ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் (Stephane Dion) அவர்கள் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று (28) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ (Justin Trudeau) அவர்களின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் தெரிவித்த கனடா வெளியுறவு அமைச்சர், மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரைச் சந்தித்த பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்ததாக கனடா பிரதமர் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.

இலங்கையின் நீதிமன்ற முறைமையினை பலப்படுத்தி ஜனநாயத்தை வலுவடையச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டுத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர், இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்து சூரிய மின்சக்தி உற்பத்தி கருத்திட்டங்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.

அவ்வாறே சிறிய தொழில் முயற்சியாளர்களை வலுவடையச் செய்யும் நோக்கில் சணச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கனடா வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துதல் மற்றும் அதன் மூலம் சுதந்திரமான நீதிமன்றத்தினை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களினால் கனடா வெளியுறவு அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துதல் மற்றும் காணாமற் போனோர் பற்றிக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி அவர்கள் விளக்கிக் கூறினார்.

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வர, கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கே.ஏ.ஜவாட் (K.A Jawad) இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷேலி விட்டின் (Shelley Whiting) உள்ளிட்ட கனடா நாட்டு பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டனர்.