காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் சூழலைப் பாதுகாப்பதற்குமான உடன்படிக்கைகள உரியமுறையில் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போன்று நேர்மையான அரசியல் தலைமைகள் அவசியமாகும் என யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஐரினா பொகோவா தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று (17) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக தாம் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்ததாகக் குறிப்பிட்ட திருமதி ஐரினா, இயற்கை எழில் மிகுந்த இலங்கை நாட்டின் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக யுனெஸ்கோ நிறுவனத்தினால் நிதி உதவி வழங்குவதற்குக் கிடைத்திருப்பதையிட்டு தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். மேலும் இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டின் கலாசார மற்றும் கல்வி ரீதியான நடவடிக்கைகளுக்கு யுனெஸ்கோ நிறுவனம் மிக நீண்டகாலமாக வழங்கி வரும் உதவிகளுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி, எதிர்காலத்திலும் இந்த உதவிகள் தொடரவேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் ஐரினா அம்மையார் அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, சூழலைப் பாதுகாக்கும் சர்வதேச உடன்பாடுகளுக்கு ஏற்ப செயற்படுவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பிரான்ஸ் நாட்டின் இலங்கைத் தூதுவர் திலக் ரனவிராஜா, யுனெஸ்கோ நிறுவனத்தின் புதுடில்லிப் பணிப்பாளர் சிகோறு ஒயாகீ இலங்கை நாட்டின் யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் தம்மிகா விஜேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.