60 பில்லியன் ரூபா வருடாந்தம் சேமிப்பு...
- ஹம்பாந்தோட்டையில் மருந்து முதலீட்டு வலயம் நிர்மாணிக்கப்படும்...
- உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மருந்து பொருள் நகரம்…
- ஒவ்வொரு மாதமும் புதிய மருந்து ஒன்றை உற்பத்தி செய்ய நடவடிக்கை...
எதிர்வரும் மூன்று வருட காலப்பகுதியில் நாட்டின் மருந்து தேவையில் 50% வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொள்வதும் மக்களுக்கு தேவையான தரம் வாய்ந்த மருந்து பொருட்களை கட்டுப்படியான விலையில் வழங்குவதும் இதன் நோக்கமாகும். உலக சுகாதார தாபனத்தின் பரிந்துரை மற்றும் நியமங்களுக்கு ஏற்ற வகையில் அனைத்து உற்பத்திகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. நாட்டின் மருந்து தேவையில் 85% வீதம் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது. இதற்காக வருடாந்தம் 130 பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. நாட்டின் மருந்து தேவையை உள்நாட்டிலேயே நிறைவேற்றிக்கொள்வதன் மூலம் வருடாந்தம் 60 பில்லியன் ரூபா நாட்டுக்கு மீதமாகும். குறித்த இலக்கை வெற்றிகொள்வதற்கு எமக்கு முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மருந்துப் பொருள் உற்பத்தி மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்
தற்போது ஆசிய வலயத்தில் அதிக மருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு இலங்கையாகும். உடனடியாக இந்த நிலைமை மாற்றப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கு பங்களிப்பதற்கு பாரியளவில் சுதேச முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டார்.
வெளிநாட்டு சந்தைகளை இலக்காக்கொண்ட மருந்து உற்பத்திக்காக 400 ஏக்கரில் முதலீட்டு வலயம் ஒன்று ஹம்பாந்தோட்டை கைத்தொழில் நகரில் தாபிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் இணைந்துகொள்வதற்கு உலகின் முன்னணி மருந்து பொருள் உற்பத்தி நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்காசிய வலயத்தில் மருந்து பொருட்களுக்கு அதிக கேள்வி உள்ளது. இந்த சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வதும் இதன் ஒரு நோக்கமாகும்.
அரச துறையை முன்னேற்றும் அதேநேரம் தனியார் துறை தொழில் முயற்சியாளர்களையும் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. மருந்து பொருட்கள் உற்பத்திக்காக முதலீட்டு முயற்சிகளில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மருந்து பொருள் உற்பத்தி இறக்குமதி நிறுவனங்களிடம் திறந்த அழைப்பொன்றை விடுத்தார்.
சுதேச முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வலயம் ஒன்று அனுராதபுரம் ஒயாமடு பிரதேசத்தில் 100 ஏக்கர் நிலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட உள்ளது. 25 நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டை செய்வதற்கு தயாராக உள்ளனர். தற்போதைய அரசின் கீழ் நாட்டின் மருந்து உற்பத்தியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் புதிய மருந்து ஒன்றை நாட்டில் உற்பத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு புதிய மருந்தை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.
மருந்து உற்பத்தியை பதிவு செய்வதற்கு சுமார் ஒரு வருட காலம் ஆகின்றது. அக்கால தாமதத்தை தவிர்ப்பதற்கு தேவையான சட்ட திருத்தங்களை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவையை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில் சுதேச மருந்து பொருட்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தனியான பிரிவொன்றை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அரச மருந்துப் பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகளை பொது மக்களுக்கு கட்டுப்படியான விலையில் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சதோச மற்றும் கூட்டுறவு பல்பொருள் அங்காடி நிலையங்களில் 100 மருந்து விற்பனை நிலையங்களை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களினதும் துறைசார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் மருந்து பொருள் கம்பனிகளின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.