2011 ஆம் ஆண்டு நேபாளத்தின் கத்மண்டு நகரத்தில் ஆரம்பமான இந்த கொள்முதல் மாநாடு 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலும் அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு பங்களாதேஷின் டாக்கா நகரிலும் நடைபெற்றது.
இலத்திரனியல் கொள்முதல் முறைமைக்கு எமது நாடு மாறவேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ள அரசாங்கம் நான்காவது மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. உலக வங்கி, ஆசிய ஆபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, நிதி அமைச்சு மற்றும் அரசாங்க நிதி திணைக்களம் ஆகியன இணைந்து இம்மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன.
நாட்டின் நலனுக்காக புதிய பொருளாதார மற்றும் சமூக சூழலை ஏற்படுத்துவதற்காக மட்டுமன்றி, பேண்தகு அபிவிருத்தியை நோக்கி ஒரு தெளிவான பிரவேசத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகளுக்கு இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.
இலத்திரனியல் கொள்முதல் முறைமைக்கு நாட்டை மாற்றுவதன் மூலம் அரச நிதி முகாமைத்துவத்தைத் துரிதமாகவும், வினைத்திறன்மிக்கதாக்கவும் மேற்கொள்வதுடன் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து ஊழல் மோசடிகளுக்கான வாய்ப்புகளை குறைக்கவும் முடியும்.
பூகோள ரீதியாக கொள்வனவின்போது எமது நாடு உயர்ந்த இடத்தை பெறுவதற்கு பிராந்திய நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இம்மாநட்டின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநாட்டின் தலைமைப் பதவியை வகிக்கும் பங்களாதேஷ் நாட்டின் பாரூக் ஹூசைன் இம்முறை அப்பொறுப்பை இலங்கையின் பி அல்கமவிற்கு கையளிப்பார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் ஆர் எச் எஸ் சமரதுங்க, இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இஸ்ஸா மிதி இடே, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் சி சிகோவதி ஆகியோர் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.