ஐக்கிய நாடுகள் 71ஆவது அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்ற உள்ளார்.
இந்த மாநாட்டில் நிலைபேறான அபிவிருத்தி, பூகோள பாதுகாப்பு, பரிஸ் நகர இணைக்கப்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 2வது முறையாக உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி நாளை நிகழ்த்த இருக்கும் உரை தொடர்பாக தற்சமயம் நியூயோர்க் நகரில் இருக்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவித்தார்.
நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த உரை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தெரிவிக்கவிருக்கும் கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச தலைவர்கள் முக்கிய கவனம் செலுத்த உள்ளார்கள். ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கான விஜயம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கிளின்டன் பூகோள சம்மேளன கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவுஸ்ரேலிய உயர்மட்ட தலைவர்கள் , ஏனைய நாடுகளின் பிரதமர்கள் , அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு நியூயோர்க் நகரில் செரீட்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.