இன்று (07) முற்பகல் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் ஆரம்பமான இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெரும்பாலும் கடற்பாதைகளைப் பயன்படுத்துகின்றனர். நாடுகளின் இறையாதிக்கத்துக்குக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் வலயத்தில் இந்த கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்காக உரிய ஏற்பாடுகள் இல்லாதிருப்பது பாரிய சிக்கலாகுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதற்கு தீர்வு காணும் பொருத்தமான முறைமையை உருவாக்குவதற்கு இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் விரைவான கவனம் செலுத்த வேண்டுமென முன்மொழிந்தார்.
இப்போது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் கைத்தொழில் போன்று பரவியிருப்பது தொடர்பில் பிராந்திய அரச தலைவர்களின் கவனம் செலுத்த வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும், திருப்தியடையக்கூடிய பெறுபேறு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு அண்மையிலுள்ள நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் பயன்கிட்டிய போதிலும், கப்பற்போக்குவரத்துக்களில் இடம்பெறும் பயங்கரவாத செயற்பாடுகள், கடற்கொள்ளை போன்ற குற்றங்கள் தொடர்பில் பிராந்தியத்திலுள்ள அனைத்து அரச தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.
இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம்மிக்க இடத்தில் இலங்கை அமைந்திருப்பது நாட்டின் வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் உயர்ந்த பட்ச பயன்பாட்டை பெறக்கூடியவாறு பயன்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இந்து சமுத்திர பிராந்தியம் துரிதமாக வளர்ச்சியடையும் பிராந்தியம் என்பதனால் அப்பிராந்தியத்தில் தோன்றும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய முறை தொடர்பில் விரைவான கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கு இந்த மாநாடு மிக பொருத்தமான இடமென்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இந்து சமுத்திர பிராந்திய தலைவர்கள் மாநாட்டுக்கு இதற்கு முன்னர் தலைமை வகித்த இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா நிறைவேற்றிய சேவையை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இம்முறை மாநாட்டின் உபசரணை நாடான இந்தோனேசியா ஆற்றிய பெரும் சேவையையும் பாராட்டினார்.
அத்துடன் மாநாட்டின் அடுத்த தலைமைத்துவம் கிடைக்கவுள்ள தென் ஆபிரிக்காவுக்கு ஜனாதிபதி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள நாடுகளின் பேண்தகு மற்றும் சமமான அபிவிருத்தி நோக்காகக் கொண்டு நடத்தப்படும் இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாடு இன்று (07) முற்பகல் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கோலாகலமாக ஆரம்பமானது.
மாநாடு நடைபெறும் ஜகார்த்தா நகர மாநாட்டு மண்டபத்தக்கு வருகை தந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், இந்தோனேசிய ஜனாதிபதி Joko Vidado அவர்களால் வரவேற்கப்பட்டார்.
தென் ஆபிரிக்க ஜனாதிபதி, அவஸ்திரேலிய பிரதமர், பங்களாதேஷ் பிரதமர், இந்திய துணை ஜனாதிபதி, சீசெல்ஸ் துணை ஜனாதிபதி, உள்ளிட்ட இந்து சமுத்திர பிராந்தியத்தின் 21 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அவர்களால் இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு உயர்ந்த பட்ச வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்த சமுத்திரத்தை அமைதியான, நிலையான மற்றும் சுபீட்சமான பிராந்தியமாக மாற்றுவதற்காக கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்தும் உடன்படிக்கையிலும் அரச தலைவர்கள் கைச்சாத்திட்டனர். அதற்கு இலங்கையின் உயர்ந்த பட்ச அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கைச்சாத்திட்டார்.